

இசையால் இறைவனை வசமாக்கலாம் என்பார்கள். வழிபாடுகள் இறைவனை வசப்படுத்துவதற்காகத்தான் செய்யப்படுகின்றன. இறைசக்திக்குச் செய்யப்படும் ஆராதனைகள்தான் நமக்கு அங்கிருந்து வெளிப்பட்டு, நமக்குள் ஒரு சக்தியைக் கொடுக்கின்றன. இறைவனுக்குச் செய்யப்படுகிற பூஜைகள்தான், இறைசக்தியை நம் இல்லத்திலும் உள்ளத்திலும் வியாபிக்கச் செய்கின்றன. அப்படியான வழிபாட்டை சரஸ்வதிதேவிக்குச் செய்யும் அற்புதமான திருநாள்தான் விஜயதசமி நன்னாள்.
நவராத்திரி என்பது அம்பாளைக் கொண்டாடுவதற்கான நாட்கள். சிவனுக்கு ஒரு ராத்திரி, அம்பிகைக்கு நவராத்திரி என்பார்கள். அம்பாள்தான் சக்தி. அந்த பிரபஞ்ச சக்தியைக் கொண்டாடுவதற்கு ஒன்பது நாட்கள் அளித்திருக்கின்றன புராணங்களும் சாஸ்திரங்களும்!
* கும்பகோணம்- காரைக்கால் சாலையில் உள்ள கூத்தனூர் திருத்தலத்தில் சரஸ்வதிக்கு தனிக் கோயில் உள்ளது. இங்கு தவக்கோலத்தில் வெள்ளைத் தாமரையில் பத்மாசன கோலத்தில் அமர்ந்து ஞானசொரூபமாகக் காட்சி தருகிறாள் சரஸ்வதி.
* மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தூண் ஒன்றில் சரஸ்வதியின் திருவுருவம் நின்ற நிலையில், கையில் வீணையுடன் உள்ளது. அற்புதச் சிற்பம்.
* வேதாரண்யம் திருத்தலத்தில் சரஸ்வதி தேவியை தரிசிக்கலாம். இங்கே இன்னொரு சிறப்பு... சரஸ்வதி தேவியின் திருக்கரத்தில் வீணை கிடையாது. யாழைப் பழித்த மொழியாள் எனும் திருநாமம் கொண்ட அம்பிகையை நோக்கி சரஸ்வதி தவக் கோலத்தில் காட்சி தருகிறாள்.
* தஞ்சாவூர்- திருவையாறு சாலையில் உள்ளது திருக்கண்டியூர் திருத்தலம். இங்கே உள்ள சிவனாரின் திருநாமம் பிரம்மசிரகண்டீஸ்வரர். இந்த ஆலயத்தில் நான்கு திருக்கரங்கள் கொண்ட சரஸ்வதி தேவி, பிரம்மாவுடன் இணைந்து காட்சி தருகிறாள். அற்புதமான திருக்கோலம் என சிலிர்ப்புடன் தெரிவிக்கிறார்கள் பக்தர்கள்.
* திருச்சிக்கு அருகில் பழைய சமயபுரம் டோல்கேட்டுக்கு அருகில், நொச்சியம் செல்லும் வழியில் உள்ளது உத்தமர் கோயில். இங்கே, சிவா, விஷ்ணு, பிரம்மா மூவரும் குடிகொண்டுள்ளனர். மும்மூர்த்திகளும் அருள்பாலிக்கும் கொண்ட திருத்தலத்தில், பிரம்மா சந்நிதிக்கு இடப் புறம் சரஸ்வதி தேவிக்குத் தனிச் சந்நிதி உள்ளது. அட்சமாலையும், ஓலைச் சுவடியும் ஏந்தி அபய- வரத முத்திரை தாங்கி, தெற்கு திசை நோக்கி சுகாசனக் கோலத்தில் கலைமகள் அருள் புரிகிறாள். கையில் வீணை இல்லாத திருக்கோலம். ஞானசரஸ்வதி என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.
* கங்கை கொண்ட சோழபுரம், திருக்கோடிக்காவல் ஆகிய திருத்தலங்களிலும், சரஸ்வதி தேவி திருக்கரத்தில் வீணை இல்லாமல் அருள் புரிகிறாள்.
* காஞ்சி கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் சரஸ்வதிக்குத் தனிச் சந்நிதி உண்டு. இவளை ஸ்ரீலலிதா திரிபுர சுந்தரியின் படைத் தலைவிகளில் ஒருத்தியான சியாமளா தேவி சொரூபமாக வணங்குவதாக ஐதீகம். இந்த சரஸ்வதி எட்டுக் கரங்களுடன் காட்சி தருகிறாள். வீணை, கிளி, பாசம், அங்குசம், குயில், மலரம்பு, கரும்பு, வில் முதலானவற்றை ஏந்தியபடி திருக்காட்சி தருகிறாள்.
கலைமகளை விஜயதசமி நன்னாளில் ஆராதித்து அழைப்போம். கலைமகள் வருவாள்... கல்விச் செல்வம் அனைத்தும் அருளுவாள்!