

அஷ்டமி திதியில் பைரவரை வழிபடுங்கள். நம் கஷ்டங்களையெல்லாம் தீர்த்து வைப்பார் காலபைரவர்.
சிவாலயங்களில் நம்மையும் இந்த உலகையும் காக்கும் கடவுளாக சிவனார், லிங்கத்திருமேனியில் வீற்றிருக்கிறார். சிவமந்திரம் சொல்லியும் சிவநாமம் சொல்லியும் சிவபெருமானை பூஜித்து வந்தால் ஞானமும் யோகமும் கிடைக்கப் பெறலாம். முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.
அதேபோல் உலகுக்கே தாயுமாகி நிற்கும் கருணைக் கடலான அம்பாள், நின்ற திருக்கோலத்தில் ஆலயங்களில் அற்புதமாகக் காட்சி தருகிறாள். நம்முடைய கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் அவற்றை, தாயைப் போல பரிவுடன் அறிந்து அருள்பாலிக்கும் ஒப்பற்ற தெய்வமாகத் திகழ்கிறாள்.
சிவாலயத்தில் சிவனாரும் அம்பாளும் மட்டுமா இருக்கிறார்கள்?
கோஷ்ட தெய்வங்களாக தட்சிணாமூர்த்தியும் துர்கையும் பிரம்மாவும் அருள்பாலிக்கிறார்கள். திருச்சுற்றுப் பிராகாரத்தில், கணபதி பெருமானும் முருகப்பெருமானும் காட்சி தருகிறார்கள். அதேபோல், பிராகாரம் முடியும் இடத்தில், பைரவரின் சந்நிதி அமைந்திருக்கும்.
பைரவர், சக்தி வாய்ந்தவர். சதிகளையும் எதிர்ப்புகளையும் முறியடிப்பவர். அந்த ஆலயத்தையே காவலனாக இருந்து காப்பவர். அதுமட்டுமின்றி, தன்னை வணங்கும் சிவ பக்தர்களையெல்லாம் தீய சக்திகள் அண்டாமல் காத்தருள்பவர்.
கலியுகத்துக்கு காலபைரவர் என்றொரு வாசகம் உண்டு. நடந்துகொண்டிருக்கும் கலியுகத்தில், காலபைரவரே பக்கத்துணையாக இருக்கிறார். அகிலத்து மக்களுக்கு ஒரு குறைவும் நேராமல் அவர் நொடிப்பொழுதில் காத்தருள்கிறார்.
பைரவரின் வாகனம் நாய். எனவே தெருநாய்களுக்கு உணவளித்தாலே பைரவரின் பேரருளைப் பெறலாம் என்பது ஐதீகம். அதேபோல், எதிரிகளை வீழ்த்த, எதிர்ப்பையெல்லாம் தவிடுபொடியாக்க, பைரவருக்கு மிளகு கலந்த சாதம் நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்வது ரொம்பவே விசேஷம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
அதேபோல், பைரவருக்கு வடை மாலை சார்த்தி வேண்டிக்கொள்வதும் தடைகள் அனைத்தையும் நீக்கி அருள்வார் பைரவர் என்கிறார்கள்.
அஷ்டமி நாளில், பைரவர் வழிபாடு செய்யுங்கள். பைரவாஷ்டகம் பாராயணம் சொல்லி பிரார்த்தனை செய்யுங்கள். தெருநாய்களுக்கு உணவளியுங்கள். இயலாதெனில், தெருநாய்களுக்கு பிஸ்கட்டாவது வழங்குங்கள்.
பைரவரில் எட்டு வகையான பைரவர்கள் உண்டு. அஷ்ட பைரவர்கள் என்றே அழைக்கப்படுகிறது. இவர்களில், சொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு இன்னும் சிறப்புகளைக் கொண்டது. அஷ்டமியிலும் மற்ற நாட்களிலும் பைரவருக்கு செந்நிற மலர்கள் சூட்டியும் பைரவாஷ்டகம் சொல்லியும் வழிபட்டு பிரார்த்தனை செய்துகொண்டால், சகல ஐஸ்வரியங்களையும் தந்தருள்வார் சொர்ணாகர்ஷண பைரவர் என்பது ஐதீகம். இல்லத்தில் சுபிட்சம் நிறைந்திருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை!
நாளைய தினம் 24ம் தேதி அஷ்டமி. பைரவரை வழிபடுங்கள்; பலன் பெறுங்கள்!