

ஒருநாள். நபிகளாரைக் காண தோழர் உமர் சென்றார்.
ஒரு சிறு குடிசையில் நபிகளார் வசித்து வந்தார்.
களிமண் சாந்தால் கட்டப்பட்ட சுற்றுச்சுவர்கள். மேலே பேரீச்சம் கீற்றுகளால் வேயப்பட்ட கூரை. கட்டாந்தரை. இதுதான் நபிகளாரின் வீடு.
குடிசையின் வாசல் ஓரத்தில் உமர் நின்றார். முகமன் சொன்னார்.
“உள்ளே வாருங்கள் உமரே!” என்று வீட்டுக்குள் நபிகள் அழைத்தார்.
சிறிய வாசல் கொண்ட அந்தக் குடிசையில் குனிந்து நுழைந்த உமர் தரையில் அமர்ந்தார். சுற்றி நோட்டம் விட்டார்.
உள்ளே மெத்தை ஏதும் இல்லை. ஒரு சிறிய பாய் மட்டும் இருந்தது. அதில்தான் நபிகளார் பாதி உடல் தரையிலும், பாதி உடல் பாயிலுமாய் படுத்திருந்தார். பாயின் கோரைகளின் அழுத்தம் நபிகளாரின் முதுகில் வரிவரியாய் பதிந்திருந்தன. உடலில் ஒரு முரட்டு ஆடை இருந்தது. ஒரு மூலையில் கொஞ்சம் பெர்ரி இலைகளும், ஒரு துடைப்பமும் இருந்தன. சுவரில் தைக்கப்படாத தோலாடை ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது.
இதைக் கண்ட உமரின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.
நபிகளாரின் முகத்தில் புன்முறுவல் இழையோடியது. கனிவுடன் உமரை நோக்கினார்.
“உமரே! நானும் இந்த உலகின் சுகபோகங்களையும், ஆடம்பரங்களையும் அனுபவிக்கலாம்தான்! உலகின் அரசர்கள் எல்லோரும் தங்கள் பங்கிற்கான இன்பங்களை இங்கேயே அனுபவிக்கிறார்கள். ஆனால், இவ்வுலகை விட்டுப் பிரிந்து செல்லும்போது, மரணத்திற்குப் பின் எதிர் படவிருக்கும் மறுமை உலகில் அவர்கள் பங்கு ஏதுமில்லை. வெறும் நஷ்டத்திலிருக்கும் உமரே! ஆம்..! அவர்கள் நஷ்டசாலிகளாக இருப்பார்கள்! நிலையாக நீடித்திருப்பவை மறுமை இன்பங்கள்தான் உமரே! இது உமக்கு சந்தோஷம் அளிக்கவில்லையா?” என்றார் நபி.