Last Updated : 10 Sep, 2020 04:01 PM

 

Published : 10 Sep 2020 04:01 PM
Last Updated : 10 Sep 2020 04:01 PM

’குடும்பத்துக்கு உண்மையாக இருங்கள்; உங்களைத் தேடி நானே வருவேன்’; ‘நீங்கள் எனக்கு தரும் பிரசாதம் இதுதான்’ என்கிறார் சாயிபாபா! 


’’உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் அன்பாகவும் இருங்கள். உங்களைத் தேடி நானே வருவேன். நீங்கள் எனக்குத் தரும் பிரசாதம் இதுதான்’’ என்று அருளியுள்ளார் சாயிபாபா.


அன்பு என்பது வேறு பக்தி என்பது வேறு என்று நாம் பிரித்துவைத்திருக்கிறோம். அப்படியாகத்தான் உணர்ந்துகொண்டிருக்கிறோம். குடும்பத்தார் மீது வைக்கும் பிரியத்துக்கு அன்பு என்றும் இறைவன் மீது கொண்டிருக்கிற பிரியத்துக்கு பக்தி என்றும் பெயர் வைத்து பிரித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
அன்பு என்பதும் பக்தி என்பதும் ஒன்றே என்கிறார் சாயிபாபா.


‘’நீங்கள் வாலிப வயதில் ஒருபெண்ணால் ஈர்க்கப்பட்டிருந்தால், அதை காதல் என்று சொல்கிறீர்கள். அதே காதலி, மனைவியாக வந்துவிடுகிற போது அவளின் மீதும் உங்களுக்குப் பிறந்திருக்கிற குழந்தைகள் மீதும் குடும்பத்தின் மீதும் வைத்திருக்கிற காதலை, அன்பு என்று சொல்லுகிறீர்கள். பிரியம் என்று சொல்கிறீர்கள்.
அதேபோல், கடவுளின் மீதும் என் மீதும் வைத்திருக்கும் அன்புக்கு, நீங்கள் பக்தி என்று பெயர் சூட்டி அழைக்கிறீர்கள். இந்த வார்த்தைகளில்தான் வேறுபாடுகளும் மாறுபாடுகளும் இருக்கின்றன. ஆனால் எல்லாவற்றுக்குமான பொதுப் பெயர் அன்பு. எல்லாவற்றுக்குமான பொதுக்காரணம் அன்பு’’ என்கிறார் சாயிபாபா.
’’கடவுள் எல்லா உயிர்களிலும் இருக்கிறார் என்பதை நம்புகிறீர்கள். அப்படியிருக்கும் போது, குடும்பத்தில் காட்டுவது அன்பு, இறைவனிடம் செலுத்துவது பக்தி என்று உங்களால் எப்படிப் பிரித்துப் பார்க்கமுடிகிறது. உண்மையாகவும் நேர்மையாகவும் இருந்தால்தான் நீங்கள் செலுத்துகிற பக்தியை, அதாவது அன்பை கடவுள் ஏற்றுக்கொள்வார்.

நானும் அப்படித்தான். உண்மையானவர்கள் உலகில் எங்கு இருந்தாலும் அவர்களைத் தேடி நானே வந்துவிடுவேன். அவர்களுக்கு அருகில் இருந்துகொண்டு அவர்களுக்கு நலன்களைக் கொடுக்க முனைகிறேன். பொய்யாக பக்தி செய்கிறீர்கள் என்பது உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் உண்மையாக அன்பு செலுத்துபவர்கள் யார் என்பதை நான் நன்றாகவே அறிவேன்.

என் மீது பக்தி செலுத்தினால் மட்டும் போதாது. என் அன்பர்களிடமும் நீங்கள் அன்பு செலுத்தவேண்டும். என் அன்பர்கள் அனைவருமே என்னுடைய குடும்பம்தான். ‘பாபா’ என்று மனம் ஒன்றி யாரெல்லாம் அழைக்கிறார்களோ, அவர்கள் எல்லோருமே என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான்.

இந்த உலகாயத வாழ்க்கையில், உங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத்தான் நானிருக்கிறேன். உங்கள் குறைகளையும் கவலைகளையும் களைவதுதான் என்னுடைய முக்கியமான பணி’’ என்கிறார் ஷீர்டி சாயிபாபா.

’’ஆனால், என் குடும்பத்தாருக்கு உண்மையாக இல்லாமல், நேர்மையாக இல்லாமல், என் மீது நீங்கள் செலுத்துகிற அன்பை, பக்தியை ஒருபோதும் நான் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன். முதலில், நேர்மையான பக்தியுடன் என்னை அணுகுங்கள். அதற்கும் முன்னதாக நேர்மையாகவும் உண்மையாகவும் உங்கள் குடும்பத்தாரை அணுகுங்கள். உங்கள் வாழ்வில், பொய்யும்புரட்டுமாக, சூன்யத்துடன் இருந்தால், ஒருபோதும் நான் உங்களைப் பார்க்கமாட்டேன். உங்களுக்கு அருகில் வரமாட்டேன்.

உங்கள் குடும்பத்தில் எல்லோருமாக இணைந்து ‘சாயி’ என்று என் பெயரைச் சொல்லி கூப்பிடுங்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் அன்பும் பலமாக இருந்தால் அதுதான் நீங்கள் எனக்குத் தருகிற பிரசாதம். என்னுடைய அன்பர்கள் தருகிற இந்தப் பிரசாதத்துக்காகத்தான் காத்துக்கொண்டிருக்கிறேன்’’ என அருளியுள்ளார் சாயிபாபா.
பாபாவை, குடும்பமாக ஒற்றுமையுடன் இருந்து, ஒன்றாகச் சேர்ந்து ‘சாயி’ என்றும் ‘சாயிராம்’ என்றும் ‘பாபா’ என்றும் மனமொன்றி கூப்பிடுங்கள். உங்களின் குறைகளையும் கவலைகளையும் நிவர்த்தி செய்து அருளுவார் பகவான் சாயிபாபா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x