Last Updated : 14 Sep, 2020 06:06 PM

 

Published : 14 Sep 2020 06:06 PM
Last Updated : 14 Sep 2020 06:06 PM

மாத சிவராத்திரி... பிரதோஷம்... சிவனாருக்கு வில்வம் கொடுங்கள்! 

மாத சிவராத்திரியும் பிரதோஷமும் இணைந்தநாளில், சிவாலயத்துக்குச் சென்று சிவலிங்கத் திருமேனியையும் நந்திதேவரையும் வழிபடுங்கள். சிவனாருக்கு வில்வம் சார்த்தி பிரார்த்தனை செய்யுங்கள். உங்களின் பிரச்சினைகளையெல்லாம் தீர்த்துவைப்பார் சிவபெருமான்.

சக்திக்கு நவராத்திரி சிவனுக்கு ஒருராத்திரி என்பார்கள். அது... சிவராத்திரி. மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரி எனப்படும். மாதந்தோறும் சிவராத்திரி வரும். இந்த நாளில் விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் உண்டு. அதேபோல், விரதம் இருக்கிறார்களோ இல்லையோ... அன்றைய தினம் சிவன் கோயிலுக்குச் சென்று தென்னாடுடைய சிவனை வழிபடுவார்கள் பக்தர்கள்.

மாத சிவராத்திரி நாளில், சிவ வழிபாடு செய்வதும் சிவனாரை தரிசனம் செய்வதும் நமசிவாயம் சொல்லி ஜபிப்பதும் மகோன்னதமான பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம். தன்னை நாடி வருவோருக்கெல்லாம் அருள் மழை பொழியச் செய்வார் சிவபெருமான்.

இதேபோல், ஒவ்வொரு பிரதோஷமும் மகத்துவம் நிறைந்தது. பெளர்ணமி மற்றும் அமாவாசைக்கு முன்னதாக மூன்று நாட்களுக்கு முன்பு திரயோதசி திதியில் பிரதோஷம் வரும். பிரதோஷ நாளில் சிவாலயம் செல்வது இதுவரை இழந்தவற்றை தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

திரயோதசி திதியில் பிரதோஷம். இதில் பிரதோஷ காலம் என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரை. இந்த நேரத்தில் எல்லா சிவன் கோயிலிலும் சிவலிங்கத் திருமேனிக்கும் நந்திதேவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். 16 வகையான அபிஷேகங்கள் நடைபெறும். இந்த அபிஷேக ஆராதனையை கண்ணாரத் தரிசித்தாலே இதுவரை இருந்த காரியத்தடைகள் அனைத்தும் விலகும் தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம்.

சிவராத்திரியும் சிவனுக்கு உரிய நாள். பிரதோஷமும் சிவனாருக்கு உகந்த நாள். சிவராத்திரியும் பிரதோசஷமும் இணைந்து வருவது ரொம்பவே விசேஷம். சிறப்புக்கு உரியது. பல மடங்கு பலன்களை வழங்கக் கூடியது.

நாளைய தினம் செப்டம்பர் 15ம் தேதி செவ்வாய்க்கிழமை, மாத சிவராத்திரி. பிரதோஷமும் கூட. எனவே இந்த அற்புதமான நன்னாளில், அருகில் உள்ள சிவாலயத்துக்குச் செல்லுங்கள். மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான நேரத்தில் நடைபெறும் பிரதோஷ பூஜையை தரிசியுங்கள். முடிந்தால் அபிஷேகப் பொருட்களை வழங்குங்கள். நந்திதேவருக்கு அருகம்புல்லும் சிவனாருக்கு வில்வமும் சார்த்தி மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்துவைப்பார் தென்னாடுடைய சிவனார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x