

விபத்து மூலமாகவோ கொலை செய்யப்பட்டோ தற்கொலை செய்துகொண்டோ இறந்தவர்களுக்காக மகாளயபட்ச கஜச்சாயையில் தர்ப்பணம் செய்வதும் வழிபாடுகள் செய்வதும் மகா புண்ணியம். அந்த ஆத்மாக்கள் அமைதியுறும். ஆசி வழங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். நாளைய தினம் செப்டம்பர் 15ம் தேதி மகாளய பட்ச கஜச்சாயை.
முன்னோர் வழிபாடு ஒருபோதும் தவறவிடக்கூடாது என்கிறது சாஸ்திரம். இஷ்ட தெய்வ வழிபாட்டை விட, குலதெய்வ வழிபாட்டை விட, முன்னோர்களை வணங்குவதே மிக மிக முக்கியமான வழிபாடு. வீட்டில் ஏதேனும் சுபநிகழ்ச்சிகள் நடக்கிறதென்றால், முன்னதாக முன்னோருக்கு படையலிட்டு வழிபட்ட பிறகே தொடங்கவேண்டும்.
அதேபோல், முன்னோருக்கு தர்ப்பணம் செய்வதை பித்ருக்கடன் என்றே விளக்குகிறது தர்ம சாஸ்திரம். கடன் என்றால் கடமை. பித்ருக்களை ஆராதிப்பதே நம் இந்த ஜென்மத்துக்கான கடமை. ஒருவருடத்துக்கு மொத்தம் 96 தர்ப்பணங்கள் செய்யவேண்டும் என வலியுறுத்துகிறது சாஸ்திரம். ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பு, மாதந்தோறும் வருகிற அமாவாசை, கிரகண காலம், சிராத்தம் முதலான நாட்களில் தர்ப்பணம் செய்யவேண்டும் என்றும் எள்ளும் தண்ணீரும் அர்க்யமாக விட்டு, வழிபடவேண்டும் என்றும் வலியுறுத்துகிறது சாஸ்திரம்.
அமாவாசை தோறும் முன்னோருக்கான நாள் என்றாலும் தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை ஆகியவை ரொம்பவே சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதில் புரட்டாசி அமாவாசை மகாளயபட்ச அமாவாசை என்று போற்றப்படுகிறது.
பட்சம் என்றால் பதினைந்து. மகாளயம் என்றால் கூட்டமாக வருவது. அதாவது இந்த பதினைந்து நாட்களும் மகாளய பட்ச காலமான பதினைந்து நாட்களும் பித்ரு லோகத்தில் இருந்து முன்னோர்கள், பூலோகத்துக்கு வருகிறார்கள். குறிப்பாக, நம் வீட்டுக்கு வருகிறார்கள்.
நாம் அவர்களை நினைத்து செய்கிற தர்ப்பணங்களைப் பார்க்கிறார்கள். வழிபாடுகளை கவனிக்கிறார்கள். அவர்களுக்குப் படையலிடும் உணவை ஏற்றுக் கொள்கிறார்கள். இதில் மகிழ்கிறார்கள். நிறைவடைகிறார்கள். நம்மை ஆசீர்வதிக்கிறார்கள்.
மகாளயபட்ச பதினைந்து நாட்களும் தர்ப்பணம் செய்யவேண்டும். முன்னோர்களை வழிபடவேண்டும். காகத்துக்கு உணவிட வேண்டும். முன்னோர்களை நினைத்து தானங்கள் செய்யவேண்டும்.
இந்த பதினைந்து நாட்களும் தர்ப்பணம் செய்யாவிட்டால் கூட, வழிபாடு நடத்தாவிட்டாலும் கூட, காகத்துக்கு உணவிடாவிட்டாலும் கூட, தானங்கள் இதுவரை செய்யாவிட்டாலும் கூட.... நாளைய தினம் செப்டம்பர் 15ம் தேதி அவசியம் வழிபடச் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
நாளைய தினம் 15ம் தேதி, கஜச்சாயை தினம் என்கிறது பஞ்சாங்கம். நாளைய தினத்தில், தர்ப்பணம் செய்யவேண்டியது மிக மிக அவசியம். முக்கியமாக, விபத்தில் இறந்தவர்கள், கொலை செய்யப்பட்டு இறந்தவர்கள், தற்கொலை செய்துகொண்டு இறந்தவர்கள் முதலானோருக்கு யார் வேண்டுமானாலும் தர்ப்பணம் கொடுக்கலாம். அவர்களை எவர் வேண்டுமானாலும் வழிபடலாம். பொதுவாகவே இந்த பதினைந்து நாட்களும் யார் வேண்டுமானாலும் (பெற்றோர் இருப்பவர்கள் தவிர) இறந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தர்ப்பணம் செய்வதும் வணங்கி வழிபடுவதும் முன்னோர்களின் ஆசியை வழங்கும்.
நாளைய தினம் கணவரை இழந்த பெண்கள், கஜச்சாயை நாளில் தர்ப்பணம் கொடுப்பது விசேஷமானது. அவர்களை நினைத்து ஏதேனும் தானம் கொடுப்பது அவர்களின் முழுமையான ஆசியைப் பெற்றுத் தரும். அதேபோல், சந்நியாசம் பெற்றுக்கொண்டவர்கள் இறந்திருந்தால், அவர்களுக்காகவும் தர்ப்பணம் செய்து வழிபடலாம்.
இதேபோல், துர்மரணம் சம்பவித்தவர்களுக்கு (விபத்து, கொலை, தற்கொலையால் இறந்தவர்கள்) நாளைய தினம் தர்ப்பணம் கொடுப்பதாலும் தானங்கள் செய்வதாலும் அவர்களின் ஆத்மா அமைதி பெறும். நம்மை பரிபூரணமாக ஆசீர்வதிக்கும். அருளைப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.