

சாமுண்டீஸ்வரி எனும் திருநாமத்துடன் அம்பாள் குடிகொண்டிருக்கும் கோயில்கள் அரிதினும் அரிது. அதிலும் தமிழகத்தில் புராதனமான கோயிலில் சாமுண்டீஸ்வரி என்ற பெயரில் அம்பாள் குடிகொண்டிருக்கும் ஆலயம்... ஒன்று உள்ளது. சோழ தேசத்தில், பூவனூர் எனும் கிராமத்தில் அழகிய ஆலயத்தில் இருந்துகொண்டு ஆட்சி செய்கிறாள் சாமுண்டீஸ்வரி.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் - மன்னார்குடி சாலையில் சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பூவனூர் கிராமம். திருப்பூவனூர் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கே உள்ள ஆலயத்தில், சிவனாரின் திருநாமம் - ஸ்ரீசதுரங்க வல்லப நாதர். புஷ்பவனநாதர் எனும் பெயரும் உண்டு.
இந்தத் தலத்தின் விசேஷம்... இரண்டு அம்பாள் சந்நிதிகள் இருக்கின்றன. ஸ்ரீகற்பகவல்லி. ஸ்ரீராஜராஜேஸ்வரி. முக்கியமாக... இந்தத் தலத்தில்தான் தன் அருளாட்சியை நடத்திக் கொண்டிருக்கிறாள் ஸ்ரீசாமுண்டீஸ்வரி. ஆக இந்தத் தலத்தில் மூன்று அம்பிகைகள்.
புராண - புராதனப் பெருமை கொண்ட அற்புதமான ஆலயம். இங்கே, சூலமேந்திய படி, உருட்டும் விழியால் உலகைப் பார்த்தபடி தன்னை நாடி வருவோருக்கெல்லாம் அருள்மழை பொழிந்துகொண்டிருக்கிறாள் சாமுண்டீஸ்வரி.
இந்தத் தலத்தின் ஷீர புஷ்கரணி தீர்த்தமும் விசேஷமாகப் போற்றப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம். தேவாரப் பாடல் பெற்ற 103வது திருத்தலம் இது. பார்வதிதேவியுடன் சிவனார் சதுரங்கம் விளையாடி, தன் திருவிளையாடலை நிகழ்த்திய திருத்தலம். இதனால்தான் சிவனாருக்கு சதுரங்க வல்லபநாதர் என்றே திருநாமம் அமைந்தது.
அதாவது, 64 சதுரங்கக் கட்டங்களைச் சொல்லும் விதமாக 64 கலைகளைச் சொல்லும் விதமாக சிவனார் உமையவள் ரூபமாக உணர்த்திய திருத்தலம் இது.
இன்னுமொரு பெருமையும் இந்தத் தலத்துக்கு உண்டு.
64 விதமான கனிகள், காய்கறிகள், பூக்கள், தானியங்கள், சமித்துகள் கொண்டு, மகரிஷிகள் பலரும் அம்பிகையை ஆராதித்து, பூஜித்த ஒப்பற்ற திருத்தலம் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.
சாமுண்டீஸ்வரி, சக்தி வாய்ந்தவள். கருணையே உருவானவள். நல்லவர்களை வாழச் செய்பவள். எதிர்ப்புகளை தவிடுபொடியாக்குபவள். தீயசக்திகளை தயவுதாட்சண்யமில்லாமல் அழித்தொழிப்பவள். தன்னை நினைப்போருக்கு பக்கத்துணையாக இருந்து அருள்பாலிப்பவள் என்று கொண்டாடுகின்றனர் பக்தர்கள்.