துறையூரில் தென் திருப்பதி பிரசன்ன வேங்கடாசலபதி; மலை பெருமாள் கோயிலில் கருப்பண்ணசாமிக்கு விபூதி! 

துறையூரில் தென் திருப்பதி பிரசன்ன வேங்கடாசலபதி; மலை பெருமாள் கோயிலில் கருப்பண்ணசாமிக்கு விபூதி! 
Updated on
2 min read

துறையூரில் உள்ள பெருமாள் மலையில், பிரசன்ன வேங்கடாசலபதி கோயில் கொண்டிருக்கிறார். தென் திருப்பதி என்று போற்றப்படுகிற இந்தத் திருத்தலத்தில், கருப்பண்ணசாமிக்கு சந்நிதி உள்ளது. அவரின் சந்நிதியில், விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது.

திருச்சிக்கு அருகில் உள்ளது துறையூர். துறையூரில் இருந்து பெரம்பலூர் செல்லும் வழியில், 3 கி.மீ. தொலைவில் உள்ளது பெருமாள் மலை. அடிவாரத்தில் இருந்து மலைக்கோயிலுக்குச் செல்ல, சுமார் 1564 படிகள் உள்ளன. அடிவாரத்தில் இருந்து மலைக்கோயிலுக்கு வாகனத்திலும் செல்லலாம். அதற்காக 5 கி.மீ. தொலைவுக்கு தார்ச்சாலையும் உள்ளது.

படிகளேறியோ வாகனத்தில் சென்றால், மலையையும் மலையப்ப சுவாமியான பிரசன்ன வேங்கடாசலபதியையும் தரிசிக்கலாம்.

தென் திருப்பதி என்று போற்றப்படுகிறது இந்தத் தலம். இங்கே ஸ்ரீதேவி பூதேவி சமேதராக பிரசன்ன வேங்கடாசலபதி திருக்காட்சி தருகிறார். கோயிலின் தீர்த்தம் துளசி. ஸ்தல விருட்சம் இலந்தை மரம் என்று தெரிவிக்கிறது ஸ்தல புராணம்.

11ம் நூற்றாண்டு திருக்கோயில். கரிகாற் சோழனின் பேரனின் ஆட்சிக் காலத்தில் இந்த ஆலயம் கட்டப்பட்டதாக விவரிக்கிறது ஸ்தல வரலாறு. சிற்ப நுட்பங்களுடன் கூடிய திருக்கோயில் இது. பெருமாளின் தசாவதாரத் திருக்கோலங்களையும் இங்கு தரிசிக்கலாம். ஒவ்வொரு அவதாரத் திருக்கோலமும் ஒவ்வொரு தூண்களில் சிற்பங்களாக தரிசிக்கக் கிடைக்கின்றன.

அதுமட்டுமா? இங்கே உள்ள ஏழு கருங்கல் தூண்கள் விசேஷமானவை. ஏழு தூண்களில் இருந்தும் ஏழு ஸ்வரங்களும் வெளிப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல், பதினாறு திருக்கரங்களுடன் இரணியனை மடியில் கிடத்தியபடி வடக்கு முகம் கொண்டு ஸ்ரீநரசிம்மர் உக்கிரத்துடன் சேவை சாதிக்கும் சிற்பமும் கொள்ளை அழகு.

புரட்டாசி மாதத்தில், பெருமாள் மலை பிரசன்ன வேங்கடாசலபதியை தரிசித்தால், மகா புண்ணியம் என்றும் இந்த மாதத்தில் என்றேனும் ஒருநாளில், பெருமாளை கண் குளிர தரிசித்து மனதார வேண்டிக்கொண்டால், தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம். கடன் தொல்லையில் இருந்தும் வழக்கு விவகாரங்களில் இருந்தும் மீளச் செய்வார் பிரசன்ன வேங்கடாசலபதி என்றும் தெரிவிக்கின்றனர் பக்தர்கள்.

வைஷ்ணவக் கோயில்களில் இல்லாத தனிச்சிறப்பு இந்தக் கோயிலுக்கு உண்டு. இங்கே கருப்பண்ண சாமியின் சந்நிதி உள்ளது. கருப்பண்ண சாமிக்கு, சாம்பிராணி தூபமிடுவது இங்கே பிரசித்தம். சாம்பிராணி தூபமிட்டு வேண்டிக்கொண்டால், எதிரிகள் தொல்லை ஒழியும். தீய சக்திகள் அண்டாமல் காத்தருள்வார் கருப்பண்ணசாமி என்கிறார்கள் பக்தர்கள். மேலும் கருப்பண்ணசாமி சந்நிதியில், விபூதி பிரசாதம் வழங்கப்படுவதும் காணக் கிடைக்காத ஒன்று.

திருமணம் தடைப்பட்டுக்கொண்டே இருக்கிறதே என்று கலங்கித் தவிப்பவர்கள், பிரசன்ன வேங்கடாசலபதியை தரிசித்துப் பிரார்த்தித்துக்கொண்டால், ஸ்ரீஅலர்மேல் மங்கைத் தாயாரை தரிசித்து வேண்டிக்கொண்டால், திருமணத் தடைகள் நீங்கும். கல்யாண வரன் தகையும். விரைவில் கெட்டிமேளம் கேட்கும். அதேபோல், அலர்மேல் மங்கை தாயாரை வேண்டிக்கொண்டு, வளையல் கட்டியும் தொட்டிலிட்டும் பிரார்த்தனை செய்துகொண்டால், குழந்தை பாக்கியம் தந்தருள்வார் தாயார்.

சக்தியும் சாந்நித்தியமும் கொண்ட திருத்தலம் துறையூர் பெருமாள் மலை ஸ்ரீபிரசன்ன வேங்கடாசலபதி திருக்கோயில். அழகும் கருணையும் ததும்ப அற்புதக் கோலத்தில் காட்சி தரும் பெருமாளை தரிசியுங்கள். எல்லா பிரச்சினைகளில் இருந்தும் நம்மை மீட்டெடுத்து அருளுவார் பிரசன்ன வேங்கடாசலபதி பெருமாள்.
காலை 9 முதல் மாலை 5 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும். பெருமாள் மலை பிரசன்ன வேங்கடாசலபதியை தரிசியுங்கள். தென் திருப்பதி என்று போற்றப்படும் திருத்தலத்துக்கு வருகை தாருங்கள். வேண்டியதையெல்லாம் தந்தருள்வார் வேங்கடாசலபதி பெருமாள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in