

நவராத்திரி என்பது மகாசக்திக்கான காலம். சிவனாருக்கு ஒரு ராத்திரி... அது சிவராத்திரி. அம்பாளுக்கு ஒன்பது ராத்திரி... அவை நவராத்திரி என்று சொல்லுவார்கள்.
சக்தியும் சாந்நித்தியமும் மிக்க நவராத்திரி காலங்களில், அம்பாள் வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் நினைத்தது நடக்கும். எண்ணிய காரியத்தை ஈடேற்றித் தந்தருள்வாள் அம்பாள்.
பகவான் ஸ்ரீராமபிரான் நவராத்திரி விரதத்தை கடைபிடித்தார். பூஜித்து வழிபட்டார். இதன் பின்னர்தான், அவருக்குச் சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று தேவி பாகவதம் விவரிக்கிறது.
ஸ்ரீராமர், விஷ்ணு, பிரம்மா, விஸ்வாமித்திரர், காளிதாசர், அபிராமி பட்டர், வனவாச காலத்தில் பாண்டவர்கள் முதலானோர் நவராத்திரி பூஜைகள் செய்து, விரதம் மேற்கொண்டார்கள். அம்பிகையை ஆராதித்தார்கள். அம்பிகையின் அருளுக்குப் பாத்திரமானார்கள் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.
நவராத்திரி காலமொன்றில்தான் உமையவள் ஊசி மேல் தவமிருந்து சிவ வழிபாடு செய்தாள் என்கிறது புராணம். அதனால் அந்தச் சமயங்களில் வீட்டில் கிழிந்த துணிகளைத் தைக்கக் கூடாது. முடிந்தவரைக்கும் ஊசியைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. கிழிந்தவற்றைத் தைக்காமல் இருப்பதே நல்லது.
சரஸ்வதி பூஜையன்று குழந்தைகளின் பாடப் புத்தகங்களை, பேனா, பென்சிலை, கல்வி உபகரணங்களை வைத்து, அதன் மீது நெல்லித்தழை, மாங்கொழுந்து, மலர்கள், அட்சதை தூவி, தூப தீபம் காட்டி, பழம், பாயசம், நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
நவராத்திரி எனும் பண்டிகை, உறவுகளுக்குள்ளேயும் தோழமைகளுக்குள்ளேயும் அன்பை வளர்க்கும் விஷயமாகவும் பார்க்கப்படுகிறது. கொலு நாட்களில், வீட்டுக் குழந்தைகளைக் கொண்டு, கொலு பார்க்க, மாலை வேளைகளில் வந்தவர்களை வரவேற்று உபசரிக்கப் பழக்குங்கள். இவையெல்லாம் குழந்தைகளிடம் நல்ல பழக்கங்களை ஏற்படுத்தும். பண்பை மேம்படுத்தும். மரியாதையையும் ஒழுக்கத்தையும் தரும் என்கிறார்கள். மனிதநேயத்தையும் வளர்க்கும் என்கிறார்கள்.
முக்கியமாக, நவராத்திரியின் ஒன்பது நாட்களும் ஏழைகளுக்கு அன்னதானம் செய்து, பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் தாம்பூலம் மற்றும் இனிப்புகள் வழங்கினால் உறவுகளுக்குள்ளும் அக்கம்பக்கத்திலும் நல்ல இணக்கம் ஏற்படும். அன்பு மேம்படும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
நவராத்திரிப் பெருவிழாவில் யார் வீட்டில் கொலு வைத்திருந்தாலும் அந்த கொலுவைப் பார்த்து ரசிப்பதும் வேண்டிக்கொள்வதும் மகத்தான பலன்களைத் தந்தருளும் என்பது உறுதி.