

ஐப்பசி மாதப் பிறப்பில், முன்னோரை வணங்குவோம். தர்ப்பணம் செய்து அவர்களை ஆராதிப்போம்.
புரட்டாசி மாதம் நிறைவுற்று, ஐப்பசி மாதம் நாளைய தினம் 17ம் தேதி சனிக்கிழமை அன்று பிறக்கிறது. ஒவ்வொரு அமாவாசையும் முன்னோருக்கான நாட்கள். நம் பித்ருக்களை நாம் வணங்குவதற்கான நாட்கள். அமாவாசையில் நம் முன்னோர்களை வணங்கினால், அவர்களின் ஆசியைப் பெறலாம் என்பது ஐதீகம்.
அதேபோல், ஒருவருடத்துக்கு மொத்தம் 96 தர்ப்பணங்கள் உள்ளன என அறிவுறுத்துகிறது சாஸ்திரம். இந்த 96 தர்ப்பணங்களையும் தவறாமல் செய்பவர்கள் இல்லத்தில் சந்ததிக் குறைபாடு இருக்காது. சந்தோஷத்துக்குப் பஞ்சமிருக்காது. உரிய வயதில் மங்கல காரியங்கள் நடந்தேறும் என்பது நம்பிக்கை.
முன்னோர் வழிபாட்டை, ஒவ்வொரு தமிழ்மாதப் பிறப்பிலும் செய்யவேண்டும். அந்தநாளில், முன்னோருக்கான தர்ப்பணங்களைச் செய்யவேண்டும். முன்னோர்களின் பெயர்களையும் கோத்திரத்தின் பெயரையும் சொல்லி மூன்று முறை எள்ளும் தண்ணீரும் விடவேண்டும்.
கோத்திரம் தெரியாதவர்கள் சிவ கோத்திரம் என்றோ விஷ்ணு கோத்திரம் என்றோ பொதுவாகச் சொல்லியும் தர்ப்பணம் செய்யலாம். பின்னர், முன்னோர் படங்களுக்கு பூக்களிட்டு, அவர்களுக்குப் பிடித்த உணவைப் படைத்து வழிபடலாம்.
நம் வீட்டில் உள்ள கவலைகளையும் வருத்தங்களையும் கஷ்டங்களையும் நஷ்டங்களையும் நம்முடைய முன்னோர் படங்களுக்கு முன்னே அமர்ந்துகொண்டு, வேண்டிக்கொள்ளலாம்.
சனிக்கிழமையில் மாதப் பிறப்பு வருவதும் முன்னோர் வழிபாடுகளை அன்றைய தினத்தில் செய்வதும் கூடுதல் விசேஷமானது. முன்னோருக்குப் படைத்த உணவை, காகத்துக்கு வழங்கலாம். காகம் என்பது முன்னோராகவும் பார்க்கிறோம். சனீஸ்வரரின் வாகனமாகவும் சொல்கிறது புராணம்.
எனவே காகத்துக்கு உணவிடுவோம். முடிந்தால் இரண்டு பேருக்காவது, நம் முன்னோர்களை நினைத்து, தயிர்சாதம் வழங்கலாம். இந்த அன்னதானத்தால், வீட்டில் இருந்த பணப்பிரச்சினைகள் அகலும். கடன் தொல்லைகள் தீரும். தனம் மற்றும் தானியம் பெருகும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.