

மகாளயபட்ச காலத்தில் வரும் புதன்கிழமையில், முன்னோர் படங்களுக்கு துளசி சார்த்தி வேண்டிக்கொள்ளுங்கள். பித்ருக்களின் ஆசியும் அருளும் கிடைக்கப்பெறுவீர்கள்.
மகாளய பட்ச புண்ணியகாலம் என்பது பித்ருக்களுக்கான காலம். முன்னோர்களுக்கான காலம். முன்னோர்களை நினைத்து அவர்களை ஆராதித்து, அவர்களுக்கு தர்ப்பணம் செய்து, அவர்களை ஆத்மார்த்தமாக வழிபடக் கூடிய காலம்.
பட்சம் என்றால் பதினைந்து என்று அர்த்தம். மகாளய பட்சம் என்றால் முன்னொர்களுக்கான பதினைந்து நாட்கள். இந்த பதினைந்து நாட்களும் எவரொருவர் தினமும் முன்னோர்களை வழிபாடு செய்கிறார்களோ அவர்கள் வீட்டுக்கு வந்து பார்க்கிற முன்னோர்கள், குளிர்ந்து போவார்களாம்.
பதினைந்து நாட்களும் முன்னோர் ஆராதனை, அவர்களுக்கு எள்ளும் தண்ணீரும் விட்டு தர்ப்பணம், நம்முடைய முன்னோரை நினைத்து ஏதேனும் தானம் என்று செயல்பட்டு வந்தால், எந்த முன்னோரால் இடப்பட்ட பித்ரு சாபமானது விமோசனம் பெறும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
மேலும், நம் வீட்டில் சுபநிகழ்வுகள் ஏதும் நடக்காமல் தடைப்பட்டுக்கொண்டே இருக்கலாம். வீடு வாங்க இடம் வாங்கிப் போட்டும் வீடு கட்ட முடியாமல் இடர்பாடுகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கலாம். எவ்வளவு சம்பாதித்தும் நாலுகாசு சேமிக்கமுடியவில்லையே என்று மனம் வருந்திக்கொண்டிருக்கலாம். தொடர்ந்து, மகாளயபட்ச காலத்தில் முன்னோர் ஆராதனை செய்து வந்தால், சகல தடைகளும் நீங்கும் என்றும் வீட்டில் சுபநிகழ்வுகள் நடந்தேறும் என்றும் வீடு கட்டும் நல்ல சூழல் உருவாகும் என்றும் சேமிப்பு உயரும் என்றும் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
மகாளய பட்ச காலத்தில், புதன்கிழமையில், வீட்டில் உள்ள முன்னோர் படங்களுக்கு துளசி சார்த்தி வேண்டிக்கொள்வோம். அவர்களுக்குப் பிடித்தமான ஏதேனும் ஒரு உணவை நைவேத்தியம் செய்து காகத்துக்கு வழங்குவோம்.
நாமும் நம் சந்ததியும் ஒருகுறைவுமின்றி நிம்மதியும் நிறைவுமாக வாழ அருளுவார்கள் முன்னோர்கள் என்கிறார்கள் ஆச்\சார்யப் பெருமக்கள்.