சுக்கிர வாரத்தில் நவக்கிரக பிரார்த்தனை

சுக்கிர வாரத்தில் நவக்கிரக பிரார்த்தனை
Updated on
1 min read

சுக்கிரவாரம் என்று சொல்லப்படும் வெள்ளிக்கிழமையில், நவக்கிரகத்தை வலம் வந்து பிரார்த்தனை செய்வதும் கிரக தோஷங்களையெல்லாம் போக்கும். சுக்கிர யோகத்தைத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

வெள்ளிக்கிழமை என்பது மங்கலகரமான நாள். இந்தநாளில் வீட்டில் விளக்கேற்றுவதும் வீட்டை தூய்மைப்படுத்துவதும் லக்ஷ்மிகரமான அம்சங்களை உண்டுபண்ணும். அதேபோல், வெள்ளிக்கிழமைகளில், பசுவுக்கு உணவளிப்பதும் நன்மைகளைத் தந்தருளும்.

வெள்ளிக்கிழமையை சுக்கிர வாரம் என்பார்கள். இந்தநாளில், வீட்டில் விளக்கேற்றி, சுக்கிர பகவானுக்கு உரிய காயத்ரியையும் மூலமந்திரத்தையும் ஜபிப்பது சுபிட்சத்தை உண்டுபண்ணும்.

மேலும் வெள்ளிக்கிழமையில் ராகுகாலம் என்பது காலை 10.30 முதல் 12 மணி வரை. பொதுவாகவே, ராகுகாலத்தில் துர்கைக்கும் நவக்கிரகத்துக்கும் விளக்கேற்றுவது தீயசக்திகளிடம் இருந்து நம்மைக் காத்தருளும்.

செவ்வாய்க்கிழமை ராகுகாலம் என்பது மாலை 3 முதல் 4.30 மணி வரை. அதேபோல் ஞாயிற்றுக்கிழமை ராகுகாலமான மாலை 4.30 முதல் 6 மணி வரையிலும் நவக்கிரகத்துக்கு விளக்கேற்றி வழிபடுவார்கள்.

அதேபோல், சனிக்கிழமையில் காலை 9 மணி முதல் 10.30 மணி வரை உள்ள ராகுகால வேளையில், விளக்கேற்றுவது சனி பகவானின் அருளைப் பெற வழிவகுக்கும் என்பது ஐதீகம்.

நாளைய வெள்ளிக்கிழமை இன்னும் விசேஷமானது. புரட்டாசி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை. மேலும் நாளைய தினம் அமாவாசை. வெள்ளிக்கிழமையும் அமாவாசையும் இணைந்து வருகிற அற்புதமான நாள்.

இந்த நாளில், சுக்கிர பகவானை வேண்டுவோம். சுபிட்சம் நிலவவேண்டும் என்று பிரார்த்திப்போம். வெள்ளிக்கிழமை ராகுகாலமான காலை 10.30 முதல் 12 மணிக்குள் ஆலயத்துக்குச் சென்று நவக்கிரகத்தை ஒன்பது முறை வலம் வருவோம். நவக்கிரகத்துக்கு விளக்கேற்றி பிரார்த்தனை செய்வோம்.

மேலும் வீட்டில், ராகுகால வேளையில் விளக்கேற்றி, பூஜை செய்வது தாலி பாக்கியத்தைக் கொடுக்கும். தாலி பாக்கியத்தை நிலைக்கச் செய்யும். மங்கல காரியங்கள் தடையின்றி நடத்திக் கொடுக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in