Last Updated : 11 Sep, 2020 09:28 AM

 

Published : 11 Sep 2020 09:28 AM
Last Updated : 11 Sep 2020 09:28 AM

தீயசக்தியை விரட்டுவாள் சமயபுரத்தாள்; ஒருரூபாய் முடிந்து வைத்து வழிபடுங்கள்!

சக்தி வாய்ந்த சமயபுரத்தாளை வேண்டுங்கள். தீயசக்தியிடம் இருந்தும் கொடிய நோய்களிலிருந்தும் காத்தருள்வாய் என்று அம்மனுக்கு மஞ்சள் துணியில் ஒருரூபாய் முடிந்துவைத்து வேண்டிக்கொள்ளுங்கள்.

துக்கமும் துயரமும் கொண்டு தவிப்பர்வகளுக்கெல்லாம் ஆதரவுக்கரம் நீட்டும் அன்னை சமயபுரத்தாள். தன் சந்நிதியில் கண்ணீருடன் வருபவர்களைக் கண்டு நம் அம்மாவைப் போல், சடுதியில் வந்து துடைத்துவிடுகிற பரோபகாரி.

சக்தி பீடங்களுக்கெல்லாம் தலைவியாக காஞ்சி காமாட்சி திகழ்கிறாள். என்றாலும் அபயக்கரம் நீட்டுகிற சக்தி பீடமாகவே திகழ்கிறது திருச்சி சமயபுரம் திருக்கோயில்.
விரதம், சாஸ்திரம், ஸ்லோகம், மந்திரம் என சகலத்துக்கும் அப்பாற்பட்டு வீற்றிருக்கிறாள் சமயபுரம் மாரியம்மன். தமிழகத்தில் மாரியம்மன் எனும் பெயரில் எத்தனையோ கோயில்களில் கொலுவிருக்கிறாள் அன்னை. ஆனாலும் மாரியம்மன் கோயில்களுக்கெல்லாம் தலைவி, சமயபுரத்தாள்தான் என்கின்றனர் பக்தர்கள்.

எடுக்கின்ற காரியம் தடைப்பட்டுக் கொண்டே இருக்கிறதே என்று தவிப்பவர்கள், ஒருமுறை சமயபுரம் சந்நிதியில் மாரியம்மனிடம் முறையிட்டு வந்தால் போதும்... தடைகளையெல்லாம் தகர்த்து நம்மை காரியங்களில் வெற்றி பெறச் செய்வாள்.

திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை என சுற்றுவட்டார மக்களிடம் கேட்டால்... ‘சமயபுரத்தாதான் நீதிபதி’ என்பார்கள். வாய்க்கால் வரப்பு தகராறில் இருந்து அங்காளி பங்காளி தகராறு வரை, சொத்துப் பிரச்சினையில் சுமுகமான தீர்வு ஏற்படாமல் இருக்கிறதே என்று குமுறுபவர்கள், சமயபுரத்தாளுக்கு உப்பும் மிளகும் காணிக்கையாகச் செலுத்தி வேண்டிக்கொள்வார்கள். ஒரு நீதிபதியாக இருந்து அருள்வழங்கும் தர்மத்தலைவி எனப் போற்றுகின்றனர் பக்தர்கள்.

கண்ணில் பிரச்சினை, கைகால் குடைச்சல், நெஞ்சுப் பகுதியில் வலி, குழந்தை பாக்கியம் இல்லை என்று நோயாலும் புத்திர பாக்கியம் வேண்டியும் கண்ணீர் விடுபவர்கள், திருச்சி சமயபுரத்துக்கு வந்து, உடலில் எந்த பாகத்தில் பிரச்சினையோ... அந்த உருவத்தை காணிக்கையாகச் செலுத்தி வேண்டிக்கொண்டால்... விரைவில் குணமாகும். தீராத நோயும் தீரும் என்பது ஐதீகம்.

மாரியம்மனுக்கு மாவிளக்கு வழிபாடு செய்தும் வேண்டிக்கொள்வார்கள். வீட்டில் திருஷ்டி பட்டிருக்கிறது என்று நினைப்பவர்கள், சமயபுரத்தாளுக்கு மஞ்சள் துணியில் ஒரு ரூபாய் முடிந்துவைத்து வேண்டிக்கொண்டால் போதும்... திருஷ்டியையெல்லாம் கழித்து விடுவாள். தீயசக்திகளை விரட்டியடிப்பாள். பிரார்த்தனை நிறைவேறியதும், சமயபுரத்தாளுக்கு மஞ்சள் துணி காசை உண்டியலில் செலுத்துங்கள். அம்மனுக்கு ஒரு புடவை வாங்கிக் கொடுங்கள்.

உங்கள் வம்சத்தை, வாழையடி வாழையாக வளரச் செய்வாள். செழிக்கச் செய்வாள். உங்கள் வீட்டின் எல்லையம்மானவே திகழ்ந்து காப்பாள் சமயபுரம் மாரியம்மன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x