Published : 07 Oct 2020 11:42 AM
Last Updated : 07 Oct 2020 11:42 AM

காலசர்ப்ப தோஷம் போக்கும் திருச்சி நாகநாதர்! நாககன்னிகள் வழிபட்ட நாகநாத சுவாமி

கால சர்ப்ப தோஷம் விலகும் சர்ப்ப தோஷம் விலகவும் சகல தோஷங்களும் விலகவும் திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு அருகிலேயே கோயில் கொண்டிருக்கும் நாகநாத சுவாமியை வணங்கி வழிபட்டால், எல்லா நலமும் வளமும் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் பக்தர்கள்.

சார மாமுனிவர், சிவனாரை வேண்டி தவமிருந்து வரம் பெற்ற திருத்தலம் எனும் சக்தியையும் சாந்நித்தியத்தையும் கொண்டது நாகநாத சுவாமி திருக்கோயில். நாக கன்னிகள் வழிபட்டு அருள்பெற்ற திருத்தலம் என்பதால் இங்கே உள்ள சிவனாருக்கு, நாகநாத சுவாமி எனத் திருநாமம் அமைந்தது என்று விவரிக்கிறது ஸ்தல புராணம்.
திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு அருகில் இருக்கிறது நந்திகோயில் தெரு. இங்கே நந்திகோயில் தெருவில் அமைந்துள்ளது நாகநாத சுவாமி திருக்கோயில். சிறிய கோயில்தான் என்றாலும் கீர்த்தி மிக்க ஆலயம் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

அற்புதமான ஆலயம். இந்தக் கோயிலில் குடிகொண்டிருக்கும் இறைவனின் திருநாமம் ஸ்ரீநாகநாத சுவாமி. கிழக்கு பார்த்தபடி தரிசனம் தருகிறார். அதேபோல் அம்பாளின் திருநாமம் ஆனந்தவல்லி அம்பாள். தெற்கு நோக்கிய சந்நிதியில் குடிகொண்டிருக்கிறாள்.

சார மாமுனிவர் இந்தத் தலத்து இறைவனை வழிபட வந்த போது, அம்பாள் சந்நிதியில் இருக்கும் நந்தி, வழிவிட்டதாக ஸ்தல புராணம் தெரிவிக்கிறது.
சார மாமுனிவர், தள்ளாமையால், வயது முதிர்ந்த நிலையுடன் உச்சிப்பிள்ளையார் கோயிலில் குடிகொண்டிருக்கும் தாயுமானவ சுவாமியை தரிசிக்க வந்தார். அப்போது, படியேற முடியாமல் தவித்துப் போனார். அதை அறிந்த சிவனார், மலையில் இருந்து இறங்கி வந்து, நாகநாதராக திருக்காட்சி தந்து அருளினார்.

இங்கே உள்ள நாகநாத சுவாமி, காளஹஸ்தீஸ்வரருக்கு இணையானவர். இந்தத் திருத்தலம் திருக்காளஹஸ்திக்கு இணையான திருத்தலம் என்று போற்றுகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

ராகு - கேது தோஷம் உள்ளவர்கள், சர்ப்ப தோஷம் உள்ளவர்கள், திருச்சி நந்திகோயில் தெருவில் அமைந்துள்ள நாகநாத சுவாமியை தரிசித்து பிரார்த்தனை செய்துகொண்டால், சர்ப்பம் முதலான தோஷங்கள் விலகிவிடும். கால சர்ப்ப தோஷமும் ராகு கேது தோஷமும் விலகிவிடும் என்பதும் ஐதீகம்.

ஆலயத்தின் ஸ்தல விருட்சம் வில்வ மரம். ஆலயத்தில் அமைந்துள்ள சிவகங்கை தீர்த்தமும் சிறப்பு வாய்ந்தது. தலம், தீர்த்தம், மூர்த்தம் என விசேஷங்களைக் கொண்ட நாகநாத சுவாமி திருத்தலத்துக்கு வருவதே புண்ணியம். நாகநாத சுவாமிக்கு வில்வம் சார்த்தி வேண்டிக்கொண்டால், சகல தோஷங்களும் சர்ப்ப பாவங்களும் விலகும். சந்தோஷம் பெருகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x