மகாளய பட்சம்... துவாதசி... முன்னோர் ஆசி உங்களுக்கு! மும்மடங்கு பலன்கள்; சகல ஐஸ்வர்யமும் நிச்சயம்! 

மகாளய பட்சம்... துவாதசி... முன்னோர் ஆசி உங்களுக்கு! மும்மடங்கு பலன்கள்; சகல ஐஸ்வர்யமும் நிச்சயம்! 
Updated on
1 min read

மகாளயபட்ச காலத்தில், துவாதசி திதியில், உங்கள் முன்னோர்களை வணங்கி வழிபடுங்கள். உங்கள் வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் நிறைந்திருக்க உங்களை ஆசீர்வதித்து அருளுவார்கள் முன்னோர்கள்.

மகாளய பட்சம் என்பது முன்னோர்களுக்கான காலம். மகாளயம் கூட்டாக, ஒன்றாக என்று அர்த்தம். பட்சம் என்றால் பதினைந்து நாட்கள். நம் முன்னோர்கள் அனைவரும் கூட்டாகவும் ஒன்றாகவுமாக பித்ரு லோகத்தில் இருந்து பூலோகத்திற்கு, நம் வீட்டுக்கு வந்து நம்மைப் பார்க்கிறார்கள் என்பதாக ஐதீகம்.

பித்ரு லோகத்தில் இருந்து பூலோகத்துக்கு வருகிறார்கள் முன்னோர்கள். அவர்கள் வருகிற மகாளயபட்ச காலத்தில், தினமும் முன்னோரை தர்ப்பணம் செய்து வணங்கவேண்டும், அவர்களின் படங்களுக்கு பூக்களிடவேண்டும், அவர்களுக்கு தினமும் ஏதேனும் உணவை நைவேத்தியமாகப் படைத்து, காகத்துக்கு வழங்கவேண்டும் என அறிவுறுத்துகிறது சாஸ்திரம்.

வருடத்துக்கு மொத்தம் 96 தர்ப்பணங்கள் செய்யவேண்டும் என்கிறது சாஸ்திரம். இந்த 96 தர்ப்பணங்களில்தான், மகாளய பட்ச காலமான 15 நாள் தர்ப்பணமும் அடக்கம். 96 தர்ப்பணங்களையும் செய்கிறோமோ இல்லையோ... முன்னோர் ஆராதனையை இடைவிடாமல், அனுஷ்டிக்கிறோமோ இல்லையோ... பித்ரு லோகத்தில் இருந்து பூலோகத்துக்கு முன்னோர்கள் வருகிற, பூலோகத்தில் இருக்கிற நம் வீட்டுக்கு பித்ருக்கள் என்று சொல்லப்படுகிற முன்னோர்கள் வருகிற இந்த நாட்களில், நாம் முன்னோர் ஆராதனையை தவறாமல் செய்யவேண்டும் என வலியுறுத்துகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

ஒருவேளை, மகாளய பட்சகாலமான பதினைந்து நாட்களும் செய்ய இயலாதவர்கள், ஏதேனும் ஒருநாளில் முன்னோர் வழிபாடு செய்தாலும் முன்னோர்கள் குளிர்ந்து போவார்கள். நம்மை ஆசீர்வதிப்பார்கள் என்கிறார்கள்.

மகாளயபட்ச காலத்தில் வருகிற துவாதசி திதி என்பது மிகவும் முக்கியமானது. விசேஷமானது. மகத்துவம் வாய்ந்தது. பித்ருக்களால் உண்டான சாபங்களையும் பாவங்களையும் தோஷங்களையும் போக்கவல்லது.

நாளைய தினம் திங்கட்கிழமை (14.9.2020) துவாதசி திதி. மகாளய பட்ச காலத்தின் துவாதசி திதி. மிக முக்கியமான நாள். முன்னோர் ஆராதனையைச் செய்வதால் பன்மடங்கு அருளும் ஆசியும் கிடைக்கக்கூடிய நாள்.

எனவே, நாளைய தினம் துவாதசி திதியில், மறக்காமல் தர்ப்பணம் செய்யுங்கள். முன்னோர்களையும் நம் வாழ்வில் நமக்கு உறவுகளாகவும் தோழமைகளாகவும் ஆசிரியர்களாகவும் தெரிந்தவர்களாகவும் அறிந்தவர்களாகவும் இருந்து, இறந்தவர்களுக்காக தர்ப்பணம் செய்யுங்கள். நம் முன்னோர்களின் ஆசியையும் இவர்களின் ஆசியையும் பெறுங்கள். முன்னோர்களின் படங்களுக்கு பூக்களிடுங்கள். ஏதேனும் உணவை படையலிட்டு நைவேத்தியம் செய்யுங்கள். காகத்துக்கு வழங்குங்கள்.

ஐந்து பேருக்கு, தயிர்சாதமோ வேறு ஏதேனும் உணவோ வழங்குங்கள். தெருவோரத்தில் வசிப்பவர்களுக்கு போர்வையோ சால்வையோ வழங்குங்கள். காலணி வாங்கிக் கொடுங்கள். முன்னோர்களின் பெயரைச் சொல்லி, அவர்களை நினைத்து நீங்கள் செய்யும் செயலானது, உங்களை மும்முடங்கு பலன்களுடன் வாழச் செய்யும். வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் நிறைந்திருக்க அருளுவார்கள்.

மகாளய பட்ச காலம்... துவாதசி திதி... முன்னோர் வழிபாடு. மறந்துவிடாதீர்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in