Last Updated : 17 Sep, 2020 09:14 AM

 

Published : 17 Sep 2020 09:14 AM
Last Updated : 17 Sep 2020 09:14 AM

குடும்பத்தாருக்கு திருஷ்டி சுற்றிப் போடுங்கள்;  மகாளய பட்ச அமாவாசையில் திருஷ்டி கழிப்பது விசேஷம்

மகாளய பட்ச அமாவாசையில், வீட்டில் உள்ளவர்களுக்கும் வீட்டுக்கும் திருஷ்டி சுற்றிப் போடுவது மிகவும் விசேஷம். நல்ல அதிர்வுகளை உருவாக்கி, இதுவரை இருந்த திருஷ்டியெல்லாம் கழிந்துவிடும். குடும்பத்தாருக்கு இன்று திருஷ்டி சுற்றிப் போடுங்கள்.

முன்பெல்லாம் எல்லா வீடுகளிலும் வாரம் தவறாமல் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு திருஷ்டி கழிப்பார்கள். நன்றாக ஓடியாடிக் கொண்டிருந்த குழந்தை சுணங்கிக் கொண்டிருக்கும். எப்போதும் ஆபீஸ், வீடு என்று சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டிருக்கிற கணவர், திடீரென்று சோர்வாகிவிடுவார். பசிக்காது. பசித்தாலும் சாப்பிடப் பிடிக்காது என்ற நிலையெல்லாம் இருக்கும்.

பரபரவென இருக்கும் மனைவிக்கு ஏதேனும் படுத்தியெடுக்கும். புதிய புடவையோ, சட்டையோ வாங்கியிருந்தாலும் அதை உடுத்தமுடியாமல் தள்ளிப்போகிற நிலை உருவாகும். இடம் வாங்கி அஸ்திவாரம் போட்டிருப்போம். ஆனால் அதையடுத்து அடுத்த வேலைக்குள் இறங்க முடியாமல் ஏதோ ஒன்று தடுக்கும்.
’நல்லா ஓடியாடிக்கிட்டிருந்த புள்ள திடீர்னு சுருண்டுக்கிச்சு’ என்று குழந்தையைப் பார்த்து சொல்லுவார்கள். ‘யாரு கண்ணு பட்டுச்சோ’ என்பார்கள். ‘நடு ஹால்ல உக்காரவைச்சு, குடும்பத்தார் மொத்தம்பேருக்கும் திருஷ்டி சுத்திப் போட்ருங்க. கண்ணுகிண்ணு பட்டிருக்கும்’ என்பார்கள்.

அந்தக் காலத்தில், வெள்ளிக்கிழமை தோறும் திருஷ்டி சுற்றிப் போடுவார்கள். அமாவாசை, நல்லநாள் பெரியநாள் என்று பல நாட்களில் திருஷ்டி சுற்றிப் போடுவார்கள். வீட்டில் கல்யாணமோ காதுகுத்தோ, பிறந்தநாளோ கிரகப்பிரவேசமோ, புது வண்டி வாகனம் வாங்கினாலோ, அன்றைய நாளில் திருஷ்டி சுற்றிப் போடுவது வழக்கமாக இருந்தது. காலப்போக்கில் இவையெல்லாம் குறைந்துவிட்டன.

புரட்டாசி மகாளய பட்ச அமாவாசை நாள், கண் திருஷ்டி கழிப்பதற்கு மிகச் சிறப்பான நாள். மாதந்தோறும் அமாவாசையில் திருஷ்டி சுற்றிப் போடுவதும் நல்லதுதான். சிறப்பானதுதான். ஆனாலும் மகாளயபட்ச அமாவாசை நாளில், திருஷ்டி சுற்றிப் போடுவது இன்னும் நல்ல அதிர்வுகளை உண்டாக்கும். தடைப்பட்ட காரியங்களை நிறைவேற்றித் தரும்.

வளர்ச்சிப் பாதையில் வாழ்க்கை செல்லும். வீடு கட்டும் பணிகள் துரிதமாகும். சுணங்கிக் கிடந்த குழந்தைகள், பழையபடி உற்சாகம் பொங்க ஓடியாடுவார்கள்.

இன்று செப்டம்பர் 17ம் தேதி, மகாளய பட்ச அமாவாசை.

இந்த நன்னாளில், மாலை வேளையில் குடும்பத்தாரை வீட்டு நடு ஹாலில் கிழக்குப் பார்த்து அமரவைத்து, திருஷ்டி சுற்றிப் போடுங்கள். பூசணிக்காய், எலுமிச்சை, தேங்காய் கொண்டு திருஷ்டியிடுவது நல்லது. பூசணிக்காயில், தேங்காயில், எலுமிச்சையில் சூடமேற்றி, தெருமுச்சந்தியில் அல்லது வாசலில் உடைத்துவிடுங்கள். எலுமிச்சையை நான்காகப் உறித்து, நாலாதிசைக்குமாக வீசுங்கள்.

உங்கள் வீட்டு திருஷ்டியெல்லாம் கழியும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x