Last Updated : 04 Sep, 2020 10:56 AM

 

Published : 04 Sep 2020 10:56 AM
Last Updated : 04 Sep 2020 10:56 AM

அன்பையும் அருளையும் தருவாள் லலிதாம்பிகை;  கணவன் மனைவி ஒற்றுமைக்கு எளிய மந்திரம்; எளிய வழிபாடு! 

லலிதாம்பிகையை மனதார வழிபட்டால், இதுவரை வீட்டில் தடைப்பட்டிருந்த மங்கல காரியங்களையெல்லாம் நடத்தித் தந்தருள்வாள். கடன் தொல்லையில் இருந்து நம்மை மீளச் செய்வாள். கணவன் மனைவி இடையே ஒற்றுமையையும் அன்பையும் பலப்படுத்தி அருள்வாள் லலிதாம்பிகை.

உலகின் எல்லா பெண் தெய்வங்களும் சக்தி என்றுதான் அழைக்கப்படுகிறார்கள். சக்தி இல்லையேல் சிவமே இல்லை என விவரிக்கிறது புராணம். சிவத்துக்கே சக்தியாகத் திகழ்பவள் பராசக்தி. உலகின் எல்லா ஆற்றலுக்கும் காரணகர்த்தாவாகவும் கிரியா ஊக்கியாகவும் இருந்து செயல்படச் செய்யும் சக்தி, பெண் தெய்வங்களுக்கு உண்டு.
ஒரு வீட்டில், பெண்ணின்றி எதுவும் அசையாது. எந்தவொரு இல்லத்தில் பெண் ஆராதிக்கப்படுகிறாளோ, அந்த வீடு சுபிட்சம் பெறும். அங்கே அம்பாள் மனமுவந்து வாசம் செய்கிறாள் என்கிறது சாஸ்திரம்.

மாறாக, எந்த வீட்டில் பெண்ணின் அழுகுரல் கேட்கிறதோ, எங்கே பெண்ணுக்கு அன்பும் கரிசனமும் காட்டப்படுவதில்லையோ அங்கே சக்தியானவள், ஒருபோதும் வருவதே இல்லை என்றும் அந்த வீட்டில் எந்த சுபிட்சத்தையும் அம்பாள் தரமாட்டாள் என்றும் விவரிக்கிறார்கள் ஸாக்த உபாஸகர்கள்.

ஸாக்த வழிபாடு என்றால் சக்தி வழிபாடு என்று அர்த்தம். சிவ வழிபாடு என்பது போல், விஷ்ணு வழிபாடு என்பது போல், கெளமாரம் எனப்படும் குமார வழிபாடு முருக வழிபாடு என்பது போல், ஸாக்த வழிபாடு என்பதும் உண்டு. மேலும் ஸாக்த வழிபாடு என்பது மிக மிக வலிமையானது.

இதில், அம்பிகையை ஆராதிப்பதும், மனமுருகி வேண்டுவதும் மிகுந்த பலன்களையெல்லாம் வழங்கும் என்கிறார்கள் பக்தர்கள். இந்த அம்பிகையரில், ஸ்ரீலலிதாம்பிகை தனித்துவம் மிக்கவள்.

பெண்களின் கண்ணீரைப் பார்த்துக் கொண்டு ஒருபோதும் அமைதியாக, பாராமுகமாக இருக்கமாட்டாள். அத்தனை கருணையே உருவெனக் கொண்டவள் லலிதாம்பிகை. அதனால்தான் எந்த தேவியருக்கும் இல்லாத வகையில், லலிதா சகஸ்ரநாமம் எனும் பொக்கிஷம் நமக்கு அருளப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில், லலிதா என்று பெண் குழந்தைகளுக்கு இன்றைக்கும் பெயர் சூட்டி அழைப்பதைப் பார்க்கலாம். அம்பாளின் உருவங்களில், லலிதாம்பிகை என்பவள் பேரழகியாகவும் ஆயிரம் கோடி சூரியப் பிரகாசத்தைக் கொண்ட கண்களையும் கொண்டு, இந்த உலகைப் பார்க்கிறாள் என்கிறது ஸ்லோகம் ஒன்று.

லலிதாம்பிகைக்கு, ஆலயங்கள் மிகவும் அரிதாகவே இருக்கின்றன. சிவாலயங்களில் உள்ள அம்பிகைக்கு எத்தனையோ திருநாமங்கள் சூட்டப்பட்டிருக்கின்றன. என்னென்ன பெயர்களை அம்பாளை அழைத்து ஆராதித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் லலிதாம்பிகை எனும் திருநாமத்துடன் அம்பிகை கோயில்கொண்டிருப்பது, திருமீயச்சூர் திருத்தலத்தில்தான்.

மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில், பேரளத்துக்கு அருகிலுள்ளது திருமீயச்சூர். அழகிய இந்த ஆலயத்தில்தான், லலிதாம்பிகை கோயில் கொண்டிருக்கிறாள். லலிதாம்பிகை கோயில் கொண்டிருக்கும் இந்தத் தலத்தில்தான், ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் நமக்கு அருளக் கிடைத்திருக்கிறது என விவரிக்கிறது ஸ்தல புராணம்.

லலிதாம்பிகையை எவரொருவர் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, அவளின் திருவடிகளைச் சரணடைந்து, வணங்கி வருகிறார்களோ... அவர்களின் அனைத்து குறைகளையும் களைந்தெடுத்து அருளுவாள். சகல செளபாக்கியங்களையும் வழங்கிக் காப்பாள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

‘ஓம் லலிதாம்பிகாய நமஹ’

இந்த ஒற்றை வரி மந்திரத்தை தினமும் சொல்லி வாருங்கள். வெள்ளிக்கிழமைகளில் காலையும் மாலையும் சொல்லி வழிபடுங்கள். அதேபோல், வீட்டில் விளக்கேற்றுங்கள். கோயிலில் அம்பாள் சந்நிதியில் விளக்கேற்றுங்கள். விளக்கேற்றி, இந்த மந்திரத்தை 108 முறை ஜபித்து வேண்டிக் கொள்ளுங்கள்.

சகல செளபாக்கியங்களும் கிடைக்கப் பெறுவீர்கள். குறிப்பாக, பெண்கள் இந்த மந்திரத்தைச் சொல்லச் சொல்ல, பிரிந்த கணவன் விரைவில் மனம் மாறி வந்து சேருவார். குடும்பத்தில் இதுவரை இருந்த அழுகையும் கவலையும் துடைக்கப்படும் .இல்லத்தில் இருந்த தரித்திர நிலையை மாற்றி அருளுவாள் லலிதாம்பிகை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x