

ஒவ்வொரு சுவாமிக்கும் ஒவ்வொரு விதமான நைவேத்தியங்கள் படையலிடுவது வழக்கம். மகாவிஷ்ணுவுக்கு பால் பாயச நைவேத்தியம் செய்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள். வேண்டியதையெல்லாம் தந்தருள்வான் ஏழுமலையான்.
ஒரு பூஜையின் தொடக்கம் சுவாமிக்கு பூக்களிட்டு அலங்கரிப்பதில் இருந்துதான் தொடங்குகிறது. பூஜையின் நிறைவு என்பது, சுவாமிக்குப் படைக்கப்படும் நைவேத்தியம். ஒவ்வொரு பூ சமர்ப்பிப்பதற்கு பலன்கள் இருக்கின்றன. அதேபோல், சுவாமிக்குப் படையலிடும் நைவேத்தியத்திற்கும் பலன்கள் உள்ளன. ஆக, எந்தவொரு பூஜையாக இருந்தாலும் பூஜையை நிறைவு செய்யும் படையல் உணவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகச் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
கிருஷ்ணருக்கு வெண்ணெய் கொண்ட உணவுகள் நைவேத்தியம் செய்யப்படும். அதேபோல் அனுமனுக்கு வெண்ணெய் கலந்த உணவுகள் சமர்ப்பிக்கப்படும். அம்பாளுக்கு கூழ், பாயசம் முதலான சாத்வீக உணவுகள் அதாவது சக்தியின் உக்கிரத்தைத் தணிக்கும் உணவுகள் படையலிடப்படும்.
முருகப்பெருமானுக்கு எலுமிச்சை சாதம் விசேஷம். காலபைரவருக்கு மிளகு கலந்த உணவும் தயிர்சாதமும் நைவேத்தியத்துக்கு பயன்படுத்துவார்கள். பிள்ளையாருக்கு சுண்டலும் கொழுக்கட்டையும் படையலிடுவது வழக்கம்.
அம்பாளுக்கும் பெருமாளுக்கும் இனிப்பான உணவு படையலிடுவது மகத்துவம் நிறைந்தது. பால் கலந்த உணவை பெருமாளுக்கு நைவேத்தியமாகப் படைப்பார்கள். அதேபோல், புளியோதரையும் மிகச்சிறந்த நைவேத்தியம்.
மகாவிஷ்ணுவுக்கு புளியோதரை, பால் பாயசம், தயிர்சாதம் உன்னதமான பிரசாதம். அதேபோல், சர்க்கரைப் பொங்கலும் அக்கார அடிசிலும் மிகச்சிறந்த இனிப்பான நைவேத்தியம்.
எந்தக் கடவுளை வழிபடுவதாக இருந்தாலும் முதலில் கோலமிட வேண்டும். பின்னர் விளக்கேற்ற வேண்டும். பூக்களால் அலங்கரிக்க வேண்டும். அந்தந்த தெய்வங்களுக்கு உரிய துதியை, ஸ்லோகத்தை, ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்துவிடவேண்டும்.
பூஜையின் நிறைவில், நைவேத்தியம் செய்ய வேண்டும். கோலமிட்ட இடத்தில், வாழை இலையை வைத்து உணவு பரிமாற வேண்டும்.
பெருமாளுக்கு பால் பாயசம் நைவேத்தியம் செய்வது விசேஷம். கொஞ்சம் புளியோதரையும் தயிர்சாதமும் நைவேத்தியம் செய்து தீபாராதனை செலுத்தி பூஜையை நிறைவு செய்யுங்கள்.
பின்னர், காகத்துக்கு உணவிடுங்கள். அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள். முடிந்தால் நான்கு பேருக்கேனும் புளியோதரைப் பொட்டலமோ தயிர்சாதப் பொட்டலமோ வழங்குங்கள். மகாவிஷ்ணுவின் பேரருளைப் பெறலாம். மங்காத செல்வம் கிடைக்கப் பெறுவீர்கள். இல்லத்தில் நிம்மதியும் அருள் கடாக்ஷமும் நிறைந்திருக்கும்.