

ராகு - கேதுவின் தாக்கத்தில் இருந்து விடுபட கருடாழ்வாரை வணங்கி வழிபடுங்கள்.
நவக்கிரகங்களில், மூன்று பெயர்ச்சிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. குருப் பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு - கேது பெயர்ச்சி ஆகியவை முக்கியமானதொரு நிகழ்வாக ஜோதிட சாஸ்திரம் தெரிவிக்கிறது.
குருப்பெயர்ச்சி முக்கியம் என்றும் சனிப்பெயர்ச்சி ரொம்பவே முக்கியம் என்றெல்லாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். உண்மையில், ராகு - கேதுவின் பெயர்ச்சியே அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகச் சொல்கிறார்கள் ஜோதிடர்கள்.
ராகு - கேதுவின் சஞ்சாரத்தைக் கொண்டு, குருவின் பலமும் சனீஸ்வரரின் பலமும் சொல்லப்படுகிறது என்கிறார்கள்.
ராகு - கேது பெயர்ச்சி, கடந்த சிலநாட்களுக்கு முன்பு நடைபெற்றது. ராகு - கேதுவின் தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு, சர்ப்ப தோஷத்தில் இருந்து விடுபடுவதற்கு, புற்று உள்ள கோயில்களில் வழிபாடு செய்வது மிக மிக அவசியம்.
ராகுகால வேளையில், நவக்கிரகத்துக்கு விளக்கேற்றி, வலம் வந்து வேண்டிக்கொள்வது நல்ல பலன்களைத் தரும்.
அதேபோல், ராகு ஸ்தலத்துக்குச் சென்று வழிபடுவதும் கேது பகவான் ஸ்தலத்துக்குச் சென்று வணங்குவதும் ராகுவும் கேதுவும் இணைந்த திருப்பாம்புரம் தலத்துக்குச் சென்று பிரார்த்தனை செய்வது சர்ப்ப தோஷம் முதலான தோஷங்களில் இருந்து விடுவிக்கும் என்பது ஐதீகம்.
முக்கியமாக, ராகு - கேது தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு கருடாழ்வாரை வணங்கச் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். எல்லா பெருமாள் கோயில்களிலும் பெருமாள் சந்நிதிக்கு எதிரில் கருடாழ்வார் சந்நிதி இருக்கும். பெருமாளையே பார்த்துக்கொண்டு, கரங்களைக் கூப்பிய நிலையில் இருப்பார் கருடாழ்வார்.
கருடாழ்வாரை வணங்கி வந்தால், சகல தோஷங்களில் இருந்தும் கிரக தோஷங்களில் இருந்தும் விடுபடலாம். சனிக்கிழமைகளில் பெருமாள் கோயிலுக்குச் சென்று பெருமாளையும் தாயாரையும் வணங்கி வழிபடுங்கள். முக்கியமாக, கருடாழ்வாரிடம் உங்கள் கோரிக்கைகளை முன்வைத்து பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள்.
வளமுடனும் நலமுடனும் சகல ஐஸ்வர்யங்களுடனும் வாழச் செய்வார் கருடாழ்வார்.