திட்டையில் தனி சந்நிதியில் நவக்கிரக குரு

திட்டையில் தனி சந்நிதியில் நவக்கிரக குரு
Updated on
1 min read

திட்டையில் நவக்கிரகத்தில் உள்ள குரு பகவான், தனிச்சந்நிதியில் எழுந்தருளி காட்சி தருகிறார். வியாழக்கிழமைகளில், திட்டை குரு பகவானை வணங்குங்கள். குரு யோகமும் குருவருளும் கிடைக்கப் பெறுவீர்கள்.

தஞ்சாவூரில் இருந்து சுமார் 11 கி.மீ. தொலைவில் உள்ளது திட்டை. தென்குடித்திட்டை என்று போற்றப்படுகிறது. அருகில் மெலட்டூர், இந்தப் பக்கம் திருக்கருகாவூர் என்று தலங்கள் இருக்கின்றன.

சிறிய ஊரான திட்டை திருத்தலத்தில், கோயிலும் எதிரே திருக்குளமும் என அழகுற அமைந்துள்ளது குரு பகவான் குடிகொண்டிருக்கும் ஆலயம். இங்கே சிவபெருமானின் திருநாமம் வசிஷ்டேஸ்வரர். வசிஷ்டர் முதலானவர்கள் தவமிருந்து வழிபட்ட புண்ணிய க்ஷேத்திரம்.

ஒருவருக்கு திருமணம் நடக்கவேண்டுமெனில் குருவின் பார்வை வேண்டும். குருவருள் வேண்டும். குருவருள் இருந்தால்தான் திருமண பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம். இதைத்தான் புராணமும் தெரிவிக்கிறது.

ஆனானப்பட்ட உமையவள், சிவனாரை மணம் புரிய வேண்டினாள். குரு பார்வை வேண்டும் என்பதை அறிந்தாள். திட்டை எனும் திருத்தலத்துக்கு வந்தாள். தேவ குருவான பிரகஸ்பதியை மனதார நினைத்து தவம் புரிந்தாள். இதன் பலனாக குருவின் பார்வை கிடைக்கப்பெற்றாள். சிவனாரைத் திருமணம் புரிந்தாள் என விவரிக்கிறது புராணம்.

திட்டை என்றால் மேடு என்று அர்த்தம். வாழ்வில் பள்ளத்தில் இருப்பவர்களை, கீழே இருப்பவர்களை மேலே உயர்த்தி அருளுவதற்காகவே இங்கே தனிச்சந்நிதி கொண்டிருக்கிறார் குரு பகவான்.

நவக்கிரகத்தில் இருக்கும் குரு பகவான், தேவ குருவான பிரகஸ்பதி. சிவனாரின் அருள் பெற்று, நவக்கிரகங்களில் ஒரு கிரகமாக வீற்றிருக்கிறார். அந்த நவக்கிரக குரு பகவான், தனிச்சந்நிதியில் அருள்பாலிக்கும் ஒப்பற்ற திருத்தலம்தான் திட்டை திருத்தலம்.

திட்டை குருபகவானை வியாழக்கிழமையிலும் ஞாயிற்றுக்கிழமையிலும் வந்து தரிசியுங்கள். குருவின் பார்வை நம் மீது பட்டாலே போதும்... குருவருளும் திருவருளும் கிடைக்கப் பெறலாம்.

நல்ல படிப்பிருந்தும் வேலை இல்லை என்று வருந்துவோர், அதிக சம்பளம் இல்லையே என்று கலங்குவோர், உரிய வயது வந்தும் திருமணம் இன்னும் கைகூடவில்லையே என்று கண்ணீர் விடுபவர்கள், தஞ்சாவூருக்கு அருகில் உள்ள திட்டை வசிஷ்டேஸ்வரர் திருத்தலத்துக்கு வந்து, தனிச்சந்நிதியில் அருள்பாலிக்கும் குரு பகவானை வணங்கி வழிபடுங்கள். தரிசித்துப் பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள்.

குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். குருவின் பார்வை கிடைக்கப் பெறுவீர்கள். இதுவரை இருந்த குழப்ப நிலையெல்லாம் மாறும். மனதில் தைரியமும் புத்தியில் தெளிவும் காரியத்தில் வெற்றியும் தந்தருள்வார் குரு பகவான்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in