

பசுக்களுக்கு உணவிடுவது மகா புண்ணியம். பசு என்பது மகாலக்ஷ்மியின் அம்சம். மகாலக்ஷ்மி வாசம் செய்யும் இடங்களில் பசுவும் ஒன்று.
பசுவுக்கு உணவளித்து வந்தால், தீயசக்திகள் அண்டாமல் நம் இல்லத்தையும் இல்லத்தையும் காத்தருளும் என்பதாக ஐதீகம்.
பசுவுக்கு உணவும் பழகும் கொடுத்து வந்தால், கடன் தொல்லையில் இருந்து மீளச் செய்வாள் மகாலக்ஷ்மி. சகல ஐஸ்வர்யங்களையும் தந்தருள்வாள் அம்பிகை.
மகாலக்ஷ்மிக்கு உகந்த வெள்ளிக்கிழமைகளில் பசுவுக்கு உணவிட்டால், வீடு மனை வாங்குகிற யோகம் கிடைக்கப் பெறலாம்.
சனிக்கிழமைகளிலும் ஏகாதசி முதலான நாட்களிலும் பசுக்களுக்கு உணவிட்டு வணங்கினால், தோஷங்கள் அனைத்தும் விலகும். வீட்டில் உள்ள குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
ஏகாதசி, துவாதசி முதலான நாட்களில் பசுக்களுக்கு அகத்திக்கீரை வழங்கி, வழிபட்டு வந்தால், இல்லத்தில் சுபகாரியங்கள் நிகழும். தடைப்பட்டிருந்த மங்கல காரியங்கள் இனிதே நடக்கும்.
மற்ற நாட்களிலும் அகத்திக்கீரை வழங்கலாம். இதனால் பித்ருக்கள் சாபம் நீங்கும். வீட்டில் உள்ள பெண்களுக்கு தாலி பாக்கியம் பலம் பெறும்.
சூரிய பலம் கொண்ட ஞாயிற்றுக்கிழமைகளில், பசுவுக்கு உணவும் ஒரு பக்கெட்டில் தண்ணீரும் கொடுத்தால், கிரக தோஷம் எல்லாம் விலகிவிடும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் முன்னுக்கு வரலாம்.
திங்கட்கிழமையில் பசுவுக்கு உணவும் பழமும் கொடுத்து வணங்கினால், தம்பதி இடையே ஒற்றுமை மேலோங்கும். கருத்தொருமித்து வாழ்வார்கள். பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள்.
செவ்வாய்க்கிழமைகளில், பசுவுக்கு உணவு வழங்கி பிரார்த்தனை செய்துகொண்டால், சர்ப்பம் முதலான தோஷத்தால் தடையாகி இருந்த திருமணம் விரைவில் நடந்தேறும்.
புதன்கிழமை தோறும் பசுவுக்கு உணவு வழங்கி மனதாரப் பிரார்த்தனை செய்துகொண்டால், புத்தியில் தெளிவு உண்டாகும். மனோதிடம் பெருகும். மனக்குழப்பங்கள் யாவும் நீங்கும்.
வியாழக்கிழமைகளில் பசுவுக்கு உணவு அல்லது பழங்கள் வழங்கினால், குரு பலம் பெருகும். குரு பார்வை கிடைக்கப் பெறலாம். ஞானமும் யோகமும் தந்தருள்வாள் அம்பிகை.
அமாவாசையில் பசுவுக்கு உணவும் அகத்திக்கீரையும் வழங்கி வேண்டிக்கொண்டால், பித்ருக்கள் ஆசி கிடைக்கும். உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். சம்பளம் பெருகும். வீட்டில் நிம்மதி நிலைக்கும்.
பெளர்ணமியில் பசுவுக்கு உணவிட்டு வணங்கி வந்தால், நோயுள்ளவர்கள் குணம் அடைவார்கள். ஆரோக்கியம் அபிவிருத்தியாகும். இல்லத்தில் தனம் தானியம் பெருகும்.