Published : 15 May 2014 05:37 PM
Last Updated : 15 May 2014 05:37 PM

சாஸ்திரம் தலைமுறைகளின் சொத்து

நமது பழைய சாஸ்திரங்களில் இல்லாத கலைகளையோ ஸயன்ஸ்களோ மற்ற விஷயங்களோ இல்லவே இல்லை. போஜராஜன் செய்துள்ள ஸமராங்கண சூத்திரம் என்ற நூலில் பலவிதமான மிஷின்கள் செய்யும் முறைகள்கூட உள்ளன. அதில் ஆகாய விமானத்தைப் பற்றிக்கூட வருகிறது என்றால் ஆச்சரியமாக இருக்கும். போஜன் இந்த விமானத்தைப் பற்றிய சித்தாந்த முறையை (Theory) மட்டுமே சொல்லிவிட்டு, நடைமுறையில் (Practical) இதைப் பண்ணும் வழியை நான் சொல்லாததால் எனக்கு அது தெரியாது என்று நினைக்க வேண்டாம். நடைமுறையைப் பற்றி இந்த விமானம் செய்யப்பட்டால், ஜனங்களுக்கு சௌகரியத்தைவிட அசௌகரியமே அதிகமாகும் என்றே சொல்லவில்லை என்கிறார்.

ஆகாய விமானம், அணுசக்திக் குண்டு இவற்றை எல்லாம் நடைமுறைக்குக் கொண்டு வந்ததன் அனர்த்தத்தை நாம் உலக யுத்தத்தில் கண்கூடாகப் பார்த்து விட்டோம். அது ஒரு புறம் இருக்கட்டும். போஜன் சொல்லியிருக்கிற ஆகாய விமான தியரியைச் சில என்ஜினீயர்களுடன் சேர்த்து படித்துப் பார்த்ததில் பலூன், ஜோர்டான் என்ஜின் போன்ற ஒரு முறையை போஜன் சொல்கிறார் என்று தெரிய வந்தது.

பழைய காலத்தில் ஒவ்வொரு கலைக்கும் ஸயன்ஸுக்கும் தனித்தனி நூல்கள் இருந்தன. இந்த நூல்கள் ஒவ்வொன்றையும் டைஜஸ்ட் மாதிரி ஒரு அத்தியாயமாகச் சுருக்கி பிருஹத் ஸம்ஹிதை என்ற புஸ்தகத்தை வராஹமிஹிரர் எழுதியிருக்கிறார். கிட்டத்தட்ட 1500 வருஷங்களுக்கு முன் எழுதப்பட்ட இந்தப் புஸ்தகத்தில் தாவர சாஸ்திரம், மிருக சாஸ்திரம், பட்சி சாஸ்திரம், தாது சாஸ்திரம் இப்படிப் பல விஷயங்களும் அடங்கியிருந்தன. பழைய காலத்தவரின் என்ஜினீயரிங் ஞானம் இன்றுள்ள நிபுணர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

இவற்றுக்கெல்லாம் ஆதார நூல்கள், சாஸ்திரங்கள் உள்ளன. ஆயிரம், பதினாராயிரம் வருஷங்களாக தலைமுறை தலைமுறையாக ரக்ஷிக்கப்பட்டு நம் கைக்கு வந்துள்ளன. இந்த நாள்போல் அச்சுப் புஸ்தகங்கள் போடத் தெரியாத காலங்களிலும் இவற்றை நம் முன்னோர்கள் எப்படியோ காத்து நம் வரைக்கும் தந்துவிட்டார்கள். இப்படி யுகாந்திரமாக வந்த சாஸ்திரங்களை எல்லாம் நமக்குச் சகல வசதி இருந்தும், அடுத்த தலைமுறைக்குக் காத்துத் தராமல் இருக்கிறோம். ஆயிரம், பதினாராயிரம் வருஷங்களாகத் தொடர்ந்து வந்துகொண்டிருந்த இழையை அறுத்து விடுகிற பாக்கியம் நமக்கே ஏற்பட்டிருக்கிறது.

குருடன் ஒருவன் கையில் லாந்தருடன் போய்க்கொண்டிருந்தானாம். எதிரில் வந்த ஒருவன் உனக்குத்தான் கண் தெரியவில்லையே, லாந்தர் ஏன் எடுத்து வருகிறாய் என்று கேட்டான். அதற்குக் குருடன், எனக்கு கண் இல்லாவிட்டாலும் உனக்குக் கண் இருக்கிறதல்லவா. அதற்காகத்தான் இதை எடுத்து வருகிறேன். இல்லாவிட்டால் இந்த இருட்டில் நீ என்மேல் தடுக்கி விழுந்திருப்பாயே என்றானாம். அதுபோலவே பழைய சாஸ்திரகங்கள் நமக்குப் புரியாவிட்டாலும், எதிர்காலத்தில் யாருக்காவது புரியலாம். பயனாகலாம் என்பதனாலாவது அவற்றை நாம் ரக்ஷித்தாக வேண்டும். வசதியே இல்லாத காலங்களில் யுகாந்தரமாக ரக்ஷிக்கப்பட்ட சாஸ்திரங்களை நமக்கு முதல் தலைமுறையினர் எல்லா வசதியிருந்தும் காப்பாற்றாமல் அழித்து, நம்மை வஞ்சித்துவிட்டார்கள் என்று, வருங்காலத் தலைமுறையினர் நம்மைக் குற்றம் சொல்ல இடம் வைக்கலாமா.?

பழைய காலங்களில் சாஸ்திர ரக்ஷணம் அரசர்களின் பொறுப்பிலிருந்தது. இப்பொழுது ராஜாக்கள் இல்லை. ராஜ்ய, மத்ய சர்க்கார்கள்தாம் உள்ளன. அவற்றுக்கு நிம்மதியே இல்லை. ஒரு பக்கம் பாஷை சண்டை. ஒரு பக்கம் எல்லைச் சண்டை. ஏகப்பட்ட பாலிடிக்ஸ். ஊழல் இப்படிப் பல கஷ்டங்கள். அந்தக் காலத்தில் ஒரு ராஜாவுக்கும் இன்னொரு ராஜாவுக்கும் சண்டை நடந்தது என்றால், இப்பொழுது ஓரு ராஜ்ஜியத்துக்கும் இன்னொரு ராஜ்ஜியத்துக்கும் சண்டை. ஒரு வர்க்கத்துக்கும் இன்னொரு வர்க்கத்துக்கும் சண்டை. ஒரு கட்சிக்கும் இன்னொன்றுக்கும் மண்டை உடைகிறது. எனவே, சாஸ்திர ரக்ஷணத்திற்கு அரசாங்கத்தை எதிர்பார்த்துப் பிரயோஜனமில்லை.

சுற்றுப்புறத்திலெல்லாம் ஒரே பூசல், குடும்பத்திலும் தொல்லை என்று நாம் தட்டிக் கழிக்கக் கூடாது. வனவிலங்களுகளை பாருங்கள். சிங்கம் புலியை அடிக்கிறது. புலி மானை அடிக்கிறது. இருந்தாலும், காட்டிலே சிங்கக்குட்டியும், புலிக்குட்டியும், மான் குட்டியும் வளர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. அப்படி இருக்க நாமும் பழக வேண்டும். எத்தனை இடையூறு இருப்பினும், நமக்கு எதிர்காலத்தினரிடம் உள்ள கடமையையும் பொறுப்பையும் உணர்ந்து பழைய சாஸ்திரங்களை ரக்ஷித்துத் தரவேண்டும்.

தெய்வத்தின் குரல் (முதல் பாகம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x