ஆன்மிக ஞானிகள் : கவி வேமனா - விதைகளைத் தங்கமணி ஆக்கிய யோகி

ஆன்மிக ஞானிகள் : கவி வேமனா - விதைகளைத் தங்கமணி ஆக்கிய யோகி
Updated on
1 min read

எளியவர்களுக்கும் பயன்படும் வகையில் பல்லாயிரம் கவிதைகளைத் தெலுங்கில் எழுதியவர் வேமனா. இந்த வேமனாவின் பூர்வாங்க சரித்திரம் இன்னும் திட்டவட்டமாகத் தெரியாவிட்டாலும், இன்றும் இவரது பாடல்கள் கொடிகட்டிப் பறக்கக் காரணம் யோகி வேமனா என்ற தெலுங்குத் திரைப்படம்தான். ஆந்திரத்தில் தாழ்த்தபட்ட மக்களிடையே இவரது பாடல்கள் மிகப் பிரபலம். தமிழிலும் இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாகியுள்ளது. ஒருமுறை தும்பட்டி காய்களை விதைத்தார் வேமனா. இக்காய் எளிதாகக் கிடைக்கக்கூடிய காட்டுக்காய். இதற்குப் போய் உழைக்க வேண்டிய அவசியம் என்ன என்று ஊரார் கேலி பேசினர். விவசாயத்தில் காய்களும் நன்கு விளைந்தன. இதனை அறுவடை செய்ய ஊராரை அழைத்தார் வேமனா. கேலி பேசியவர்கள் அனைவரும் விலக, ஒரு சிலரே வேலைக்கு வந்தனர். அவர்களுக்குக் கூலியாகத் தும்பட்டிக் காய்களையே அளித்தார் வேமனா. அதில் அவர்களுக்கு மனம் திருப்தியுறா விட்டாலும், வேறு வழியின்றி வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். தும்பட்டிக் காய்களில் ஏராளமாய்ச் சிறிய விதைகள் உண்டு. சமைப்பதற்காக இந்தத் தும்பட்டிக் காய்களில் ஒன்றை, கூலியாகப் பெற்ற ஒரு விவசாயி நறுக்க, அக்காயிலிருந்து பொன் விதைகள் கொட்டின. திகைத்துப் போனா அவர், தனக்குக் கூலியாகக் கிடைத்த அனைத்துக் காய்களையும் நறுக்க, பல மரக்கால்களில் அளந்து குதிரில் கொட்டி வைக்கும் அளவுக்குப் பெருகின. ரசவாதி வேமனா இதனையறிந்த அக்கம்பக்கத்தினர், தாங்களும் வேமனா தோட்டத்தில் வேலை செய்ய முட்டி மோதினர். அனைவருக்கும் வேமனா வேலையும் கொடுத்தார். கூலியும் கொடுத்தார். ஊரார், வீட்டிற்குச் சென்று கூலியாகப் பெற்ற தும்பட்டிக் காய்களை நறுக்க பொன் மணிகளாய் கொட்டின. அதே தோட்டத்தில் இருந்து திருடிய காய்களை நறுக்கியபொழுது, புழுக்களாய்க் கொட்டின. வேமனா ஒரு ரசவாதி என்று ஊரார் அறிந்தனர். `பாலால் கழுவினாலும் கரி வெள்ளை ஆகுமா?`, `நாயின் வாலைப் பிடித்துக் கொண்டு வெள்ளப் பெருக்கெடுக்கும் கோதாவரியைக் கடக்க முடியுமா?` போன்ற இவரது கவிதையின் அற்புதமான வரிகள் இன்றும் மக்கள் மனதில் ரசவாதம் ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in