

உங்கள் கண்ணீரைத் துடைக்க ஓடோடி வருவேன் என்று பகவான் சாயிபாபா அருளியுள்ளார்.
வாழ்வில் ஒரு ஏற்றம் வந்துவிடாதா என்றுதான் தவித்துக்கொண்டிருக்கிறோம். பொருளாதாரத்தில் உயர்ந்துவிடமாட்டோமா, நம் கடன்களெல்லாம் அடைந்துவிடாதா என்றுதான் ஏங்கிக்கொண்டிருக்கிறோம். ஒரு ஏற்றம் வந்துவிட்டால், கடனெல்லாம் அடைந்துவிடும், வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிடும் என்று கணக்குப் போட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
படிப்பில் கெட்டி என்று நம் குழந்தைகள் பேரெடுக்கவேண்டும் என்பதுதான் நம் எல்லோரின் எதிர்பார்ப்பும். படித்த மகனுக்கோ மகளுக்கோ நல்ல வேலை கிடைக்கவேண்டும் என்பதுதான் நம்மில் பலருடைய வேண்டுதல். அவர்களுக்கு நல்ல வரன் தகையவேண்டும், அவர்களின் இல்லறம் நல்லறமாக வேண்டும் என்பதுதான் பெற்றோர் ஒவ்வொருவரின் பெருங்கனவு.
வாழ்வில் நமக்கே நமக்கென்று ஒரு வீடு வாங்கவேண்டும், நம் குழந்தைகள் நல்ல விதமாக முன்னுக்கு வரவேண்டும், அவர்களுக்குத் திருமணமாகி, குழந்தைகள் பிறந்து செளக்கியமாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்புகளுடனும் ஏக்கத்துடனும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
உலகாயத வாழ்வில் சகலரின் ஏக்கங்களையும் துக்கங்களையும் போக்குவதற்காகத்தான் அவதரித்திருக்கிறார் ஷீர்டி சாயிபாபா.
ஷீர்டி எனும் சின்னஞ்சிறிய கிராமத்தை, இன்றைக்கு மிகப்பெரிய புண்ணிய க்ஷேத்திரமாக தன் அருளாலும் பெருங்கருணையாலும் உலகமே அறியச் செய்திருக்கிறார். ’எவரொருவர் என்னை நம்பிக்கையுடன் நினைத்து, என் பெயரை உச்சரிக்கிறீர்களோ, அவர்களின் குறைகளையெல்லாம் நான் போக்குவேன். என்னை நம்பியுள்ளவர்களை ஒருபோதும் நான் விடமாட்டேன்’ என அருளியுள்ளார் சாயிபாபா.
வாழ்வில் கஷ்டங்களும் நஷ்டங்களும் கொண்டவர்கள் சரணடைகிற இடம்... சாயிபாபாவின் திருப்பாதம். அவரின் திருவடியைச் சரணடைந்தால், கஷ்டங்கள் காணாமல் போகும். நஷ்டங்கள் லாபமாக மாறும்.
வாழ்வில் நம் எல்லோருக்கும் இறை பக்தி முக்கியம். அதேபோல் குரு பக்தியும் அவசியம். இறை பக்தியுடனும் குரு பக்தியுடனும் இருப்பவர்களை சாயிபாபா ஒருபோதும் விட்டுவிடமாட்டார். பக்தியில் நம்பிக்கை கொண்டு, இறை வழிபாட்டிலும் குரு வழிபாட்டிலும் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டு, முக்கியமாக உறவுகளின் மீதும் வாழ்க்கையின் மீதும் நம்பிக்கை கொண்டு வாழ்பவர்களை ஒருபோதும் தோற்றுப்போகவிடமாட்டார் சாயிபாபா.
‘உங்கள் கஷ்டங்களுக்காகவும் அவமானங்களுக்காகவும் ஒருபோதும் கண்ணீர் விடாதீர்கள். இருள் இருக்கும் இடத்தில் இருந்துதான் ஒளி தொடங்கும். இரவு முடியும் போதுதான் சூரியோதயத்தின் மதிப்பை உணரமுடியும். நம் கர்மவினைகளைக் கழிப்பதற்குத்தான் இந்தப் பிறப்பு. எனவே இந்த நஷ்டங்களையும் வேதனைகளையும் கண்டு கலங்கிவிடாதீர்கள். உங்கள் கண்ணீரைத் துடைப்பதற்கு நான் ஓடோடி வருவேன். உங்களைக் காப்பேன் என அருளியுள்ளார் ஷீர்டி சாயிபாபா.
உங்கள் வீட்டுக்கு அருகில் சாயிபாபா ஆலயம் இருக்கும். அங்கே சென்று சாயி பகவானை வணங்குங்கள். அவரிடம் உங்கள் வேண்டுதல்களை முன்வைத்து பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் பிரச்சினைகளையெல்லாம் பாபா தீர்த்துவைப்பார். கர்மவினைகளையெல்லாம் நிறைவேற்றி அதில் இருந்து மீண்டு வர கைதூக்கிவிடுவார்.
வாழ்வில் ஏற்றங்களையும் உன்னதமான வாழ்வையும் தந்தருள்வார் சாயிபாபா.