

‘ஆசைப்படுங்கள்; ஆனால் பேராசைப்படாதீர்கள். அவர்களை ஒருபோதும் நான் பார்ப்பதே இல்லை’ என்கிறார் பகவான் சாயிபாபா.
பகவான் சாயிபாபா, தன்னுடைய லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்மழையைப் பொழிந்துகொண்டே இருக்கிறார். ஏழையைத் தள்ளிவைத்துப் பார்ப்பதெல்லாம் பாபாவிடம் கிடையாது. அதேபோல், பணக்காரர்களுக்கு சிகப்புக்கம்பளம் விரித்து அருள் செய்வதும் பாபாவிடம் இல்லை.
பொன்னுக்கும் பொருளுக்கும் அப்பாற்பட்டவர் சாயிபாபா. எத்தனையோ ஏழைகளை, அவர்களின் குணமறிந்து அவர்களை வாழ்வில் உயர்த்திவிட்டிருக்கிறார். அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் வியக்கத்தக்க மாற்றங்களையும் ஏற்றங்களையும் தந்து வாழவைத்திருக்கிறார்.
ஊதுபத்தியும் சாம்பிராணியும் பாபாவுக்குப் பிடித்த விஷயங்கள். அதேசமயம், ஊதுபத்தியோ சாம்பிராணியோ கூட வாங்க வசதி இல்லாதவர்களை பாபா, ஒருபோதும் புறந்தள்ளிவிடுவதில்லை. அதேபோல், எவ்வளவு பணமிருந்தாலும் வசதிகள் இருந்தாலும் அவர்கள் கட்டுக்கட்டாக ஊதுபத்தியும் பாக்கெட் பாக்கெட்டாக சாம்பிராணி வாங்கி வந்து சமர்ப்பித்தாலும் அவர்களிடம் நற்குணங்கள் இல்லையெனில் அவர்கள் கொண்டு வந்து சமர்ப்பிப்பதை ஏற்றுக்கொள்ளவே மாட்டார் சாயிபாபா.
இப்படித்தான் ஒருமுறை...
மிகப்பெரிய செல்வந்தர், பாபாவிடம் வந்தார். பாபா நமஸ்கரித்தார்.
‘’எனக்கு ஏராளமான பணம் இருக்கிறது. வீடு வாசல் வைத்திருக்கிறேன். கார் வைத்திருக்கிறேன். என் தொழிலில் நல்ல லாபம் வந்துகொண்டிருக்கிறது. இன்னும் என்னுடைய வியாபாரம் பெருகவேண்டும். என்னுடைய ஊரில் என்னை விட பெரிய பணக்காரர் என்று யாருமில்லாத நிலை வரவேண்டும். நான் தான் பெருந்தனக்காரராக இருக்கவேண்டும். எனக்கு அருள்புரியுங்கள் பாபா’ என்றார்.
பாபா மெல்ல புன்னகைத்துக் கொண்டார்.
அருகில் இருந்த அன்பரை அழைத்தார். ‘அதோ... அந்த ஏழை பக்தனின் குடும்பத்துக்கு பணம் தருவதாகச் சொல்லியிருந்தேன். அதற்காக ஒருவரிடம் கேட்டிருந்தேன். உடனடித் தேவையாக இருக்கிறது. வாங்கி வா’ என்று சொல்லி அனுப்பினார். அவர் சிறிது நேரம் கழித்து, ‘அவர் இல்லை’ என்று சொல்லப்பட்டது.
‘அடடா... பணம் அவசரமாகத் தேவைப்படுகிறதே... சரி அந்தக் கடை முதலாளியைப் பார்த்துக் கேட்டு வாங்கி வா’ என்று இன்னொருவரை அனுப்பிவைத்தார். பிறகு எதிரில் உள்ள செல்வந்தரிடம் பேசிக்கொண்டே இருந்தார் பாபா.
பிறகு போனவர் திரும்பி வந்தார். ‘கடை முதலாளி ஊருக்குப் போயிருக்கிறாராம்’ என்று சொன்னார்.
அப்போது, ‘பாபா, எனக்கு அருள் கொடுங்கள். ஆசி வழங்குங்கள். நாம் ரொம்ப நேரம் இப்படி இருந்தால், என் தொழிலும் லாபமும் கெட்டுவிடும். லாபம் குறைந்துவிடும்’ என்று பணக்கார மனிதர் அவசரப்படுத்தினார்.
மீண்டும் சிரித்துக்கொண்டார் சாயிபாபா.
‘’ஒரு ஏழைக்கு உதவச் சொல்லி பணத்துக்கு தவித்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் இதையெல்லாம் பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமலும் தராமலும் இருக்கிறீர்கள். இப்போது உங்கள் பாக்கெட்டில் ஏராளமான பணம் இருந்தும், கொடுப்பதற்கு மனமில்லை. ஆனால் நீங்களோ, இன்னும் இன்னும் பணம் வேண்டும், பணக்காரனாக வேண்டும் என்கிறீர்கள்.
ஏழைகளையும் ஏழைகளுக்கு உதவுகிற செல்வந்தர்களையும்தான் எப்போதும் அருகில் வைத்துக்கொள்வேன். உங்களைப் போலானவர்களை நான் நினைப்பதுமில்லை. அவர்களுக்கு எந்த உதவிகளையும் செய்வதுமில்லை’’ என்று சொல்லிவிட்டு அனுப்பிவைத்தார்.
பிறகு அங்கிருந்தவர்களிடம் பாபா சொன்னார்... ‘’எல்லோருக்கும் ஆசை இருக்கிறது. ஆசைப்படாதவர்கள் என்று இந்த உலகில் யார்தான் இருக்கிறார்கள். ஆனால் ஆசைப்படலாம். பேராசைதான் படக்கூடாது.அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என்று நினைக்காதவர்களை நானும் நினைப்பதில்லை. அதேசமயம் ஏழையின் ஒருவேளை பசியைப் பற்றி நினைத்து அவர்களுக்கு உதவுபவர்களை நான் உயர்த்திக்கொண்டே இருப்பேன்’’ என்று அருளியுள்ளார் பாபா.
இயலாதவர்களுக்கு உதவுங்கள். பாபா உங்களைத் தேடி வந்து அருளுவார்.
சென்னையில் மயிலாப்பூரில் சாயிபாபா கோயில் இருக்கிறது. தமிழகத்தின் பல ஊர்களிலும் சாயிபாபாவுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. திருச்சி அக்கரப்பட்டியில், தென் ஷீர்டி என்று போற்றப்படும் அளவில், பிரமாண்டமான சாயிபாபா ஆலயம் எழுப்பப்பட்டிருக்கிறது.
பாபாவை இங்கெல்லாம் சென்று தரிசியுங்கள். மனதார வேண்டுங்கள். உங்களை ஒருபோதும் கைவிடமாட்டார் சாயிபாபா.