

காரைக்கால் மாவட்டம், வரிச்சிக்குடியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான வரதராஜப் பெருமாள் அகத்தீஸ்வர சுவாமி தேவஸ்தானத்துக்குட்பட்ட ஞானாம்பிகை சமேத அகத்தீஸ்வர சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவுக்காக, இன்று (அக்.18) பாலாலயம் நடைபெற்றது.
சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில், கட்டுமானங்கள் இடிந்து மிகவும் சிதிலமடைந்த நிலையில் பல ஆண்டுகளாக காணப்படுகிறது. இதனால் தேவஸ்தான வாரிய நிர்வாகிகளும், அப்பகுதி மக்களும் கோயிலை புதிதாக நிர்மாணிக்க முடிவு செய்தனர்.
அதன்படி, விநாயகர், வள்ளி தேவசேனா சுப்ரமணியர், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், நவக்கிரஹம், சூரியன், சந்திரன், பைரவர் கோஷ்ட தெய்வம், தெட்சணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்கை, அகத்தீஸ்வரர், ஞானாம்பிகை ஆகிய தெய்வங்களுக்கு சிவாகம சில்பசாஸ்திர முறைப்படி புதிதாக ஆலயம் அமைத்து குடமுழுக்கு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் முதற்கட்டமாக இன்று (அக். 18) பாலாலயம் நடத்தப்பட்டது. இதையொட்டி, நேற்று மாலை தேவதா அனுக்ஞை, மகா சங்கல்பம், வாஸ்து சாந்தி, கலச பூஜை நடைபெற்றது. இன்று காலை விநாயகர் வழிபாடு, யாகசாலை பூஜை, திருவியாஹூதி, பூர்ணாஹுதி, பாலாலய கும்பாபிஷேக அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, பாலாலய பிரதிஷ்டை நடைபெற்றது.
இந்நிகழ்வில் நெடுங்காடு சட்டப்பேரவை உறுப்பினர் சந்திர பிரியங்கா, தேவஸ்தான அறங்காவல் வாரிய தலைவர் எல்.கண்ணன்(எ)வெங்கடாச்சலம், நிர்வாகிகள் சி.சங்கரன், சுரேஷ்(எ)பக்கிரிசாமி, எம்.ஆறுமுகம்(எ)முனுசாமி, வி.சுதர்சன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மாரிமுத்து, கிராம முக்கியஸ்தர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சுமார் ரூ.80 லட்சம் மதிப்பில், ஓர் ஆண்டு காலத்துக்குள் கோயிலை கட்டி முடிக்க உத்தேசித்துள்ளதாக அறங்காவல் வாரிய நிர்வாகிகள் தெரிவித்தனர்.