மகாளயபட்சத்தின் முக்கியமான நாள்  மகாவியதிபாதம்; முன்னோர்களை அவசியம் வழிபடுங்கள்! 

மகாளயபட்சத்தின் முக்கியமான நாள்  மகாவியதிபாதம்; முன்னோர்களை அவசியம் வழிபடுங்கள்! 
Updated on
2 min read

மகாளயபட்ச காலத்தில், மிக முக்கியமான நாளாக மகாவியதிபாதம் என்று சொல்கிறது சாஸ்திரம். நாளை சனிக்கிழமை 12ம் தேதி மகாவியதிபாதம். முன்னோர்களை இதுவரை சரிவர வணங்காதவர்கள் கூட நாளைய தினம் வழிபட்டால், இதுவரை வழிபடாத தோஷங்களும் சாபங்களும் நீங்கும் என்று விவரிக்கிறது சாஸ்திரம்.
நம் எல்லோர் வாழ்விலும் நம் முன்னோரை வணங்க வேண்டும் என்பதுதான் மிக முக்கியமான கடமை. மூதாதையர் வழிபாடு என்பதுதான் நம் குடும்பத்தை நல்லவிதமாக வழிநடத்திச் செல்லக் கூடியது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

ஒருவீட்டில் நான்கைந்து சகோதரர்கள் இருந்தாலும், அவர்களின் பெற்றோர் இறந்துவிட்டால், அந்த நான்கைந்து பேரும் அவசியம் தர்ப்பணம் செய்யவேண்டும், வருடந்தோறும் அவர்களின் திதி நாளில், சிராத்தம் செய்யவேண்டும். ‘அவர்தானே கொள்ளிவைத்தார்’, ‘எங்கள் அண்ணாதான் ஈமக்காரியங்களைச் செய்தார்’ என்பதெல்லாம் இதில் அடங்காது. யார் கொள்ளி வைத்திருந்தாலும் யார் ஈமக்காரியங்களைச் செய்திருந்தாலும் இறந்து ஒருவருடத்துக்குப் பின்னர், வருடந்தோறும் சிராத்த திதி, தமிழ் மாதப் பிறப்பின் போது தர்ப்பணம், கிரகண கால தர்ப்பணம், அமாவாசை தர்ப்பணம் என்று அத்தனை சகோதரர்களும் செய்யவேண்டும். அப்படி ஒருவர் செய்யாவிட்டாலும் கூட, ஆத்மா அமைதி பெறாது என வலியுறுத்துகின்றனர் ஆச்சார்யர்கள்.

மாதந்தோறும் அமாவாசை, தமிழ் மாதப் பிறப்பு, கிரகண காலம் என வருடத்துக்கு 96 தர்ப்பணங்கள் உள்ளன. அதாவது வருடத்துக்கு 96 தர்ப்பணங்களைச் செய்யவேண்டும். அதாவது 96 முறை முன்னோர்களை வணங்கவேண்டும் என்கிறது சாஸ்திரம்.

தை அமாவாசை, ஆடி அமாவாசை என்பது அந்த நாளில், அந்தவொரு நாளில் செய்யப்படும் தர்ப்பணம். ஆனால் இவற்றையெல்லாம் விட மிக முக்கியமானது புரட்டாசி மகாளய அமாவாசை. அதற்குக் காரணம்... அமாவாசைக்கும் முந்தைய பெளர்ணமிக்கும் இடையே உள்ள 15 நாட்களும் மகாளயபட்ச காலம் எனப்படுகிறது. இந்த பதினைந்து நாட்களும் தினமும் தர்ப்பணம் செய்து முன்னோரை வணங்கவேண்டும் என அறிவுறுத்துகிறது சாஸ்திரம்.

பூலோகம், தேவலோகம் போல் பித்ரு லோகமும் உண்டு. பூலோகத்தில் வாழ்ந்து இறந்துவிட்ட முன்னோர்கள், பித்ரு லோகத்துக்குச் செல்கிறார்கள் என்றும் அவர்கள் மகாளயபட்ச காலமான பதினைந்து நாட்களும் பூலோகத்துக்கு வருகிறார்கள், நம் வீட்டுக்கு வருகிறார்கள் என்று விவரிக்கிறது தர்ம சாஸ்திரம்.

மகாளயபட்சம் என்பது கடந்த செப்டம்பர் மாதம் 2ம் தேதி தொடங்கியது. இந்த பதினைந்து நாளும் தினமும் தர்ப்பணம் செய்யவேண்டும். அப்படி இயலாதவர்கள் ஏதேனும் ஒருநாளிலாவது தர்ப்பணம் செய்யவேண்டும். அதிலும் குறிப்பாக, மகாபரணி என்று சொல்லப்படும் நாளிலும் மகாவியதிபாதம் நாளிலும் கஜச்சாயை நாளிலும் அவசியம் நம்முடைய முன்னோர்களை வணங்கவேண்டும் என்கிறார்கள்.

இரண்டுநாட்களுக்கு முன்பு மகாபரணி முடிந்துவிட்டது. மகாளயபட்சத்தின் முக்கியமான நாளான மகாவியதிபாதம் நாளைய தினம் 12ம் தேதி சனிக்கிழமை வருகிறது. மிக முக்கியமான நாள். அவசியம் நம் முன்னோர்களை வணங்கக் கூடிய நாள். இதுவரை வருடந்தோறும் சரிவர, ஒழுங்காக, முறையே செய்யாவிட்டாலும் கூட நாளைய தினமும் புரட்டாசி மகாளய பட்ச அமாவாசை தினத்திலும் எக்காரணம் கொண்டும் முன்னோர் ஆராதனையைச் செய்யாமல் இருக்காதீர்கள்.

பொதுவாகவே, இந்த பதினைந்து நாட்களும், யார் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் தர்ப்பணம் செய்யலாம். அதாவது தாய் - தந்தை இல்லாதவர்கள், எவருக்கு வேண்டுமானாலும் தர்ப்பணம் செய்யலாம்.

நாளைய தினமான மகாவியதிபாத நாளில், அவசியம் முன்னோருக்கு தர்ப்பணம் செய்யுங்கள். எள்ளும் தண்ணீரும் விடுங்கள். இறந்தவர்களின் பெயர்களைச் சொல்லி, மூன்று முறை எள்ளும் தண்ணீரும் விடுங்கள். வீட்டில் உள்ள முன்னோர் படங்களுக்கு தீப தூப ஆராதனை செய்யுங்கள். அவர்களுக்கு படையலிட்டு வேண்டிக்கொள்ளுங்கள்.

இதுவரை சரிவர தர்ப்பணம் செய்யவில்லை, சிராத்தம் கடைப்பிடிக்கவில்லை என்று வருந்திக்கொண்டிருப்பவர்கள் கூட நாளைய தினம் செய்யப்படும் தர்ப்பண வழிபாட்டால், முன்னோர்களின் ஆத்மாக்கள் குளிர்ந்து போய்விடுகிறது என்றும் இதுவரை தர்ப்பணம் செய்யாத தோஷம் அனைத்தும் விலகும், சாபம் அனைத்தும் நீங்கும் என்றும் தெரிவிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

மகாளயபட்சத்தின் மகாவியதிபாத நாளில், முன்னோரை ஆராதிப்போம். நம்மை முன்னுக்கு வரச்செய்வார்கள் முன்னோர்கள்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in