

நம் எல்லோரையும் காக்கும் தெய்வம் என்றும் தீயசக்திகள் எதையும் நம்மிடம் அண்டவிடாமல் காப்பவர் என்றும் காலபைரவரைச் சொல்வார்கள். அதனால்தான் கலியுகத்துக்கு காலபைரவர் என்றே சொல்லி வைத்திருக்கிறார்கள்.
கடுமையான கிரக தோஷம் உள்ளவர்கள், பைரவ வழிபாடு செய்தால், கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம் என்பது ஐதீகம். எவராலும் தீர்க்க முடியாத பிரச்சினைகளை பைரவர் தீர்த்துவைப்பார் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
முக்கியமாக, பைரவரின் திருமேனிக்குள் பனிரெண்டு ராசிகளும் அடங்கியுள்ளன என்கின்றன ஞானநூல்கள்.
மேஷம் - பைரவரின் தலை என்பார்கள். ரிஷபம் - பைரவரின் வாய் என்பார்கள். மிதுனம் - பைரவரின் கைகள் என்பார்கள்.
கடகம் - மார்பு என்றும் சிம்மம் - வயிறு என்றும் கன்னி - இடுப்பு என்றும் துலாம் - (பின்பக்கம்) பிட்டம் என்றும் விருச்சிகம் - பிறப்புறுப்பு என்றும் விவரிக்கின்றன நூல்கள்.
தனுசு ராசி - தொடைப்பகுதி என்றும் மகர ராசி - முழந்தாள் பகுதி என்றும் கும்ப ராசி - கால்களின் கீழ்ப்பகுதி என்றும் மீன ராசி - பாதங்களின் அடிப்பகுதி என்றும் விளக்குகின்றன.
ஆகவே, பைரவரை 12 ராசிக்காரர்களும் வணங்கவேண்டும் என்றும் அந்தந்த ராசிக்காரர்கள் தங்கள் ராசியை பைரவரை தரிசிக்கும் போது மனதுக்குள் சொல்லிக்கொண்டு மனதார வழிபடவேண்டும். முக்கியமாக, தேய்பிறை அஷ்டமி, பொதுவாகவே உள்ள அஷ்டமி, திங்கட்கிழமை முதலான நாட்களில், பைரவருக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது ரொம்பவே விசேஷம்.
ராசிக்கு உரிய கிரக தோஷங்கள் அனைத்தும் விலகும். தீயசக்திகள் எதுவும் நம்மை அண்டாது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
இன்று 10ம் தேதி வியாழக்கிழமை. தேய்பிறை அஷ்டமி. இந்தநாளில், பைரவரை வணங்குங்கள். பாவமெல்லாம் பறந்தோடும்.