Last Updated : 24 Sep, 2015 02:53 PM

 

Published : 24 Sep 2015 02:53 PM
Last Updated : 24 Sep 2015 02:53 PM

கண்ணனைக் கண்டு கண் திறந்த ராதை

செப்.21 ராதாஷ்டமி

இறைவனை வழிபடும் பக்தனின் பல `பாவ`ங்களில் ஒன்றான ‘காதல்’ `பாவ`த்தில் கிருஷ்ணனை நேசித்து அவனுடன் ஓருயிராக இணைந்து, ராசலீலைகளில் மகிழ்ந்து, அணுவளவும் அவனை விட்டுப் பிரிய மனமின்றி வாழ்ந்த ராதாவின் பக்தி அளவிடற்கரியது. அவளே கண்ணனின் மனதைக் கொள்ளை கொண்டவள்.

பரமாத்மாவான இறைவனுடன் இரண்டறக் கலந்த ஜீவாத்மரூபிணி ராதா. அதனாலேயே அவள் பெயரைத் தன் பெயரோடு இணைத்துக் கொண்டு ‘ராதா’ கிருஷ்ணன் ஆனார், அந்தப் பரந்தாமன். கண்ணனைப் போலவே ராதா பிறந்ததும் அஷ்டமியில்தான். இந்த நன்னாள் உத்தரப் பிரதேசத்திலுள்ள ராதா பிறந்த ‘பர்சானா’ என்ற ஊரில் மிக விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது.

கோகுலத்தில் யாதவ குல அரசன் வ்ருஷபானு ஒருநாள் யமுனை நதிக்கரையில் அழகிய தாமரை மலரில் ஒரு பெண் குழந்தையைக் கண்டார். ஆர்வத்துடன் அதனை அள்ளி எடுத்து, இல்லம் சென்று தன் மனைவி கீர்த்திதாவிடம் கொடுத்தார். ஆனால் அக்குழந்தையின் கண்கள் பார்க்கும் தன்மையற்று இருந்ததை அறிந்த தம்பதியர் மன வருத்தத்தில் ஆழ்ந்தனர்.

தன் தோழியின் குழந்தையைக் காண நந்தகோபனுடனும், கண்ணனுடனும் வந்த யசோதா குழந்தைக்கு கண்பார்வை இல்லாததை அறிந்தாள். அச்சமயம் அன்னையின் கையிலிருந்து துள்ளி எட்டிப் பார்த்த கண்ணனைக் கண்டதும் ராதாவின் கண்கள் பளிச்சென்று திறந்து கொண்டதாம்.

ராதையின் கண்கள் திறந்தன

கண்ணன் பிறப்பதற்கு முன்பே பிறந்த ராதா, கண்களைத் திறந்தது கண்ணனைப் பார்த்த பின்புதானாம். கோபியர் அனைவருக்குமே கண்ணன் இனியவன் என்றாலும் ராதாவின் அன்பு மட்டுமே கண்ணனைக் கட்டிப்போட்டது.

கண்ணனும் பெரும்பாலான நேரம் ராதாவுடன் இருப்பதிலேயே மகிழ்ந்தார். உடல் கண்ணன் என்றால் அவனது உயிர் ராதா. பரமாத்மா கண்ணன். ஜீவாத்மா ராதா. பரமாத்மாவும், ஜீவாத்மாவும் இணைவதைக் குறிப்பதே ராதா கிருஷ்ண பிரேமை.

உத்தரப் பிரதேசத்தில் மதுராவுக்கு அருகில் ‘பிரம்மசரண்’ என்ற மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பர்சானா என்ற சிறிய ஊர்தான் ராதா பிறந்த இடம் என்று கருதப்படுகிறது. ராதா இங்கு ‘ராதாராணி’ என்றே குறிப்பிடப்படுகிறாள். இங்கு அமைந்துள்ள ராதாராணி ஆலயம், ராஜா பீர்சிங் என்பவரால் 1675-ம் ஆண்டு, செந்நிறக் கற்களால் மிக அழகாக உருவாக்கப்பட்டது. அருகிலேயே இக்கால இணைப்பாக பளிங்கினால் கட்டப்பட்ட ஆலயமும் உள்ளது.

