

‘நீங்கள் யாருக்குத் தந்தாலும் அது எனக்குத் தந்ததாகவே நான் நினைத்து மகிழ்வேன். ஆகவே, எனக்கென்று எதுவும் கொடுக்கத் தேவையில்லை. நீங்கள், எவருக்கு வேண்டுமானாலும் கொடுங்கள். எவருக்கு எது வேண்டுமோ அவற்றைக் கொடுங்கள். அவை அனைத்துமே எனக்கு வந்துசேரும்’’ என்கிறார் பகவான் ஷீர்டி சாயிபாபா.
பகவான் சாயிபாபா, நீக்கமற எங்கும் நிறைந்திருக்கிறார். நாம் எந்த ஊரிலிருந்து அழைத்தாலும் அங்கே நம்மைத் தேடி வந்து அருள்பாலிக்கிறார்.
ஷீர்டி எனும் ஊர், இன்றைக்கு புண்ணிய பூமியாக பக்தர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஷீர்டி எனும் ஊர், புண்ணிய ஸ்தலம் என்று கொண்டாடப்படுவதற்கும் ஆராதிக்கப்படுவதற்கும் பகவான் சாயிநாதனே காரணம்.
பகவான் சாயிபாபாவின் திருப்பாதம் பட்ட பூமி இது. இந்தத் தலத்தில்தான் அவர் உரையாடியிருக்கிறார். பக்தர்களுக்கு தரிசனம் தந்திருக்கிறார். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கெல்லாம் பல அருளாடல்களை நிகழ்த்தியிருக்கிறார்.
இன்றைக்கும் ஷீர்டி திருத்தலம் என்றில்லாமல், எல்லா இடங்களிலும் தன் அருளாடல்களை சூட்சுமமாக நிகழ்த்திக் கொண்டே இருக்கிறார். அவரின் லட்சக்கணக்கான பக்தர்களும், ‘சாயிராம்’ என்று அழைத்தால் போதும், எங்களுக்கு அருகில் வந்துவிடுவார் பாபா. எங்களின் குறைகளைப் பார்த்துவிட்டு, அவரே எங்களை நிவர்த்தி செய்து அருளுவார்’ என்கின்றனர்.
பகவான் சாயிபாபாவுக்கு பட்டு வஸ்திரம் தருகிறேன், கிரீடம் சார்த்துகிறேன் என்றெல்லாம் வேண்டிக்கொள்ளத் தேவையில்லை என்கிறார்கள் பக்தர்கள்.
ஆமாம்... பாபா ஒருபோதும் இவற்றையெல்லாம் விரும்புவதே இல்லை. பக்தர்களிடம் இவற்றையெல்லாம் எதிர்பார்ப்பதே இல்லை. எவருக்கு எவையெல்லாம் தேவையோ அவற்றை தன் பக்தர்களைக் கொண்டே நடத்தி அருளுவார் சாயிபாபா.
‘’நீங்கள் எனக்கென்று எதுவும் தரவேண்டாம். எவருக்கு என்ன தேவையோ, எவரிடம் என்ன இல்லை என்று அவர்கள் கலங்குகிறார்களோ, அவற்றை என்னுடைய அன்பர்கள் அவர்களுக்கு வழங்குங்கள். நீங்கள் அவர்களுக்குக் கொடுக்கிறீர்கள். ஆனால் அவை எல்லாமே எனக்கு நீங்கள் வழங்கியதுதான். யாருக்கு நீங்கள் எது தந்தாலும் அது எனக்குத் தந்ததாகவே நான் உணருகிறேன். உங்களை எப்போதும் நான் பார்த்துக்கொள்ளுவேன்’’ என்கிறார் ஷீர்டி சாயிபாபா.
அதனால்தான் பாபாவின் பக்தர்கள், தங்களால் இயன்றவற்றை மந்திர்களிலும் ஆலயங்களிலும் செய்து, பாபாவுக்கு அர்ப்பணிக்கிறார்கள்.
உலகத்து மக்கள் அனைவரையும் பார்த்துக்கொண்டே இருக்கிறார் பாபா. அவர்களுக்கு எவையெல்லாம் தேவை என்பதை அறிந்தும் அவற்றை தன் அன்பர்களைக் கொண்டே வழங்குவதையும் கடமையாகவும் சேவையாகவும் வேலையாகவும் கொண்டு அருளாற்றிக் கொண்டே இருக்கிறார் சாயிபாபா.