

திருவெண்காட்டு திருத்தலத்தில் அகோர சிவத்தை வணங்கி வழிபட்டால், தீயசக்திகள் அனைத்தையும் விரட்டுவார். துர்குணங்கள் கொண்டவர்களை விலக்கிவைப்பார். புதன் பரிகாரத் தலமான திருவெண்காட்டு இறைவனை வணங்குங்கள் தீராத வியாதியையும் தீர்த்தருள்வார் சிவனார்.
சோழ தேசத்தில், காவிரி ஆற்றை வைத்துக்கொண்டு கோயில்கள் குறித்து வைக்கப்பட்டுள்ளன. காவிரியின் வடகரைக் கோயில்கள், தென்கரைக் கோயில்கள் என்று பட்டியலிடப்பட்டிருக்கின்றன. வடகரையில் 63 கோயில்கள் தென்கரையில் 127 கோயில்களும் அமைந்துள்ளன. திருவெண்காடு திருத்தலம், காவிரி வடகரை திருத்தலம். இது வடகரை திருத்தலங்களில் 11வது திருத்தலம்.
திருவெண்காடு திருத்தலம் சீர்காழிக்கு அருகில் உள்ளது. நவக்கிரகங்களில் புதன் பகவானுக்கு உரிய திருத்தலம் என்று போற்றப்படுகிறது திருவெண்காடு.
ஆரண்யேஸ்வர் என்கிற திருநாமத்துடன் சிவனார் காட்சி தந்தருளும் திருத்தலங்கள் வெகு பிரபலம். ஒன்று... வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர். இன்னொருவர்... திருவெண்காடு ஸ்வேதாரண்யேஸ்வரர்.
நோய் தீர்க்கும் திருத்தலம் என்று போற்றப்படுகிறது திருவெண்காடு.
கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்
பெண்காட்டு முருவானும் பிறைகாட்டுஞ் சடையானும்
பண்காட்டு மிசையானும் பயிர்காட்டும் புயலானும்
வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டுங் கொடியானே
என்று இந்தத் தலத்து இறைவனைப் போற்றுகிறது.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், சீர்காழி முதலான ஊர்களில் இருந்து திருவெண்காட்டுக்கு பேருந்து வசதிகள் உள்ளன.
காசியம்பதி என்று போற்றப்படும் காசி க்ஷேத்திரத்துக்கு இணையான தலம் இது என்று போற்றுகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
மருத்துவாசுரன் எனும் கொடிய அரக்கன், சிவ வரம் பெறுவதற்காக, கடும் தவம் மேற்கொண்டான். சிவனாரும் அவனுக்கு வரமளித்தார். ஆனால் வரம் கிடைத்ததுமே, தேவர்களையும் முனிவர் பெருமக்களையும் துன்புறுத்தத் தொடங்கினான்.
இதில் வருந்திக் கலங்கிய தேவர்களும் முனிவர்களும் சிவபெருமானிடம் வந்து முறையிட்டனர். மருத்துவாசுரன் எனும் தீயசக்தியை இனியும் விட்டுவைக்கக் கூடாது என்பதை அறிந்த சிவபெருமான், அண்ட சராசரமும் கிடுகிடுத்து நடுங்கும் வகையில், அகோர சிவமாக உருவெடுத்தார். அந்த அசுரனை அழித்தொழித்தார். அதே அகோர சிவமாக, இங்கே, திருவெண்காட்டில், ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயிலில் சந்நிதி கொண்டு அருள்பாலிக்கிறார்.
நவக்கிரகங்களில் புதன் பகவானுக்கு உரிய திருத்தலம் இது. இங்கே புதன் பகவானுக்கு தனிச்சந்நிதியே அமைந்துள்ளது. அதேபோல், அகோர சிவனாரையும் தரிசிக்கலாம்.
புதன் பரிகாரத் தலம் இது. புதன் பகவானை இந்தத் தலத்துக்கு வந்து தரிசித்துப் பிரார்த்தனை செய்துகொண்டால், புத்தியில் தெளிவு உண்டாகும். மனோபலம் பெருகும். மங்கல காரியங்கள் நடந்தேறும் என்பது ஐதீகம்.
திருவெண்காட்டுக்கு அருகில், திருநாங்கூர் திருத்தலம், திருவாலி, திருநகரி முதலான வைஷ்ண திருத்தலங்களும் திருவலம்புரம், கீழைத் திருக்காட்டுப்பள்ளி, திருக்கலிக்காமூர் முதலான சிவ திருத்தலங்களும் அமைந்துள்ளன.