

செவ்வாய்க்கிழமையும் சஷ்டியும் கிருத்திகை விரதமும் இணைந்த அற்புதமான நன்னாளில் வெற்றிவேலைனை வணங்குவோம். கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து வழிபடுவோம். எதிர்ப்புகளை ஒழிப்பான் வேலவன். இன்னல்களில் இருந்து காத்தருள்வாள் வள்ளிமணாளன்.
செவ்வாய்க்கு அதிபதி முருகப்பெருமான். செவ்வாய்க்கிழமை என்பது முருகக் கடவுளை வணங்குவதற்கு உரிய அற்புதமான நாள். செவ்வாய்க்கிழமைகளில், முருகப்பெருமானை வணங்குவது ரொம்பவே விசேஷம்.
இந்தநாளில், முருகப்பெருமானுக்கு செவ்வரளி மலர்கள் சூட்டி, சர்க்கரைப் பொங்கல் அல்லது எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து வேண்டுவதும் ஆலயங்களில் உள்ள கந்தனின் சந்நிதியில் நின்று, மனதார பிரார்த்தனை செய்துகொள்வதும் மகத்தான பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம்.
அதேபோல், மாதந்தோறும் வருகிற சஷ்டி திதி என்பது ஞானக்குமரனுக்கு உரிய நன்னாள். இந்த நாளில், குமரனின் வேலுக்கு பாலபிஷேகம் செய்து வேண்டிக்கொள்வார்கள் பக்தர்கள். சஷ்டியில் விரதம் இருந்து முருகப் பெருமானை பிரார்த்தனை செய்தால், கேட்டதையெல்லாம் தந்தருள்வான் முத்துக்குமரன். சஷ்டி என்பது முருக வழிபாட்டுக்கான, முருக விரதத்துக்கான, முருக தரிசனத்துக்கான அற்புதமான நாள்.
இதேபோல், 27 நட்சத்திரங்களில் முருகக் கடவுளுக்கான உன்னதமான நட்சத்திரமான கிருத்திகை நட்சத்திரம் போற்றப்படுகிறது. கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவன் என்பதால், கிருத்திகை நட்சத்திரத்துக்கும் முருகப்பெருமானுக்கும் தொடர்பு உண்டு என்கிறது புராணம். அதேபோல், கந்தபெருமானுக்கு கார்த்திகேயன் என்றும் திருநாமம் அமைந்தது.
ஆகவே, கார்த்திகை நட்சத்திர நன்னாளில், மறக்காமல் தரிசனம் செய்து, முருகப்பெருமானை, சுப்ரமணியரை மனம் குளிரத் தரிசித்து பிரார்த்தித்துக் கொள்வார்கள் பக்தர்கள். கிருத்திகை விரதம் மேற்கொள்ளும் முருக பக்தர்களும் உண்டு.
ஆக, முருகப்பெருமானுக்கு உகந்த கிழமை, செவ்வாய்க்கிழமை. முருகப்பெருமானுக்கு உகந்த திதி சஷ்டி. முருகப் பெருமானுக்கு உரிய நட்சத்திரம் கார்த்திகை நட்சத்திரம். இந்த மூன்றும் இணைந்து வருவது இன்னும் மகத்துவம் மிக்க பலன்களை தந்தருளும் என்பது ஐதீகம்.
நாளைய தினம் 8ம் தேதி, செவ்வாய்க்கிழமையும் சஷ்டி திதியும் கிருத்திகையும் இணைந்துள்ள அற்புதமான நாள். நாளைய தினம், முருகப்பெருமானை தரிசியுங்கள். அருகில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று செவ்வரளி மாலை வழங்கி தரிசியுங்கள். வீட்டில் விளக்கேற்றி, முருகக் கடவுளுக்கு மாலை சார்த்தி, எலுமிச்சை சாதம் அல்லது சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்யுங்கள். கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம் பாராயணம் செய்யுங்கள்.
சக்திவேல் குமரனை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். செவ்வாய் முதலான தோஷங்களை நிவர்த்தியாகும். கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள். வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். தடைப்பட்டிருந்த மங்கலகாரியங்களையெல்லாம் நடத்தித் தந்து காத்தருள்வான் அழகு வேலவன்.