

சரஸ்வதி பூஜையன்று சண்டி பூஜை செய்வதும் அந்த பூஜை எங்கு நடந்தாலும் அதில் கலந்துகொள்வதும் ரொம்பவே சக்தி வாய்ந்தது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
சிவனுக்கு ஒரு ராத்திரி, அம்பிகைக்கு நவராத்திரி என்பார்கள். நவராத்திரி என்பது பெரும்பாலும் புரட்டாசி மாதத்தில் வரும். இந்த முறை ஐப்பசியில் வந்துள்ளது. ஐப்பசி மாதமும் மகத்துவம் நிறைந்த மாதம்தான்.
நவராத்திரி ஒன்பது நாளும் அம்பிகையைக் கொண்டாடவேண்டும். பெண் குழந்தைகளையும் சுமங்கலிகளையும் அம்பாளாகவே பாவித்து வீட்டுக்கு அழைத்து மங்கலப் பொருட்கள் வழங்குவது சுபகாரியங்களை தடையின்றி நடத்தி வைக்க வல்லது.
இந்த ஒன்பது நாளும் கொலு வைப்பதும் புண்ணிய. கொலுவை தரிசிப்பதும் புண்ணியம். ஆகவே கொலு வைப்பவர்கள் வீடுகளுக்குச் சென்று பிரார்த்தனை செய்வது இல்லத்தில் நல்ல நல்ல சத்விஷயங்களை நடத்தி அருளும் என்பது ஐதீகம்.
சரஸ்வதி பூஜை என்பதும் விஜய தசமி என்பதும் மகா சக்தியையும் இல்லத்தில் சாந்நித்தியத்தையும் கொடுக்கும். அதேபோல் சரஸ்வதி பூஜை நாளில், சண்டி பூஜை செய்வது நூறு மடங்கு பலன்களைத் தரும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
சண்டி என்பவள் மூன்று சக்திகளும் ஒன்றிணைந்த வடிவம். இந்த சக்தியை நினைத்து செய்யப்படுவதுதான் சண்டி ஹோமம். எவரொருவர் சண்டி ஹோமத்தைச் செய்தாலோ அல்லது சண்டி ஹோமத்தில் கலந்து கொண்டாலோ சகல தோஷங்களில் இருந்தும் விடுபடலாம். தீய சக்திகளில் இருந்தும் எதிரிகளிடம் இருந்தும் தப்பித்து, வெல்லலாம் என்பது ஐதீகம்.
விஜயதசமி நன்னாளில், அன்னை சரஸ்வதிதேவிக்கு பூஜைகள் செய்து, ஆராதித்து வழிபடுவது விசேஷம். அத்துடன் சண்டி ஹோமத்தையும் செய்வது, இன்னும் இன்னுமான சௌபாக்கியங்களையும் தரும். ஐஸ்வரியங்களை அள்ளிக் கொடுக்கும்.
வீட்டில் உள்ள குழந்தைகள் கல்வி கேள்வியில் சிறந்து விளங்குவார்கள். கணவன்மார்களுக்கு நல்ல உத்தியோகமும் பதவி உயர்வும் கிடைக்கும். தடைப்பட்ட திருமணம் பெண்களுக்கு நடந்தேறும். கடன் தொல்லையில் இருந்து நிவாரணம் பெறுவோம்.