Published : 08 May 2014 01:32 PM
Last Updated : 08 May 2014 01:32 PM

ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஏசு தரிசனம்

யதுலால் மல்லிக் என்பவரின் தோட்ட வீடு தட்சிணேசுவரக் கோயிலுக்குத் தெற்கே அமைந்திருந்தது. உலவுவதற்காக அவ்வப்போது குருதேவர் அங்கு சென்று வருவதுண்டு. குருதேவரை முதன்முறை பார்த்ததிலிருந்தே, யதுலாலுக்கும் அவரது தாய்க்கும் அவர் மீது மிகுந்த பக்தி உண்டாயிற்று. அதனால் அவர்கள் இருவரும் வீட்டில் இல்லாதபோதுகூட, குருதேவர் சென்றால் வேலைக்காரர்கள் வரவேற்பறையைத் திறந்து அங்கு அமர்ந்து ஓய்வெடுக்கும்படி அவரைக் கேட்டுக்கொள்வார்கள்.

வரவேற்பறையின் சுவரில் அழகிய சித்திரங்கள் மாட்டப்பட்டிருந்தன. அவற்றுள் ஒன்று, குழந்தை ஏசு தன் தாயின் மடியில் அமர்ந்திருக்கும் காட்சி. ஒருநாள் குருதேவர் அந்தச் சித்திரத்தைக் கூர்ந்து நோக்கியவாறே, ஏசுவின் சீரிய வாழ்வைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தார். திடீரென அந்தச் சித்திரம் உயிர்பெற்று ஒளிர்வது போலாயிற்று. சித்திரத்திலிருந்த அந்த அற்புத அன்னை, பிள்ளை இருவரின் உடலிலிருந்தும் ஒளிக்கதிர்கள் வெளிவந்து குருதேவருள் புகுந்து அவரது மனபாவனையை அடியோடு மாற்றிவிட்டது.

பிறப்பிலிருந்து தமது உள்ளத்தில் பதிந்திருந்த இந்து நெறிமுறைகள் அனைத்தும் உள்ளத்தின் ஒரு மூலைக்குத் தள்ளப்பட்டு, வேறான ஏதோ நியமங்கள் மனத்துள் உதயமாவதை அவர் உணர்ந்தார். அவற்றைக் கட்டுப்படுத்த எவ்வளவோ முயன்றார். இயலாத நிலையில் அன்னையிடம், அம்மா, என்ன ? என்று கதறினார். எந்தப் பயனும் இல்லை, வேறுபட்ட அந்த எண்ண அலைகள் தீவிர வேகத்துடன் எழுந்து இந்து நியமங்களை உள்ளத்திலிருந்து ஒரேயடியாக அகற்றிவிட்டன.

இதன்பலனாக, இந்து தெய்வங்கள் மீது அவருக்கிருந்த அன்பும் பக்தியும் எங்கேயோ மறைந்து ஏசுவிடமும் அவர் காட்டிய நெறியிலும் ஆழ்ந்த நம்பிக்கையும் மதிப்பும் தோன்றின. தேவாலயத்தில் ஏசுவின் திருவுருவின் முன் கிறிஸ்தவப் பாதிரிகள் தூபமும் மெழுகுவர்த்தியும் சமர்ப்பிப்பதும் மனமுருகிப் பிரார்த்தனை செய்வதும் அவர் கண்முன் தோன்றின.

தட்சிணேசுவரக் கோயிலுக்குத் திரும்பிவந்த பின்னரும் குருதேவரின் மனம் அந்த நினைவுகளில் ஆழ்ந்திருந்தது. கோயிலுக்குச் சென்று அன்னை காளியைப் பார்ப்பதைக்கூட அடியோடு மறந்துவிட்டார். அந்தப் புதிய பாவனை அலைகள் தொடர்ந்து மூன்று நாட்கள் அவரை ஆட்கொண்டிருந்தன. மூன்றாவது நாள் பஞ்சவடியில் உலவிக் கொண்டிருந்தார். அப்போது கண்ணைக் கவர்கின்ற வெண்ணிறம் கொண்ட அற்புதமான தேவ மனிதர் ஒருவர் தம்மை உற்று நோக்கியபடி வருவதைக் கண்டார். அவரைப் பார்த்தவுடன் அவர் ஓர் அன்னிய நாட்டினர், அன்னிய இனத்தினர் என்பதை அறிந்துகொண்டார் சாந்தம், குடிகொண்டிருந்த அந்த தேவமனிதரின் கண்கள் அவருக்குச் சிறப்பான அழகைக் கொடுத்தன. மூக்கு சிறிது தட்டையாக இருந்தபோதிலும், அது அவரது அழகை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. அமைதியான அவரது முகத்தில் மிளிர்ந்த தெய்வீக ஒளியால் கவரப்பட்ட குருதேவர் அவர் யாராக இருக்கக்கூடும் என்று சிந்தித்தார். அந்தத் தேவமனிதர் அதற்குள் குருதேவரை நெருங்கிவிட்டிருந்தார். அப்போது குருதேவரின் உள்ளம் ஏசு கிறிஸ்து, மனித குலத்தின் துயரைத் தீர்ப்பதற்காக தனது இதயத்தின் உதிரத்தைச் சொரிந்தாரோ மனித குலம் இழைத்த இன்னல்கள் அனைத்தையும் தாங்கிக்கொண்டாரோ அந்த இறைமகன், உயர்ந்த ஃயோகி, அன்பு வடிவமான ஏசு கிறிஸ்து என்று கூவியது. ஏசு கிறிஸ்துவும் குருதேவரை நெருங்கி வந்து அவரைத் தழுவியபடியே அவர் உடலினுள் கலந்துவிட்டார். பரவச நிலையை அடைந்த குருதேவர் புற நினைவிழந்த நிலையில் சகுண பிரம்மத்தில் ஒன்றிவிட்டார்! இவ்வாறு ஏசுவின் காட்சி பெற்ற குருதேவர் அவர் ஓர் அவதார புருஷர் என்பதில் ஐயம் நீங்கப் பெற்றார்.

நூல் : பகவான் ராமகிருஷ்ணரின் ஆன்மிக சாதனைகளும் உபதேசங்களும்

வெளியீடு:

மனோரா பப்ளிகேசன்ஸ்,

விலை: ரூ.80/-

தொலைபேசி: 9444149835

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x