

புரட்டாசி வெள்ளிக்கிழமையில் மகாலக்ஷ்மி தாயாரை வேண்டுவோம். வெண்மை நிற மலர்கள் சூட்டி பிரார்த்தனை செய்வோம். மங்கல காரியங்கள் இனிதே நடந்தேறவும் குடும்பத்தில் சுபிட்சம் குடிகொள்ளவும் அருளுவாள் மகாலக்ஷ்மி.
புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதம். மகாவிஷ்ணுவை மனதார வழிபடுவதற்கு உரிய மாதம். இந்த புரட்டாசி மாதம் முழுவதுமே பெருமாள் வழிபாடு செய்வதும் விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்வதும் மகத்தான பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம்.
புரட்டாசி மாதத்தில்தான் பெரும்பாலான பெருமாள் கோயில்களில், பிரம்மோத்ஸவ விழாக்கள் விமரிசையாக நடந்தேறும். தினமும் வீதியுலாக்கள் உத்ஸவங்கள் என அமர்க்களப்படும். திருப்பதி, ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், திருவல்லிக்கேணி, கும்பகோணம் சாரங்கபாணி, குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதி கோயில்களை, புரட்டாசி மாதத்தில் தரிசிப்பதும் பிரார்த்தனை செய்வதும் மிகுந்த விசேஷங்கள் கொண்டது. மகத்தான பலன்களைத் தந்தருளக் கூடியது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளுக்கு உரிய மாதம் என்றால், மகாலக்ஷ்மி தாயாருக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் உகந்த நாட்கள். குறிப்பாக புரட்டாசி மாதத்தின் வெள்ளிக்கிழமை மகாலக்ஷ்மிக்கு உரிய அற்புதமான நாட்கள். இந்த நாட்களில், மகாலக்ஷ்மியை தன் மார்பில் வைத்துக்கொண்டிருக்கும் மகாவிஷ்ணுவையும் மகாலக்ஷ்மியையும் வணங்கி வழிபடுவது, குடும்பத்தில் ஒற்றுமையை மேம்படுத்தும்.
மகாலக்ஷ்மி தாயாருக்கு உகந்தவை வெண்மை நிற மலர்கள். எனவே வெண்மை நிற மலர்கள் சூட்டி மகாலக்ஷ்மியை வழிபடுவோம். வெள்ளிக்கிழமையில் மாலையில் விளக்கேற்றி, மகாலக்ஷ்மிக்கு வெண்மை நிற மலர்கள் சூட்டி வேண்டிக்கொள்வோம். லக்ஷ்மி அஷ்டோத்திரம் பாராயணம் செய்து வேண்டிக்கொள்ளலாம். கனகதாரா ஸ்தோத்திரமும் லலிதா சகஸ்ரநாம பாராயணமும் சகல ஐஸ்வரியத்தைக் கொடுக்கவல்லது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
மகாலக்ஷ்மிக்கு வெண்மை நிற மலர்கள் சார்த்தும் அதேவேளையில், வீட்டில் உள்ள பெண்களுக்கும் மல்லிகை, முல்லை, ஜாதிமல்லி முதலான மலர்கள் கொண்டு தலையில் சூட்டிக்கொள்வதும் வாசலில் விளக்கேற்றியும் பூஜையறையில் விளக்கேற்றியும் பிரார்த்தனை செய்வதும் தம்பதி இடையே ஒற்றுமையைப் பலப்படுத்தும். இல்லத்தில் சகலசம்பத்துகளும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.
புரட்டாசி வெள்ளிக்கிழமை நன்னாளில், மகாலக்ஷ்மிக்கு மல்லிகைப் பூ சார்த்தி மனதார வேண்டிக்கொள்வோம்.