Last Updated : 21 Oct, 2020 01:48 PM

 

Published : 21 Oct 2020 01:48 PM
Last Updated : 21 Oct 2020 01:48 PM

 கோவையின் பச்சை நாயகி... பாவமெல்லாம் தீர்ப்பாள்!  மங்கல வாழ்வு தருவாள்; மங்காத செல்வம் தருவாள்! 

பேரூர் அரசி மரகதவல்லியை, பச்சை நாயகியம்மனை மனதாரத் தரிசிப்பதும் பிரார்த்தனை செய்வதும் மங்கல வாழ்வு தரும். மங்காத செல்வம் தந்தருளும் என்கிறார்கள் பக்தர்கள். நம் பாவமெல்லாம் பறந்தோடும். முக்தி நிச்சயம் என்பது ஐதீகம்!

கோவையில் புராதன - புராணப் பெருமைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்கிறது பட்டீஸ்வரர் திருத்தலம். கோவையில் பேரூர் எனும் பகுதியில் அமைந்திருக்கும் பட்டீஸ்வரர் திருக்கோயில், கரிகாற் சோழனால் கட்டப்பட்டது என்கிறது என்றும் இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆலயம் என்றும் விவரிக்கிறது ஸ்தல வரலாறு.
சுந்தரர் பெருமான், 9ம் நூற்றாண்டில் இந்தத் தலத்துக்கு வந்து இறைவனைத் தரிசித்தார். மெய்யுருகி தேவாரப் பாடல்கள் பாடிப் பரவசம் அடைந்தார். கலையம்சங்களுடன் சிற்ப பிரமாண்டங்களுடன் அற்புதமாகத் திகழ்கிறது ஆலயம்.

இதன் பிறகு முதலாம் ராஜராஜ சோழன் காலத்தில், அர்த்தமண்டபமும் மகா மண்டபமும் கட்டப்பட்டன. மேலும் ஏராளமான நிதிகள் கோயிலுக்காகவும் பூஜைக்காகவும் நிர்வாகப் பணிகளுக்காகவும் வழங்கப்பட்டுள்ளன. இதைக் குறிக்கும் கல்வெட்டுகள் இன்றைக்கும் உள்ளன.

பேரூர் தலத்தின் இறைவன் ஸ்ரீபட்டீஸ்வரர். அம்பாளின் திருநாமம் பச்சை நாயகியம்மன். அதாவது மரகதவல்லி அம்பாள். தட்சிண கயிலாசம், தவசித்திபுரம், ஞானபுரம், தேனுபுரம், பசுபதிபுரம், ஆதிபுரி, பிறவா நெறித்தலம் என இந்தத் தலம் குறித்து பல பெயர்கள் புராணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

காமதேனுப் பசுவானது, சிவ பூஜை செய்து வரம் பெற்ற திருத்தலம் இது. பக்தர்களுக்கு முக்தி அருளுவதற்காக, சிவனார் இங்கேயே கோயில் கொண்ட புண்ணிய பூமி. பிரம்மா தவமிருந்து வழிபட்ட தலம் இது எனும் பெருமையும் உண்டு. மகாவிஷ்ணு ஈசனை நோக்கி தவமிருந்த திருத்தலம் இது எனும் சிறப்பும் இந்தத் தலத்துக்கு உண்டு. காலவ முனிவர் பன்னெடுங்காலம் தவமிருந்த புனிதத் திருத்தலம் இது. இவர்களின் தவத்துக்கு இணங்கி, சிவபெருமான் ஆனந்தத் தாண்டவத்தை நிகழ்த்திக் காட்டினார்; திருக்காட்சி தந்தருளினார் என்கிறது ஸ்தல புராணம்.

கச்சியப்ப முனிவர் இந்தத் தலத்தின் அம்பாளை மனமுருக பாடியிருக்கிறார்.

கங்கை நதி சடைக்கரந்த கணவனார் உருக்கலந்த தனக்கே அல்லால்
துங்கமணிக்கோடு இரண்டு ஆயிரம் படைத்தகரி எவர்க்கும் தூண்டல் முற்றாது
அங்கண்நெடும் புவனத்து என்று அமைந்தனள் போல்பாசமோடு அங்குசம் கையேந்தும்
மங்கலம் மிக்கருள் பேரூர் மரகதவல்லியின் இருதாள்வனசம் போற்றி

என்று துதி பாடியுள்ளார்.

இங்கே பத்மபீடத்தில் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள் மரகதவல்லி அம்பாள். வலது திருக்கரத்தில் நீலோத்பவ மலரும் இடது திருக்கரத்தில் டோல ஹஸ்தமும் கருணைப் பார்வையால் நம்மையெல்லாம் பார்த்து அருளிக்கொண்டிருக்கிறாள் மரகதவல்லி அம்பாள்.

செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் நவராத்திரி காலங்களிலும் ஆடி மாதத்திலும் பேரூர் அரசி மரகதவல்லியை, பச்சை நாயகியம்மனை மனதாரத் தரிசிப்பதும் பிரார்த்தனை செய்வதும் மங்கல வாழ்வு தரும். மங்காத செல்வம் தந்தருளும் என்கிறார்கள் பக்தர்கள். நம் பாவமெல்லாம் பறந்தோடும். முக்தி நிச்சயம் என்பது ஐதீகம்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x