

மகாளய பட்ச காலத்தில், புதன்கிழமையில் முன்னோர்களை வணங்குவதுடன் பசுவுக்கு உணவிடுங்கள். வீட்டில் சுபிட்சம் நிலவும்.
மகாளய பட்ச காலம் என்பது முன்னோரை வணங்குவதற்கு உரிய நாட்கள். கடந்த செப்டம்பர் 12ம் தேதியில் இருந்து மகாளய பட்ச காலம் தொடங்கியது. இந்த பதினைந்து நாட்களும் முன்னோரை வணங்குவதற்கு உரிய நாட்கள். பித்ருக்கள், பித்ரு லோகத்தில் இருந்து பூலோகத்துக்கு வந்து, நம் வீட்டைச் சுற்றி, நம்மை பார்த்துக்கொண்டிருப்பார்கள் என்பதாக ஐதீகம்.
பட்சம் என்றால் பதினைந்து. மகாளய பட்சம் என்றால் பித்ருக்கள் கூட்டமாக வருவது என்று அர்த்தம். ஆவணி மாதத்தின் பெளர்ணமிக்கு மறுநாளான பிரதமையில் இருந்து மகாளய பட்ச காலம் தொடங்குகிறது.
அப்படித்தான் கடந்த 2ம் தேதியில் இருந்து தொடங்கியது. இந்த நாட்களில் தினமும் தர்ப்பணம் செய்வதும் முன்னோரை வணங்குவதும் முன்னோர் படங்களுக்கு பூக்களிடுவதும் அவர்களை ஆராத்தித்து பிரார்த்தனை செய்வதும் மிகுந்த பலன்களைத் தரும். அதேபோல் பித்ருக்களின் ஆத்மாவும் அமைதியுறும் என்பது ஐதீகம்.
மகாளய பட்ச காலத்தில் வருகிற துவாதசியும் பிரதோஷமும் விசேஷமானவை. துவாதசி பெருமாளுக்கு உகந்த நாள். பிரதோஷம் சிவ பூஜைக்கு உரிய நாள். துவாதசியில் முன்னோரை வணங்கி பெருமாளை வணங்கிப் பிரார்த்தித்தால், முன்னோரை தன் திருவடிகளில் சேர்த்துக்கொள்வார். இதேபோல் பிரதோஷநாள் சிறப்பு வாய்ந்தது. மகாளய பட்ச காலத்தில் வருகிற பிரதோஷம் மகா பிரதோஷம் எனப்படுகிறது.
மகாளயபட்ச காலத்தில் வரக்கூடிய புதன்கிழமை, அற்புதமான நாள். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். மேலும் புதன் பெருமாளுக்கு உரிய மகோன்னதமான நாள். இந்தநாளில், முன்னோருக்கான தர்ப்பணம் உள்ளிட்ட ஆராதனைகளை முறையே செய்துவிடுங்கள். முன்னோர் படங்களுக்கு பூக்களிட்டு வழிபடுங்கள். காகத்துக்கு உணவிடுங்கள்.
அப்படியே, மகாலக்ஷ்மியின் அம்சம் என்று போற்றப்படும் பசுவுக்கு உணவிடுங்கள். பசுவை மனதாரப் பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். இல்லத்தில் உள்ள தரித்திரம் விலகும். சுபிட்சம் பெருகும். அமைதியும் ஆனந்தமும் வீட்டில் குடிகொள்ளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.