

சப்த மாதர்கள் ஏழு பேர். அவர்களில் ஐந்தாவதாக இருப்பவள் வராஹி தேவி. அமாவாசையில் இருந்து ஐந்தாவது நாளான பஞ்சமி திதி என்பது வராஹி தேவி, வழிபடுவதற்கு உண்டான அற்புதமான நாள்.
பஞ்சமி திதியின் தேவதையான வராஹி தேவியை வழிபட்டு வந்தால், நம் வீட்டின் பஞ்சத்தையும் உலகத்தின் பஞ்சத்தையும் நீக்கி அருளுவாள்; போக்கி அருளுவாள் தேவி.
பிராம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராஹி, இந்திராணி, சாமுண்டி முதலானோர்தான் சப்த மாதர்கள். இந்த ஏழு தேவிகளில், ஏழு தேவதைகளில், ஏழு சக்திகளில்... முற்றிலும் மாறுப்பட்டவளாகத் திகழ்கிறாள் வராஹி. மனித உடலும், வராகி எனப்படும் பன்றி முகமும் கொண்டவள். கோபத்துடனும் உக்கிரத்துடனும் திகழ்கிறாள்.
அப்படி ரெளத்திரம் பொங்க இருந்தாலும் அன்பே உருவானவள். கருணையே வடிவானவள். தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு பக்கத்துணையாக இருப்பவள். அவளின் சந்நிதியில் நின்று முறையிடுவோரின் கண்ணீரைத் தாயைப் போல் பரிவுக் கொண்டு துடைத்து அருளுபவள் வராஹிதேவி என்று போற்றுகின்றனர்.
புண்ணிய க்ஷேத்திரமான காசியம்பதியில், வராஹிக்கு சந்நிதி உள்ளது. இங்கே உள்ள வராஹியம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள். உக்கிரமாக இருந்தாலும், உண்மையான பக்தர்களுக்கு அருள்பாலிப்பவள். வரங்களை வாரி வழங்குவதில் வள்ளல் இவள் என்று கொண்டாடுகிறார்கள் பக்தர்கள்.
காசியைப் போலவே தஞ்சை பெரியகோயிலிலும் வராஹிக்கு சந்நிதி அமைந்துள்ளது. இவை தவிர, பல சிவாலயங்களில், சப்த மாதர்களுக்கென்று சந்நிதி இருக்கும். அங்கே, சப்தமாதர்களில் ஒருத்தியாக, சப்த தேவியரில் ஒருத்தியாக இருந்து அருள்மழை பொழிந்துகொண்டிருக்கிறாள் வராஹி.
சப்தமாதர்கள் இருந்தாலும் பராசக்தியின் போர்ப்படைத் தளபதியாகத் திகழும் வராஹிதான், நம்மைக் காக்கும் சக்தியாகவும் திகழ்கிறாள். நமக்கு எந்தவொரு துரும்பளவு துன்பமென்றாலும் அதைக் கண்டு பொறுக்காமல் உடனே அபயமளிப்பாள்; காத்தருள்வார் என்பது ஐதீகம்.
வராஹியை வழிபட்டால், செவ்வரளி மாலையோ எலுமிச்சை மாலை சார்த்தியோ வழிபட்டால், இன்னல்களைத் தீர்ப்பாள். கல்யாண வரம் தந்திடுவாள். மங்கல காரியங்களை நடத்திக் கொடுப்பாள்.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மனமுருக பிரார்த்தனை செய்தால் போதும்... குழந்தை பாக்கியம் தந்திடுவாள். வழக்கு விவகாரங்களில் மன உளைச்சலுக்கு ஆளானவர்கள், வராஹி தேவிக்கு எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து, தொடர்ந்து வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் வேண்டிக்கொண்டால், வழக்கில் வெற்றியும் நிம்மதியும் கிடைக்கும்.
பஞ்சமி திதியில், வராஹி நாயகியை மனதார வழிபடுங்கள். மங்காத செல்வம் தந்து காத்திடுவாள் தேவி.