Last Updated : 25 Sep, 2020 01:42 PM

 

Published : 25 Sep 2020 01:42 PM
Last Updated : 25 Sep 2020 01:42 PM

சுக்கிர யோகம் தரும் கஞ்சனூர் 

கோயில் நகரம் கும்பகோணத்தில் இருந்து 18 கி.மீ. தொலைவிலும் ஆடுதுறையில் இருந்து சூரியனார் கோயிலுக்கு அருகிலும் அமைந்துள்ளது கஞ்சனூர் திருத்தலம். பாடல் பெற்ற திருத்தலங்களில் இது 36வது திருத்தலம் என்று போற்றப்படுகிறது.

புராண - புராதனப் பெருமைகள் கொண்ட திருத்தலம். கஞ்சனூர் என்றும் கஞ்சனூர் சதுர்வேதி மங்கலம், நல்லாற்றுக் கஞ்சனூர், நாட்டுக் கஞ்சனூர் என்றெல்லாம் புராணமும் சரித்திரமும் சொல்லுகிற திருத்தலம் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

புலாசவனம், பராசரபுரம், கம்ஸபுரம், அக்னிபுரம், மோட்சபுரம் என்றெல்லாம் புராணம் இந்தத் தலத்தை விவரித்துள்ளது. கம்சன் வழிபட்ட திருத்தலம் கம்சனூர் எனப்பட்டு பின்னாளில் கஞ்சனூர் என மருவியதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.

கஞ்சனூரில் குடிகொண்டிருக்கும் திருத்தலத்தின் இறைவனின் திருநாமம் ஸ்ரீஅக்னீஸ்வரர். முக்தி தரும் தலம் என்றும் மோட்சத்தை அடைய அருள்பாலிக்கும் தலம் என்றும் போற்றப்படுகிறது.

இந்தத் தலமானது சுக்கிர திருத்தலம் எனப்படுகிறது.

தேவாரம் பாடிய திருத்தலம் எனும் பெருமையும் கஞ்சனூருக்கு உண்டு.

வானவனை வலிலவமும் மறைக்காட்டானை
மதிசூடும் பெருமானை மறையோன் தன்னை
ஏனவனை இமவான் பேதையோடும்
இனிதிருந்த பெருமானை ஏத்துவார்க்குத்
தேனவனைத் தித்திக்கும் பெருமான் தன்னை
தீதிலா மறையோனை தேவர் போற்றும்
கானவனை கஞ்சனூர் ஆண்ட கோவைக்
கற்பகத்தை கண்ணாரக் கண்டுய்ந்தேனே

என்று திருநாவுக்கரசர் கஞ்சனூர் சிவனாரை துதித்துப் பாடியுள்ளார்.

நவக்கிரகங்களில் சுக்கிர பகவானுக்கு உரிய தலம். இந்த தலத்து இறைவனை திருநாவுக்கரசரின் இந்த தேவாரப் பாடலைப் பாடி மனதார வேண்டிக்கொண்டால், மங்கல காரியங்கள் நடைபெறும். மங்காத செல்வம் கிடைக்கப் பெறலாம்.

சுக்கிர பகவானை மனதாரப் பிரார்த்தனை செய்து, நாவுக்கரசரின் தேவாரப் பாடலை பாராயணம் செய்து வழிபடுவோம். வளமும் நலமும் பெறுவோம். சுக்கிர யோகத்தைப் பெறுவோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x