

மேரி மக்தலினா ஒருமுறை ஏசுவைக் காண ஒரு விலையுயர்ந்த வாசனைத் திரவியத்தோடு வந்தார். வாசனைத் திரவியக் குப்பியைத் திறந்து ஏசுவின் கால்களில் மிகுந்த பிரியத்துடன் ஊற்றிக் கழுவினாள்.
ஏசுவின் அருகிலிருந்த யூதாஸ், “இது சரியானதல்ல. கால்களில் விலையுயர்ந்த வாசனைத் திரவியத்தை ஊற்றுவதை நீங்கள் தடுத்திருக்க வேண்டும். இந்தப் பணத்தை வைத்து மொத்த நகரத்து ஏழைகளுக்கும் உணவளித்திருக்க முடியும்” என்றார்.
அது சரிதானே. ஏன் இத்தனை விலையுயர்ந்த திரவத்தை வீண்டிக்க வேண்டும். ஒருவரின் பாதங்களைக் கழுவுவதற்கு தண்ணீ்ரே போதுமே. யூதாஸின் வாதத்துக்கு ஏசு என்ன பதிலளித்தார்.
“ஆமாம் யூதாஸ். ஏழைகள் உன்னுடனேயே இருப்பார்கள். ஆனால் நான் உன்பக்கம் இல்லை. நான் போன பிறகு நீ ஏழைகளுக்கு உணவளிக்கலாம். ஆனால் மக்தலினாவை நான் நிறுத்த மாட்டேன். நீ அவள் கொண்டுவந்த வாசனைத் திரவியத்தின் விலையை மட்டும்தான் பார்த்தாய். நான் அவளது இதயத்தைப் பார்த்தேன். அவளிடம் நான் வேண்டாமென்று மறுக்க முடியாது. ஆழமான நேசத்தில், அபரிமிதமான பாசத்தில், எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் அவள் என் கால்களில் வாசனைத் திரவியத்தை ஊற்றிக்கழுவுகிறாள். நான் அதை மறுக்கவே முடியாது” என்றார் ஏசு.
நான் ஏசுவுடன் உடன்படுகிறேன். அவருக்கு இதயத்தின் மொழி தெரியும்.