Last Updated : 03 Sep, 2015 11:52 AM

 

Published : 03 Sep 2015 11:52 AM
Last Updated : 03 Sep 2015 11:52 AM

பக்தியைப் பரப்பும் கயிலாய வாத்தியங்கள்

கொம்பு, பிரம்ம தாளம், உடல், குட்டத்தாரை, திருச்சின்னம், நெடுந்தாரை… இதெல்லாம் என்ன?

சங்கு, ‘‘கயிலாய வாத்தியங்கள்’’ என்றனர் அதை வாசித்தவர்கள்.

கோயம்பேட்டை ஒட்டியிருக்கும் சிவன் கோயில். அங்கு ஏறக்குறைய 30 பேர் பஞ்ச வாத்தியத்தோடு இன்னும் சில வாத்தியங்களை இசைத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் சென்னை, தண்டாயார்பேட்டைப் பகுதியில் உள்ள `ஐந்தெழுத்து ஓதும் சிவனருள் தொண்டர்கள்’ எனும் அமைப்பினர். இவர்களை வழிநடத்துபவர் கே.எஸ். பாலமுருகன்.

ஆன்மிகப் பணிகள்

பிரதோஷ வழிபாடு, திருவிளக்கு பூஜை, திருவாதிரை நட்சத்திரம் அன்று 1008 தமிழ் வேத போற்றி (வில்வத்தால் அர்ச்சனை), திங்கள் கிழமைகளில் இல்லத்தில் சோமவார வழிபாடு, அமாவாசை பூஜை, பவுர்ணமி பூஜை, சங்கு முழக்கம், மகம் நட்சத்திரம் அன்று திருவாசகம் முற்றோதல், 63 நாயன்மார்கள் குரு பூஜை, உழவாரப் பணி, கயிலாய வாத்தியம் இசைப்பது போன்ற இறைப் பணிகளை ஆலயங்களில் செய்துவருகிறது இந்த அமைப்பு.

திருவாரூரில் கண்ட கயிலாய வாத்தியங்கள்

ஐந்து ஆண்டுகளுக்கு முன், திருவாரூரில் திருமண நிகழ்ச்சிக்குச் சென்றபோது, அங்கு நாகஸ்வரம், தவில் வாசிப்பதற்குப் பதிலாக, பஞ்சவாத்தியங்களை வாசித்ததை பாலமுருகன் பார்த்தாராம். அந்த வாத்தியங்களின் ஒலியைக் கேட்ட பிறகு, அதை வாசிப்பதற்குப் பழக வேண்டும் என்னும் உறுதி அவருக்கு ஏற்பட்டது.

“இந்த வாத்தியங்களை எங்கே தயாரிக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளவே நான் மிகவும் சிரமப்பட்டேன். பழமையான இந்த வாத்தியங்களைத் தயாரித்தவர்கள் பலரும் தயாரிப்பதை நிறுத்திவிட்டிருந்தனர். இறுதியாக புதுச்சேரி, கும்பகோணம், தஞ்சாவூர் பகுதிகளில் இந்த வாத்தியங்களை ஆர்டரின் பேரில் தயாரித்து, வாசிப்பதற்கும் பழகினேன்” என்றார்.

மாநகரப் பேருந்தில் நடத்துநராகப் பணிபுரியும் பாலமுருகனுக்கு, `புலன்களால் செய்யும் பாவத்தை இறைவனுக்குச் செய்யும் பணிவிடைகளாலேயே போக்க முடியும்’ என்னும் தெளிவு ஏற்பட்டது. உடனே ஆலயங்களில் உழவாரப் பணியைச் சில அன்பர்களுடன் சேர்ந்து செய்ய ஆரம்பித்தார். கூடவே ஆலயங்களில் பஜனை நிகழ்ச்சிகளையும் நடத்தியிருக்கிறார்.

“டோலக்கு என்னும் வாத்தியத்தை மட்டுமே வாசிக்கத் தெரிந்த எனக்கு கயிலாய வாத்தியங்களில் நான் எடுத்துக்கொண்ட பயிற்சி புதிய பக்தி அனுபவத்தைத் தந்தது. கயிலாய வாத்தியங்களை வாசிக்கும் முறையைப் பல சிவனடியார்களுக்கும் என்னுடைய குடும்பத்தினருக்கும் சொல்லிக் கொடுத்தேன். முதல் கயிலாய வாத்திய இசை நிகழ்ச்சியை எங்கள் பகுதியில் எழுந்தருளியிருக்கும் நவக்கிரக நாயகி உடனுறை பஞ்சபூதேஸ்வரர் கோயிலில் சில ஆண்டுகளுக்கு முன் நடத்தினோம். அந்த இசையால் கவரப்பட்ட அநேகம் பேர் சிவனடியார்களாக முன்வந்தனர். தற்போது 800-க்கும் மேற்பட்ட சிவனடியார்களின் ஒத்துழைப்பால் இந்தத் திருப்பணிகளை ஆலயங்களிலும் எங்களை அன்போடு அழைக்கும் அன்பர்களின் இல்லத்தில் நடக்கும் விசேஷங்களிலும் செய்துவருகிறோம்.

16 வகை தாளக்கட்டுகள்

சங்கு, கொம்பு, பிரம்ம தாளம், உடல், குட்டத்தாரை, திருச்சின்னம், நெடுந்தாரை போன்ற வாத்தியங்களை 25 முதல் 30 நபர்களைக் கொண்ட எங்கள் குழுவினர் வாசிப்பார்கள். ஒவ்வொரு விசேஷத்துக்குத் தகுந்தபடி 16 வகையான தாளக் கட்டுகளில் கயிலாய வாத்தியங்களை வாசிப்பதை முறைப்படுத்தியுள்ளோம். இதற்காக கட்டணம் எதுவும் நாங்கள் கட்டாயமாக வாங்குவதில்லை” என்றார்.

திருமுறையை சிரசில் சுமந்து நடனம்

ஆலயங்களில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யும்போதும், ஆராதனையின்போதும் இந்தக் கயிலாய வாத்தியங்களை வாசிக்கிறார்கள். இது தவிர, பிரதோஷ காலங்களில் திருவாதிரை நட்சத்திரம் வரும்போதும் 1008 தமிழ் வேத போற்றி பாராயணம் செய்து கயிலாய வாத்தியம் வாசிக்கிறார்கள்.

ஒவ்வொரு மாதமும் மக நட்சத்திரம் வரும் நாளில் திருவாசகம் முற்றோதல், மாணிக்கவாசகரை பல்லக்கில் அமர்த்தி, கயிலாய வாத்தியம் இசைத்தபடி வீதி உலா வருதல், மூன்றாம் பிறை வழிபாட்டில் கயிலாய வாத்தியங்கள் வாசித்தபடி, திருமுறையை சிரசில் வைத்துக்கொண்டு நடனம் ஆடுதல் என பக்தி இசையோடு ஆன்மிகத்தையும் பரப்புகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x