இளைஞர்கள் பின்பற்ற வேண்டிய கதாபாத்திரம்?

இளைஞர்கள் பின்பற்ற வேண்டிய கதாபாத்திரம்?
Updated on
1 min read

வாரத்தின் இறுதி நாள்கூட இல்லை. ஆனாலும் மாணவர்களும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் திரளாகக் கூடியிருந்தார்கள். பன்னாட்டு லயன்ஸ் சங்கமும், சிகரம் இளைஞர் நல்வாழ்வுச் சங்கமும் இணைந்து சென்னை குரோம்பேட்டையில் மாணவர் கம்பர் விழாவை அண்மையில் நடத்தின.

கம்ப ராமாயணத்தின் இனிமையைப் பள்ளி, கல்லூரி மாணவர்களைக் கொண்டே வெளிப்படுத்தும் நிகழ்ச்சி இது. இந்நிகழ்வில் பள்ளி மாணவர் அரங்கம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தற்போது இளைஞர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ராமாயணக் கதாபாத்திரங்கள் என்னும் தலைப்பில் ஐந்து மாணவிகள் பேசினார்கள்.

அன்பை வெளிப்படுத்தும் குகன்

இன்றைய இளைஞர்கள் யாரைத் தங்களின் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும்? ராமாயண பாத்திரம் குகனை என்று கூறினார் மாணவி விஷ்ணுப்ரியா. வேடர் குலத் தலைவனான குகனின் எதிர்பார்ப்பில்லாத அன்பில் ராமன் நெகிழ்ந்தார். குகன் ராமனோடு புறப்பட்டபோது, அவனைத் தடுத்த ராமன், “உன் சுற்றம் என் சுற்றம் அல்லவா? உன்னுடைய தேவை இவர்களுக்குத் தேவை. நீ இங்கேயே இருந்து இவர்களைக் காப்பாயாக” என்கிறார். அடுத்தவர்களின்மீது தன்னலமற்ற அன்பை வெளிப்படுத்தும் குகனின் பாத்திரத்தையே இன்றைய இளைஞர்கள் பின்பற்ற வேண்டும் என்றார்.

விபீஷணனை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என சிநேகாவும், அனுமனை எடுத்துக்காட்டாகக் கொள்ள வேண்டும் என கீர்த்தனாவும், பரதனை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என ஜெயயும் பேசினார்கள்.

ராமாயணத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் ராமன் சிலரை ஆரத்தழுவித் தன்னுடைய அன்பை வெளிப்படுத்துகிறான். ஆனால் அனுமனிடம்தான் என்னைத் தழுவிக்கொள் என்று ராமன் சொல்கிறான். எல்லாப் பண்புகளும் நிறைந்த அனுமனையே இன்றைய இளைஞர்கள் பின்பற்ற வேண்டும் என்னும் பேச்சால் அரங்கைக் கவர்ந்தார் கீர்த்தனா.

வாலியின் மகன் அங்கதன்

ஆனால் ராமாயணத்தில் தந்தையின் சொல்லைக் காப்பாற்றும் வகையில் இறுதிவரை ராமனுக்குத் தூது சென்றது மட்டுமல்லாமல் போர்க்களத்தில் இணையற்ற வீரனாகவும் இருந்தவன் அங்கதன். இத்தனைக்கும் ராமனால் அழிக்கப்பட்ட வாலியின் மகன் அங்கதன்.

தன் தந்தையைக் கொன்றவரைப் பழிவாங்கத் துடிக்கும் இயல்பான இளைஞனாக இல்லாமல், இறக்கும்போது தன் தந்தை சொன்னபடி ராமனின் நிழலாக இருந்தவன் அங்கதன், அவனைப் போல் பழிவாங்கும் உணர்ச்சியை விட்டொழிக்கும் குணத்தை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும் என்று பேசிய மதியின் வாதத்தை ஏற்று, இன்றைய இளைஞர்கள் பின்பற்றத் தகுந்த ராமாயணக் கதாபாத்திரம் அங்கதனே என்னும் தீர்ப்பை வழங்கினார் நடுவர் கோ. மணி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in