Last Updated : 21 Sep, 2020 10:47 AM

 

Published : 21 Sep 2020 10:47 AM
Last Updated : 21 Sep 2020 10:47 AM

வளர்பிறை பஞ்சமி; வளமெல்லாம் தருவாள் வராஹி! 

வராஹி தேவியை வழிபட்டால், எதிர்ப்புகள் அனைத்தும் விலகும். குறிப்பாக, வளர்பிறை பஞ்சமி திதியில், வராஹியை வழிபட்டு பிரார்த்தனை செய்துகொண்டால், சகல தடைகளையும் நீக்கி அருளுவாள் தேவி. அருகில் வராஹி சந்நிதி அமைந்திருக்கும் கோயில் இருந்தால் சென்று தரிசியுங்கள். இல்லையென்றாலும் வீட்டில் விளக்கேற்றி வழிபடலாம் என்கிறார்கள் வராஹி பக்தர்கள்.

தேவதைகள் எல்லோருமே சக்தி வாய்ந்தவர்கள்தான். தேவதா சக்தி என்று மிகப்பெரிய விளக்கமே கொடுத்திருக்கிறது புராணம். இவர்களில் சக்திவாய்ந்த தேவதையாக போற்றப்படுகிறாள் வராஹி தேவி.

மகா சக்தியாகத் திகழும் பராசக்தி, தன்னில் இருந்து ஒவ்வொரு சக்தியாக வெளிப்படுத்தினாள். அவர்களைக் கொண்டு அசுரக் கூட்டங்களையும் தீய சக்திகளையும் அழித்தொழித்தாள் என்று விவரிக்கிறது புராணம்.

இந்த சக்திகளில் ஏழு சக்திகளுக்கு தனியிடம் கொடுத்து கெளரவப்படுத்தினாள் பராசக்தி. இந்த ஏழுபேரும் கொண்டவர்களை, சப்த மாதர்கள் எனப் போற்றுகிறோம், போற்றி வணங்குகிறோம் என்கிறார்கள் ஸாக்த வழிபாடு செய்பவர்கள்.

சப்த மாதர்களில் அதீத வீரியமும் தீய சக்திகளை அழிப்பதில் வேகமும் துடிப்பும் கொண்டு ஓடோடி வருபவள் வாராஹிதேவி. சப்தமாதர்களுக்கு சந்நிதி என்பது சோழர்கள் காலத்தில் பல ஆலயங்களில் அமைக்கப்பட்டன. யுத்தம் முதலான முக்கிய நிகழ்வுகளின் போது, சப்த மாதர்களுக்கு படையல் போடப்பட்டு, வழிபாடுகள் நடத்தப்பட்டன. போருக்குச் செல்வதற்கு முன்னரும் போருக்குச் சென்று விட்டு வந்த பிறகும் சப்தமாதர்களை வழிபட்டார்கள்.

சப்தமாதர்களில், கெளமாரி, மகேஸ்வரி என தெய்வங்களுக்கு தனித்தனியே ஆலயங்கள் எழுப்பப்பட்டன. பின்னாளில், அடுத்தடுத்த கட்டங்களில், வாராஹிக்கு கோயில்கள் எழுப்பப்பட்டு, பூஜைகளும் வழிபாடுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

இன்றைய காலகட்டத்தில், தஞ்சாவூர் பெரியகோயிலில் வாராஹியை தரிசிக்கலாம். ஆனால் ராஜராஜ சோழன் வாராஹி தேவிக்கு, பெரியகோயிலில் சந்நிதி எழுப்பவில்லை. பின்னாளில்தான், அதுவும் சமீபத்தில்தான் வாராஹியின் சிலையைக் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. வராஹியை வணங்கி வருகிறார்கள் பக்தர்கள்.

பஞ்சமி திதி என்பது வாராஹியை வழிபடுவதற்கான மிக முக்கியமான நாள். இந்தநாளில், மனதார வாராஹி தேவியை மனதார வழிபட்டால், எல்லா நல்லதுகளும் நடத்தித் தருவாள் வாராஹி. வளர்பிறை பஞ்சமிதான் ரொம்பவே சிறப்பு வாய்ந்தது என்றாலும் தேய்பிறை பஞ்சமியிலும் வராஹியைத் தரிசிக்கலாம். விளக்கேற்றி வழிபடலாம்.

இன்று செப்டம்பர் 21ம் தேதி பஞ்சமி. வளர்பிறை பஞ்சமி.இந்தநாளில், அருகில் வராஹி சந்நிதி அமைந்திருக்க்கும் ஆலயத்துக்குச் செல்லுங்கள். வழிபடுங்கள். பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள்.

அருகில் ஆலயம் இல்லையென்றாலும் பரவாயில்லை... மாலையில் வீட்டில் விளக்கேற்றுங்கள். பூஜையறையில் அமர்ந்து வாராஹி அம்மனை மனதுக்குள் கொண்டு வந்து,ஆத்மார்த்தமாக வேண்டிக்கொள்ளுங்கள். தீயசக்திகளையெல்லாம் அழித்து நம்மைக் காத்தருள்வாள் தேவி. தீயசக்திகளை நமக்கு அருகில் நெருங்கவிடாமல் காப்பாள். எதிர்ப்புகளையெல்லாம் தவிடுபொடியாக்குவாள் வராஹிதேவி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x