

கன்னியாகுமரியில் இருந்து மேற்கே சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது இலந்தையடிவிளை. ஒரு காலத்தில் இந்த ஊர் இலந்தை மரங்கள் அதிகம் சூழ்ந்த இலந்தை மர வனமாக இருந்ததால் இப்பெயர் பெற்றது. தற்போது ஒரே ஒரு இலந்தை மரம் மட்டும் இன்றும் அழியாமல், காலங்கள் பல் கடந்தும் இத்திருகோயிலின் தென் மேற்கில் சிறிது தொலைவில் உள்ளது. இங்கு முத்தாரம்மன் எழுந்தருளி மக்களைக் காத்து அருள் புரிந்து வருகிறாள். அமர்ந்த கோலத்தில் வடக்கு பார்த்த வண்ணம் அருள் பாலிக்கிறாள்.ஆடிப்பூரம் அன்று அபிஷேகம் நடைபெறுகிறது. கருவறை தீபத்தில் சந்தனாதி தைலம் சேர்த்து வழிபட்டால் அனைத்து விதமான நவக்கிரக தோஷங்களும் அகலும். நவக்கிரக நாயகியாய் முத்தாரம்மன் திகழ்கிறாள். கருவறையில் அம்மனுடன் அரூபமாக வண்டி மலையான்,வண்டி மலைச்சி அம்மன், வீரபத்திரர் ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள். முத்தாரம்மனின் கருவறை வாசலின் இருபுறமும் துவார பாலகர்களாக பைரவரும், பூத வேதாள கணமும் காவல்புரிந்து அருள்செய்கின்றனர். திருக்கயிலையில் ஈசனின் திருநடனத்திற்கேற்ப இசைக் கருவிகளை மீட்டிப் பாடுபவை பூத வேதாள கணங்கள்.
பைரவர் பரிகாரம்
மேலும் ஈசன் வேதம் பாட, பூத வேதாளங்கள் ஆடுமாம். வேதாளங்கள், பைரவருக்கு மட்டுமே கட்டுப்பட்டவை. சக்தி பீடங்களின் காவலராக சிவபெருமானே பைரவர் வடிவில் எழுந்தருளியிருப்பதாகக் கூறப்படுவதால், சிவாலயங்களில் விளங்கும் பைரவர் சந்நிதியில் செய்யப்படும் பரிகாரங்களைவிட, இத்தலத்தில் பரிகாரம் செய்வது இரட்டிப்புப் பலன்களைப் பெற்றுத்தரும் என்பது நம்பிக்கையாகும். இத்தலத்தில் உள்ள முத்தாரம்மன் சிவ அம்சமாக விளங்குவதால் இங்கு விபூதியே பிரசாதமாகத் தரப்படுகிறது. கோயிலின் உட்பிரகாரத்தில் சாஸ்தா, மகாவிஷ்ணு சந்நிதிகளும், பலிபீடமும் உள்ளன.
சனிக்கிழமையில் தொடர்ந்து எட்டு வாரங்கள் சாஸ்தா, மகாவிஷ்ணுவுக்கு நெய் தீபம் ஏற்றி ஒருங்கே வழிபட்டு வந்தால், வாழ்வில் நற்பேறுகள் கிட்டும் என்பது நம்பிக்கை. முத்தாரம்மன் ஆலயம் கேரளக் கட்டிட அமைப்பில் பழமை மாறாமல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தல வெளிப்பிரகாரத்தில் கிழக்கு பக்கம் மாரியம்மனும், உஜ்ஜைனி மாகாளியும், பலிபீடமும் உள்ளன. வெளிப்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் வரசித்தி விநாயகர் கிழக்கு நோக்கி, தன் அன்னையாம் மூலவரைப் பார்த்த வண்ணம் உள்ளார். இந்த விநாயகருக்கு அபிஷேகம் செய்து, சிதறுகாய் உடைத்து, நெய் தீபம் ஏற்றி தொடர்ந்து, மூன்று சங்கடஹர சதுர்த்தி தினங்கள் வழிபட்டு வர, தடங்கல்கள் அகன்று நல்வழிகள் பிறக்கும் என்பது ஐதீகம்.
வரசித்தி விநாயகரை, ‘சுகப்பிரசவ விநாயகர்’ என்றும் அழைக்கிறார்கள். இவர் தன்னிடம் வேண்டுதல் வைக்கும் கர்ப்பிணிப் பெண்களின் பிரசவம் சுகமாய் அமைந்திட வரமருள்வதால் இந்தப் பெயர் பெற்றுள்ளார். பிரசவ நாட்களில், அவ்வைபிராட்டியின் ‘விநாயகர் அகவல்' படித்து வருவது அதீத பலன் தரும். கோயில் வெளிச்சுற்றில் வடமேற்கு மூலையில் செங்கிடாக்காரன், கால சுவாமி (எமன்), சுடலைமாட சுவாமி சந்நிதிகள் பீட வடிவில் கிழக்கு பார்த்த வண்ணம் அமைந்துள்ளன. கால சுவாமியை எமகண்டத்தில் தீபம் ஏற்றி வழிபட எம பயம், மரண பயம் அகலும், நீண்ட ஆயுள் கிட்டும். எம கண்டத்தில் ‘யம ஸ்துதி' பாராயணம் செய்வது இரட்டிப்பு பலன்களைத் தரும். ஆலய விருட்சங்களாக வேம்பும், அரச மரமும் உள்ளன. திங்கட்கிழமையும், அமாவாசையும் சேர்ந்து வரும் தினத்தில் காலையில் ஒன்பது முறை அரச மரத்தைச் சுற்றி வந்தால் சகல தேவர்களின் அருளும், பதினாறு வகைப் பேறுகளும் கிட்டும். பூச நட்சத்திரக்காரர்களுக்கு இந்த அரச மரம் மிகவும் ராசியானது.
வளம் தரும் வழிபாடு
இலந்தையடிவிளை முத்தாரம்மன் தலத்தில் பைரவர், நாய் வாகனத்துடன் வடக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்கிறார். தொடர்ந்து எட்டு வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி நாட்களின் இரவு வேளையில் பைரவருக்கு புனுகு சாற்றி, மரிக்கொழுந்து மாலை அணிவித்து நெய் தீபமேற்றி வழிபட்டால் நினைத்த காரியங்கள் யாவும் ஈடேறும். பைரவர், சனீஸ்வரரின் குரு, ஆதலால் சனிக்கிழமை மாலை வேளையில், எள் தீபமேற்றி, 8 சனிக்கிழமைகள் தொடர்ந்து வழிபட்டால் சனி தோஷங்களும் நீங்கும்.
அம்பிகை சிவசொரூபமாக அருள்வதால், மகா சிவராத்திரியில் இங்கு நான்கு கால பூஜைகள் உண்டு. தைப் பொங்கல் நாளில் இக்கோயிலில் பெண்கள் முத் தாரம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள்.இவ்வாலயத்தில் கார்த்திகை 30 நாட்கள், பங்குனி உத்திரம், சித்திரைப் பெருவிழா, நவராத்திரி, கந்த சஷ்டி, சிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, ஆடிப்பூரம் ஆகிய திருவிழாக்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. திருக்கார்த் திகை தீப நாளன்று இத்தலத்தில் நள்ளிரவு 12 மணி அளவில் லட்ச தீபம் ஆலயம் முழுவதும் ஏற்றப்படும்.