

சஷ்டி நாளில், முருகப்பெருமானை தரிசித்து, கந்த சஷ்டி பாராயணம் செய்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள். மங்கல காரியங்கள் அனைத்தும் தடையின்றி நடத்தித் தந்தருள்வார் வெற்றிவேலன்.
முருகக் கடவுளை வணங்கி வந்தாலே, எதிர்ப்புகள் அகலும். வெற்றிகள் நம்மைத் தேடி வரும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். ஆறுபடை வீடு கொண்ட முருகப் பெருமானுக்கு ஆறுபடைக் கோயில்கள் கடந்தும் ஏராளமான தனிக்கோயில்கள் அமைந்துள்ளன.
குன்றுதோறும் இருக்கும் குமரனுக்கு, மலைக்கோயில்களும் அமைந்துள்ளன. சுவாமி மலை மாதிரி, மலையையே உருவாக்கி கோயில்களும் எழுப்பப்பட்டுள்ளன. வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், கார்த்திகை மாதத்து கார்த்திகை, தைப்பூசம் முதலான எண்ணற்ற விசேஷங்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. அப்போது லட்சக்கணக்கான மக்கள், பாதயாத்திரையாக வந்து முருகக் கடவுளைத் தரிசித்துச் செல்வார்கள்.
அழகும் அசுரர்களை வெல்லும் வீரமும் கொண்ட முருகப்பெருமானுக்கு, சிவாலயங்களிலும் அம்மன் கோயில்களிலும் தனிச்சந்நிதியே அமைந்துள்ளது. வள்ளி தெய்வானை சமேதராக காட்சி தரும் வேலவனை செவ்வாய்க்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் தரிசிப்பது மகத்தான பலன்களைத் தந்தருளக் கூடியது.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் குடிகொண்டிருக்கும் சுப்ரமண்யர் கொள்ளை அழகு. சாந்நித்தியம் மிக்க தெய்வம். அதேபோல், சென்னை பாரிமுனையில் கந்தகோட்டம் முருகன் கோயிலும் பிரசித்தி பெற்றது. சைதாபேட்டையில் செங்குந்த முருகன் கோயிலும் அழகிய ஆலயம். அற்புத வரங்களைத் தந்தருளும் முருகனாகப் போற்றப்படுகிறார். குரோம்பேட்டையில் குமரன் குன்றத்தில் உள்ள அழகன் முருகனும், வரங்களை வழங்கக் காத்துக்கொண்டிருக்கிறார்.
அதேபோல, சஷ்டி திதி என்பது கந்தவேலனுக்கு உரிய நாள். சஷ்டி நாளில், காலையும் மாலையும் விளக்கேற்றி கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து வழிபடுவதும் முருகக் கடவுளுக்கு செவ்வரளி மாலை சார்த்தி வழிபடுவதும் எதிர்ப்புகளையெல்லாம் விலக்கிவிடும். தடைப்பட்ட மங்கல காரியங்களையெல்லாம் நடத்திக் கொடுப்பார்.
செவ்வாய் பகவானுக்கு அதிபதி முருகப்பெருமான். செவ்வாய் பகவான் பூமிகாரகன். எனவே, முருகப்பெருமானுக்கு எலுமிச்சை சாதம் அல்லது சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து மனதார வணங்கினால், வீடு மனை வாங்கும் யோகம் தந்தருள்வான் வெற்றிவடிவேலன் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
மயில்வாகனனை சஷ்டியில் வணங்குங்கள். இன்று சஷ்டி (7.10.2020). இந்த நன்னாளில், அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று கந்தகுமாரனை தரிசித்துப் பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் பிரச்சினைகளையெல்லாம் தீர்த்து அருளுவான், வள்ளி மணாளன்.