

செவ்வாய் பிரதோஷத்தில் சிவபெருமானை வணங்குங்கள். வளர்பிறை பிரதோஷத்தில் தென்னாடுடைய ஈசனையும் நந்திதேவரையும் தரிசித்துப் பிரார்த்தனை செய்யுங்கள். வளமும் நலமும் பெறுவீர்கள். செல்வமும் யோகமும் பெறுவீர்கள். இன்று 29ம் தேதி செவ்வாய்க்கிழமை, பிரதோஷம். வளர்பிறை பிரதோஷம்.
தென்னாடுடைய சிவனை எப்போது வணங்கினாலும். எப்போது தரிசித்தாலும் சிவனாரின் பூரண அருளைப் பெறலாம். திங்கட்கிழமையை சோமவாரம் என்பார்கள். சோமன் என்றால் சந்திரன். பிறையை சிரசில் வைத்து சூடிக்கொண்டிருக்கும் சிவபெருமானை திங்கட்கிழமையை வழிபடுவது சிறப்பு என்பார்கள்.
அதேபோல் மாதந்தோறும் வருகிற சிவராத்திரியும் விசேஷமானது. இந்தநாளில் விரதமிருந்து சிவ தரிசனம் பூஜை செய்வதும் சிவனாருக்கு நடைபெறும் அபிஷேகத்தை கண்ணார தரிசிப்பதும் மிகுந்த பலன்களைத் தரக்கூடியது.
இதேபோல், சிவ வழிபாட்டில் மிக முக்கியமானது பிரதோஷம். பிரதோஷ காலத்தில் சிவாலயத்துக்குச் சென்றாலே புண்ணியம் என்கின்றன சிவயோக நூல்கள். பிரதோஷம் என்பது அமாவாசைக்கு மூன்று நாட்களுக்கு முன்பும் பெளர்ணமிக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவும் வரக்கூடியது. திரயோதசி திதியில் வருவதுதான் பிரதோஷம்.
பிரதோஷ நேரம் என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரை. செவ்வாய்க்கிழமை அன்று வரக்கூடிய பிரதோஷம் தோஷங்களையெல்லாம் விலக்கக்கூடியது. செவ்வாய்ப் பிரதோஷத்தில், அருகில் உள்ள சிவாலயம் செல்லுங்கள். நந்திதேவருக்கும் சிவலிங்கத் திருமேனிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். இதில் கலந்துகொண்டு மனதார வேண்டிக்கொள்ளுங்கள்.
முடிந்தால், அபிஷேகத்துக்கு உரிய பொருட்களை வழங்குவது பல நன்மைகளை வாரி வழங்கும். வில்வம் வழங்குங்கள். நந்திதேவருக்கு அருகம்புல் சார்த்துங்கள். எதுவுமே இல்லையெனினும் சிவ தரிசனம் செய்யுங்கள். வாழ்வில் வளமும் நலமும் பெறுவீர்கள்.
செவ்வாய்ப் பிரதோஷம் விசேஷம். வளர்பிறை பிரதோஷமும் மகத்துவம் கொண்டது. இன்று செவ்வாய்கிழமை. பிரதோஷம். வளர்பிறை பிரதோஷமும் கூட.
தோஷங்களையெல்லாம் நீக்கவல்ல பிரதோஷத்தில் கலந்துகொள்ளுங்கள். சந்தோஷத்தையும் நிம்மதியையும் தரவல்ல பிரதோஷ பூஜையில் கலந்துகொண்டு மனதார வேண்டிக்கொள்ளுங்கள். மகத்தான வாழ்வைப் பெறுவீர்கள்.