ராதை வழிபாடு நடக்கும் ஆலயம்

இவ்வூர் மக்கள் ஒருவரை ஒருவர் ‘ராதே ராதே’ என்று சொல்லி பேசிக் கொள்வது, இவர்களின் ராதாபக்தியை உணர்த்துகிறது. ராதா செல்லமாக இங்கு ‘லாட்லிஜி’ என்று அழைக்கப்படுகிறாள். ராதா வழிபாடு நடைபெறும் ஒரே ஆலயம் இது மட்டுமே. ராதாஷ்டமி அன்று மட்டுமே இங்குள்ள ராதாராணியின் பாத தரிசனம் பெறலாம். மற்ற நாட்களில் பாதங்கள் மூடப்பட்டிருக்கும்.

இங்குள்ள ‘பிரேம சரோவர்’ என்ற நதிக்கரையில்தான் ராதாவும் கண்ணனும் முதலில் சந்தித்துக் கொண்டார்களாம். ராதாஷ்டமி கோகுலாஷ்டமிக்குப் பிறகு வரும் அமாவாசையைத் தொடர்ந்து வரும் அஷ்டமியில் கொண்டாடப்படுகிறது. கௌடிய வைஷ்ணவர்களின் முதல் தெய்வமாகப் போற்றப்படுகிறாள் ராதா. ராதாஷ்டமி அன்று ஏகாதசி போன்றே விரதம் இருப்பார்கள். கிருஷ்ணரைப் பல வண்ண மலர்களால் அலங்கரித்து, அன்று முழுதும் பஜனைப் பாடல்களைப் பாடித் திளைப்பர். அன்று ராதாவுக்குச் சிவப்பு வண்ண உடைகளையே அணிவிப்பர். தங்களின் பிரதான தெய்வமாகவும், காக்கும் தாயாகவும் ராதாவை அவ்வூர் மக்கள் வணங்குகின்றனர்.

ராதாவின் கிருஷ்ண பக்தியைப் பற்றிக் கூறும் வேடிக்கையான கதை ஒன்று உண்டு. ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்பு ராசலீலா வைபவத்திற்காக ராதா, பார்வதியை அழைத்திருந்தாளாம். அது பெண்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சி. பார்வதியும் மகாதேவரிடம் அனுமதி வேண்ட, சிவனோ தானும் பெண் வேடத்தில் வந்து கலந்து கொள்வேன் என்று பிடிவாதம் செய்து உடன் வந்தார். அழகிய பெண்ணாக வந்த பரமசிவனை அடையாளம் கண்டுகொண்ட கண்ணன், ராதாவுடன் தான் செய்து கொண்டிருந்த ராசலீலையிலிருந்து விலகி வந்து ஈசனை வரவேற்க, தன்னைத் தவிர்த்து வேறொரு பெண்ணுடன் கண்ணன் நடனமாடுவதைக் கண்ட ராதா கோபம் கொண்டு ஆழ்ந்த தவத்தில் அமர்ந்துவிட்டாள்.

பரமசிவன் அவளை சமாதானம் செய்து தரிசனம் கொடுத்தாராம். இதன் காரணமாக கோபிகை வடிவத்தில் வந்த ஈசன் ‘கோபிநாத் கோபேஸ்வர்’ எனப்பட்டார். காலையில் சிவலிங்கத்திற்கு பூஜையும், மாலை தினமும் சிவபெருமான் கோபி ரூபத்திலும் வழிபடப்படுகிறார்.

கண்ணனை விட்டுப் பிரியாமல் கோகுலத்திலும், பிருந்தாவனத்திலும் ஆடிப் பாடி கூடி மகிழ்ந்த ராதா, கண்ணன் மதுராவுக்குச் சென்ற பின்பு அவனையே நினைத்து அழுதாளாம். தன் கரங்களில் முகத்தைப் புதைத்து கண்ணீர் சிந்திக்கொண்டே இருந்து, சற்றும் உறங்காமல் இருந்தாள் என்று உத்தவர் ‘பிரஹ்லாத சமிதை’யில் கூறுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x