

இந்த இப்பிறவியில், வாழ்வில் ஒருமுறையேனும் திருவெண்காடு திருத்தலத்துக்கு வந்து, அகோரமூர்த்தியையும், புதன் பகவானையும் முக்கியமாக ஸ்வேதாரண்யேஸ்வரரையும் தரிசித்தால், வாழ்வில் உன்னத நிலையை அடையலாம். திருமண பாக்கியம் கைகூடும். சந்ததிகள் செழித்து வளருவார்கள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
சீர்காழிக்கு அருகில் உள்ள அற்புதமான திருத்தலம் திருவெண்காடு. இங்கே சுவாமியின் திருநாமம் ஸ்வேதாரண்யேஸ்வரர். திருவெண்காடர், திருவெண்காட்டுத் தேவர், திருவெண்காடுடைய நாயனார், திருவெண்காட்டுப் பெருமான் என பல திருநாமங்கள் சிவனாருக்கு உள்ளன.
அம்பாளின் திருநாமம் - பிரம்ம வித்யாம்பிகை. அருளும் பொருளும் அள்ளித்தரக்கூடியவள். ஸ்வேதாரண்யேஸ்வரரையும் பிரம்ம வித்யாம்பிகையும் தரிசித்து அருள்பெற்றவர்கள் புராண காலத்திலும் ஏராளம். மன்னர் காலத்திலும் ஏராளம். இன்றைக்கும் இவர்களின் அருள் பெற்று இனிதே வாழ்பவர்கள் கோடிக்கணக்கானோர்.
பிரம்ம வித்யாம்பிகைக்கு, பெரியநாயகி, மாதங்கி, வேயனதோளி நாச்சியார் என பல திருநாமங்கள் உள்ளன. திருவெண்காடு திருத்தலத்துக்கு அருகில் திருநாங்கூர் எனும் வைணவ திருத்தலம் உள்ளது. அங்கே, மதங்காஸ்ரமத்தில், மதங்க முனிவருக்கு மாதங்கி எனும் பெயரில் மகளாக வளர்ந்து, திருவெண்காடரை நோக்கி கடும் தவம் புரிந்து, ஈசனை கணவராகப் பெற்றாள் என்கிறது ஸ்தல புராணம். பிரம்மாவுக்கு வித்தைகளை கற்றுக் கொடுத்த்தால் அம்பாளுக்கு பிரம்ம வித்யாம்பிகை எனும் திருநாமம் அமைந்தது.
மகாவிஷ்ணு, சூரியன், சந்திரன், அக்னி தேவன், இந்திரன் முதலானோர் வழிபட்டு வரம் பெற்ற திருத்தலம் எனும் பெருமையும் சாந்நித்தியமும் கொண்ட திருத்தலம் இது.
அதுமட்டுமா?
சக்தி பீடங்கள் 108 என்கிறோம். அந்த சக்தி பீடங்களுள் பிரம்ம வித்யாம்பிகை குடிக்கொண்டிருக்கும் இந்தத் தலமும் ஒன்று.
நவகோள்கள் என்கிறோம். நவக்கிரகம் என்கிறோம். நவக்கிரகங்களில் புதன் கிரகம் வழிபட்ட திருத்தலம் இது. புதன் பரிகாரத் திருத்தலம் என்று போற்றப்படுகிறது. நவக்கிரகங்களில், புதன் பகவானுக்கு உரிய தலம் இது. இங்கே புதன் பகவானுக்கு தனிச்சந்நிதி அமைந்துள்ளது.
தலம், மூர்த்தம், தீர்த்தம் மூன்றுமே விசேஷம். அக்கினி தீர்த்தம், சூரிய தீர்த்தங்கள், சந்திர தீர்த்தம் என மூன்று தீர்த்தங்கள் உள்ளன. ஸ்வேதாரண்யேஸ்வரர், நடராஜர், அகோர மூர்த்தி என மூன்று வடிவங்களில் சிவனார் தரிசனம் தருகிறார். அதேபோல் ஸ்தல விருட்சங்களும் மூன்று. ஆலமரம், கொன்றை மரம், வில்வ மரம் என மூன்று ஸ்தல விருட்சங்கள் அமைந்துள்ளன. நாவுக்கரசர், சுந்தரர் பெருமான், மாணிக்கவாசகர், முதலானவர்கள் பதிகம் பாடப்பெற்ற திருத்தலம் எனும் பெருமையும் புண்ணியமும் கொண்ட திருத்தலம் திருவெண்காடு.
‘சிவஞானபோதம்’ எனும் சைவ சித்தாந்த முழு நூலை, முதல் நூலை அருளிய மெய்கண்டார் அவதரித்த புண்ணிய க்ஷேத்திரமும் இதுதான். காஞ்சி சங்கரமடத்தின் பீடாதிபதிகளில் ஒருவரான ஸ்ரீபரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகளின் திருச்சமாதி இந்த ஊரின் மணிகர்ணிகை கட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
சோழப் பேரரசு காலத்தில், செம்பு மற்றும் ஐம்பொன்களை வார்த்தெடுக்கும் விக்கிரகங்களை உருவாக்கும் சிலைக்கூடங்கள் இங்கே இருந்ததாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. மிக நேர்த்தியான சிலைகள் என்று வர்ணிக்கிறார்கள் கல்வெட்டு ஆய்வாளர்கள்.
இந்த இப்பிறவியில், வாழ்வில் ஒருமுறையேனும் திருவெண்காடு திருத்தலத்துக்கு வந்து, அகோரமூர்த்தியையும், புதன் பகவானையும் முக்கியமாக ஸ்வேதாரண்யேஸ்வரரையும் தரிசித்தால், வாழ்வில் உன்னத நிலையை அடையலாம். திருமண பாக்கியம் கைகூடும். சந்ததிகள் செழித்து வளருவார்கள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.