

திரேதாயுகத்தில், ஸ்ரீராமபிரான் வாழ்ந்த காலத்தில், வாலி, பிரதிஷ்டை செய்து தவமிருந்து வழிபட்ட அற்புதத் திருத்தலம் தொட்டியம் அருகில் உள்ளது. திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில் உள்ளது தொட்டியம். இந்த ஊருக்கு அருகில் உள்ளது அயிலூர்.
முன்பொரு காலத்தில் இந்த ஊருக்கு ஸ்ரீராம சமுத்திரம் என்றே பெயர் அமைந்திருந்தது என்பார்கள். 12ம் நூற்றாண்டில், சுந்தரபாண்டிய மன்னனால் கட்டப்பட்ட கோயில் இது என்கிறது ஸ்தல வரலாறு.
வருடந்தோறும் ஆடிப்பதினெட்டு அன்று இந்தக்கோயிலுக்கு தெப்போத்ஸவம் காவிரியாற்றில் நடைபெறும். இதை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.
தொட்டியம் அருகில் காட்டுப்புத்தூர் எனும் ஊர் உள்ளது. இந்த ஊரிலிருந்து 4 கி.மீ. தொலைவு பயணித்தால், அயிலூர் எனும் திருத்தலத்தை அடையலாம்.
காவிரி ஆறும் அமராவதி ஆறும் சங்கமிக்கிற இடத்தில் அமைந்துள்ள அற்புதமான ஆலயம். கோயிலின் வாயு மூலையில், ஆறுமுகக் கடவுள் சந்நிதி கொண்டிருப்பது ரொம்பவே விசேஷமானது என்கிறார்கள் பக்தர்கள்.
இந்தத் தலத்து சிவனாரின் திருநாமம் வாலீஸ்வரர். அம்பளின் திருநாமம் செளந்தரநாயகி. தெற்குப் பார்த்தபடியும் காவிரியை பார்த்தபடியும் அம்பாள் இருக்கும் ஒப்பற்ற திருத்தலம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
வாலி பிரதிஷ்டை செய்து வழிபட்ட அற்புதமான தலம். கோயிலில் காசி விஸ்வநாதருக்கும் விசாலாட்சி அம்பாளுக்கும் சந்நிதி உள்ளது. இருவருமே வடக்குப் பார்த்தபடி காசியை நோக்கியபடி காட்சி தருகின்றனர். ஆகவே காசிக்கு நிகரான திருத்தலம் என்று போற்றப்படுகிறது. மேலும் கோயிலை ஒட்டி ஓடுகிற காவிரியை, புஷ்பவன காசி என்று சொல்லி சிலாகிக்கிறார்கள் பக்தர்கள்.
வாலீஸ்வரர் கோயிலின் இன்னொரு விசேஷம்... அகோர வீரபத்திரர் வழிபாடு இங்கே விமரிசையாக நடைபெறுகிறது. கிழக்கு நோக்கிய நிலையில், அகோர வீரபத்திரர் காட்சி தருகிறார். இவரை வணங்கி வழிபட்டால், எதிரிகள் தொல்லை ஒழியும். ஏவல் முதலான சிக்கல்களும் பிரச்சினைகளும் தீரும் என்பது ஐதீகம்.
இந்தத் தலத்தின் இன்னொரு சிறப்பு... இங்கே ஒரே சந்நிதியில் இரண்டு பைரவர்கள் காட்சி தருகின்றனர். தேய்பிறை அஷ்டமியில் பைரவரை தரிசிக்க, சுற்றுவட்டார ஊர்களில் இருந்தெல்லாம் பிரார்த்தனைக்கு வருவார்கள் பக்தர்கள்.