

அஷ்டமியில் கஷ்டமெல்லாம் தீர்க்கும் பைரவரை வழிபடுவோம். எதிர்ப்புகள் விலகி காரியத்தில் வெற்றி கிடைக்க அருளுவார் காலபைரவர்.
வழிபாடுகளில் பைரவ வழிபாடு மிக மிக முக்கியமானது என்பார்கள். தீயசக்திகளை அழிக்கவும் அசுர குணங்களையும் கூட்டங்களையும் அழிக்கவும் சிவபெருமான் உண்டு பண்ணியவரே பைரவர்.
பிரமாண்டமாக எழுப்பப்பட்டிருக்கும் ஆலயத்தில் பைரவருக்கும் சந்நிதி உண்டு. ஒருகோயிலுக்குள் சென்று விட்டு, சிவ சந்நிதியை தரிசித்துவிட்டு, சிவனாரின் கோஷ்ட தெய்வங்களையெல்லாம் வழிபட்ட பிறகு, பைரவரை தரிசிக்கலாம்.
பைரவர் உக்கிரமானவர்தான். தீயதைக் கண்டு பொசுக்கிவிடுபவர்தான். பைரவரின் வாகனம் நாய். வீட்டுக்கும் ஊருக்கும் எப்படி காவல் காக்கிறதோ, அதேபோல் பைரவர், கோயிலையும் உலகையும் மனிதர்கள் காவல் காக்கிறார் என்பதாக ஐதீகம்.
ஏகாதசி திதி பெருமாளுக்கு உகந்தது போல், சஷ்டி திதி முருகப்பெருமானுக்கு உகந்தது போல், பஞ்சமி திதி வாராஹிதேவிக்கு உகந்தது போல் பைரவருக்கு உகந்த திதியாக அஷ்டமி திதியைப் போற்றிச் சொல்கிறது புராணம்.
அஷ்டமி திதியில் பைரவ வழிபாடு செய்யச் செய்ய, பலம் தரும். எதிர்ப்புகள் அகலும். எதிரிகள் வீரியம் இழப்பார்கள். காரியத்தில் தெளிவும் வெற்றியும் உண்டாகும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக்கொள்வது ரொம்பவே விசேஷம். வழக்கில் இழுபறி நிலையில் இருப்பவர்கள், வழக்கில் நல்ல நியாயமான தீர்ப்பு வரவேண்டுமே என்று கலங்குபவர்கள், வீட்டில் எந்த சுப நிகழ்வுகளும் நடக்காமல் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறதே என்று வருந்துபவர்கள் தேய்பிறை அஷ்டமியில், பைரவரை வழிபாடு செய்து பிரார்த்தித்துக்கொண்டால், விரைவில் வழக்கில் தீர்ப்பு கிடைக்கும். நல்ல தீர்ப்பு கிடைக்கப் பெறலாம்.
வீட்டில் தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். எதிர்ப்புகள் அகலும். மனக்கிலேசங்களும் குழப்பங்களும் விலகும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
பைரவருக்கு வடை மாலை சார்த்தி வேண்டிக்கொள்ளலாம். மிளகு கலந்த சாதம், தயிர்சாதம் கொண்டும் நைவேத்தியம் செய்து வழிபடலாம். பைரவ அஷ்டோத்திரம் சொல்லி வேண்டிக்கொள்வதும் மகத்துவம் மிக்கது.
முக்கியமாக, தேய்பிறை அஷ்டமியில், பைரவரை வேண்டிக்கொண்டு, தெருநாய்களுக்கு உணவளிப்பதும் பிஸ்கட் வழங்குவதும் பாவங்களைப் போக்கவல்லது. புண்ணியங்களைப் பெருக்கக் கூடியது என்பது ஐதீகம்.