

ஞாயிற்றுக்கிழமையன்று வரும் சதுர்த்தியில், ஆனைமுகனுக்கு அருகம்புல் மாலை சார்த்தி வேண்டிக்கொள்ளுங்கள். அல்லல்களில் இருந்தும் கஷ்டங்களில் இருந்தும் நம்மைக் காத்தருள்வார் கணபதி பெருமான். விநாயகப் பெருமானை மனதார பிரார்த்தித்துக் கொண்டு, சிதறுகாய் உடைத்து வேண்டுதலைச் சொல்லுங்கள். உங்கள் வேதனைகளையெல்லாம் போக்கியருள்வார் ஆனைமுகத்தான். தடைகளையெல்லாம் தகர்த்து அருளுவான் பிள்ளையாரப்பன். நாளைய தினம் செப்டம்பர் 20ம் தேதி சதுர்த்தி.
சிவனாருக்கு உகந்தது திரயோதசி. அதேபோல் சிவகுமார மைந்தனான பிள்ளையாருக்கு உகந்தது சதுர்த்தி. மாதந்தோறும் வருகிற சதுர்த்தி என்பது விநாயகப் பெருமானுக்கு உகந்த அற்புதமான நாட்கள்.
இந்த நாட்களில், விரதமிருந்து பிள்ளையாரப்பனை வணங்குவார்கள் பக்தர்கள். மாதந்தோறும் பிரதோஷ நாளில் சிவனாருக்கு விரதம் மேற்கொள்வது போல, முருகப்பெருமானுக்கு சஷ்டியன்று விரதம் மேற்கொள்வது போல, விநாயகப்பெருமானுக்கு சதுர்த்தியன்று விரதம் மேற்கொள்வார்கள்.
இந்தநாளில், மகா கணபதி மந்திரம் சொல்லி ஜபிப்பது பன்மடங்கு பலன்களைத் தரும். கணபதியின் பீஜமந்திரத்துக்கு மகா பலம் உண்டு. பீஜமந்திரத்தைச் சொல்லி, கணபதி பெருமானுக்கு வெள்ளெருக்கு மாலை சார்த்தி வேண்டிக்கொண்டால், வேதனைகளும் துக்கங்களும் பனி போல் விலகி மறையும் என்பது ஐதீகம்.
இதேபோல், விநாயகருக்கு சுண்டல் அல்லது பாயசம் அல்லது கொழுக்கட்டை நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்வதும் அக்கம்பக்கத்தாருக்கு விநியோகிப்பதும் எண்ணற்ற பலன்களைத் தரும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
சதுர்த்தியானது எந்தநாளில் வந்தாலும் விசேஷம்தான். ஞாயிற்றுக்கிழமை வரக்கூடிய சதுர்த்தியானது, மகோன்னதமானது. நாளைய தினம் 20ம் தேதி, சதுர்த்தி நன்னாள்.
இந்தநாளில், நாளைய தினத்தில், ஆனைமுகனை வழிபடுவோம். வெள்ளெருக்கு மாலை சார்த்தி வழிபடுவோம். அருகம்புல் மாலை சார்த்தி வழிபடுவோம். முடிந்தால், விநாயகப் பெருமானை மனதார பிரார்த்தித்துக் கொண்டு, சிதறுகாய் உடைத்து வேண்டுதலைச் சொல்லுங்கள். உங்கள் வேதனைகளையெல்லாம் போக்கியருள்வார் ஆனைமுகத்தான். தடைகளையெல்லாம் தகர்த்து அருளுவான் பிள்ளையாரப்பன்.